'சட்டமன்ற தேர்தலில் போட்டியிடச் சொன்னால் என்ன செய்வேன் தெரியுமா?'- சுரேஷ் கோபி ச...
கத்தார் எரிவாயு முனையம் மீது தாக்குதல்: உலகளவில் எகிறும் எரிசக்தி விலை - இந்தியாவிற்கு நெருக்கடி!
அமெரிக்க - இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க சொத்துக்கள் மற்றும் எரிசக்தி நிலையங்களை ஈரான் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக கத்தாரின் மிகப்பெரிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) உற்பத்தி மையமான 'ராஸ் லாஃபான்' (Ras Laffan) மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியிருக்கிறது. உலகின் மிகப்பெரிய எல்.என்.ஜி உற்பத்தி தளமான இங்கு தாக்குதல் நடத்தப்பட்டதன் விளைவாக, அதன் உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ரஷ்யாவிற்கு இணையாக உலகின் முன்னணி எல்.என்.ஜி உற்பத்தியாளராக கத்தார் திகழ்கிறது. மார்ச் முதல் வாரத்தில் கத்தாரின் எரிவாயு வயல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளரான QatarEnergy தனது உற்பத்தியை நிறுத்தி வைத்திருந்தது. உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு இருப்பைக் கொண்ட ஈரானின் 'தெற்கு பார்ஸ்' (South Pars) வயல் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாகவே, ஈரான் இந்தத் தாக்குதல்களை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதன் விளைவாக, உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்தி தற்போது போர்க்களமாக மாறியுள்ளது.
பிப்ரவரி 28 அன்று தொடங்கிய இந்தப் போரில், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் ஈரானின் உளவுத்துறைத் தலைவர் இஸ்மாயில் காதிப் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களைக் கொன்றுள்ளன. இதற்குப் பதிலடியாக ஈரான் தனது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் மூலம் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தை முடக்கி வருகிறது. தற்போது மூன்றாவது வாரமாக நீடிக்கும் இந்தப் போரினால், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல முடியாமல் சுமார் 700-க்கும் மேற்பட்ட சரக்குக் கப்பல்கள் மதிய கிழக்கு நாடுகளின் துறைமுகங்களுக்கு அருகிலுள்ள பாதுகாப்பான பகுதிகளில் முடங்கிக் கிடக்கின்றன. இது எரிசக்தி விலையை வரலாறு காணாத அளவில் உயர்த்தியுள்ளது.

இந்தச் சூழல் இந்தியாவிற்கு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா தனது இயற்கை எரிவாயு தேவையில் சுமார் 50 சதவீதத்தை சர்வதேசச் சந்தையிலிருந்தே இறக்குமதி செய்கிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்தியாவின் மொத்த எல்.என்.ஜி இறக்குமதியில் 40 சதவீதம் கத்தாரிலிருந்து மட்டுமே வருகிறது. அதாவது இந்தியாவின் ஒட்டுமொத்த இயற்கை எரிவாயு தேவையில் 20 சதவீதம் கத்தாரைச் சார்ந்து உள்ளது. கத்தாரில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால், இந்தியா தனது எரிவாயு நுகர்வைக் குறைக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து எரிசக்தி பொருளாதார நிபுணர் கிரீத் பாரிக் கூறுகையில், ``இந்தியா தனது எரிவாயு பயன்பாட்டை, குறிப்பாகத் தொழில் துறை மற்றும் மின்சாரத் துறையில் பெருமளவு குறைக்க வேண்டியிருக்கும்" என எச்சரித்துள்ளார். இந்தியாவின் தற்போதைய தினசரி இயற்கை எரிவாயு நுகர்வு 189 மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்ட் கியூபிக் மீட்டர் (MMSCMD) ஆகும். இதில் 97.5 MMSCMD மட்டுமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த வாரம் நிலவிய அசாதாரணமான போர்ச் சூழல் காரணமாக, இந்தியாவின் இறக்குமதியில் 47.4 MMSCMD விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைச் சமாளிக்க, பொதுத்துறை எரிவாயு நிறுவனங்கள் மாற்று நாடுகளிலிருந்து எல்.என்.ஜி-யைப் பெற அவசர ஆர்டர்களை வழங்கியுள்ளன.














