`அவரைச் சந்திக்க விரும்பியதில்லை' - தந்தையின் பெயரை பயன்படுத்தாதது குறித்து நடிக...
`ஜெகதீப் தன்கர் போல ஒரு கட்டத்தில் நீங்களும் காணாமல் போய்விடுவீர்கள்' - தேர்தல் ஆணையரை சாடும் மம்தா
தமிழ்நாடு, மேற்கு வங்கம் போன்ற சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் மாநிலங்களில் தேர்தல் ஆணையம் சிறப்பு வாக்காளர் தீவிரத் திருத்தம் (SIR) மேற்கொண்டு வருகிறது. அதே நேரம், இந்த SIR நடவடிக்கை பா.ஜ.க-வின் திட்டம் எனவும், சிறுபான்மையினர், பா.ஜ.க கட்சிக்கு எதிரானோர்களிடமிருந்து வாக்குரிமையைப் பறிக்கும் நடவடிக்கை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
குறிப்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ``தேர்தல் ஆணையம், சிறு எழுத்துப்பிழை, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான வாக்காளர்கள் போன்றவர்களை நீக்குகிறது. உயிரோடு இருப்பவர்களையும் இறந்தவர்கள் பட்டியலில் சேர்த்திருக்கிறது" என்றக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

இந்த நிலையில், தேர்தல் ஆணையத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு ஆடை அணிந்து, டெல்லியில் இருக்கும் தேர்தல் அலுவலகத்துக்குச் சென்றார். அவருடன் எம்.பி எம்.பி.க்கள் அபிஷேக் பானர்ஜி, எம்.பி கல்யாண் பானர்ஜி, தேர்தல் ஆணையம் இறந்தவர்கள் என வாக்காளர் பட்டியலிருந்து நீக்கியவர்கள் சிலர் என 15 பேர் தேர்தல் ஆணைய அலுவலகத்துக்குச் சென்றிருக்கின்றனர். அப்போது, தேர்தல் ஆணையம் ஒரு மாநில முதல்வர் என்றும் பாராமல் அலட்சியப்படுத்தியதாகக் குற்றம்சாட்டி, வெளிநடப்புச் செய்தார்.
இவ்வளவு ஆணவமான ஒரு தேர்தல் ஆணையத்தை நான் பார்த்ததே இல்லை!
இது தொடர்பாக டெல்லி தேர்தல் ஆணையத்துக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த மம்தா பானர்ஜி, ``நான் நான்கு முறை அமைச்சராகவும், ஏழு முறை எம்.பி-யாகவும் இருந்திருக்கிறேன். இவ்வளவு நீண்ட அரசியல் வாழ்க்கையில், இவ்வளவு ஆணவமான ஒரு தேர்தல் ஆணையத்தை நான் பார்த்ததே இல்லை. அவர்கள் மிகப்பெரிய பொய்யர்கள்," என்று காட்டமாகத் தெரிவித்தார்.
தேர்தல் ஆணைய அதிகாரிகளை நேரடியாக எச்சரித்த மம்தா பானர்ஜி, ``எந்தப் பதவியும் யாருக்கும் நிரந்தரம் இல்லை. ஒரு நாள் நீங்கள் இந்தப் பதவியை விட்டுச் செல்லத்தான் வேண்டும். ஆனால், ஜனநாயகத்திற்கு எதிரான இப்படி ஒரு மோசமான முன்னுதாரணத்தை உருவாக்காதீர்கள். மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநராக இருந்த ஜெகதீப் தன்கர் போல ஒரு கட்டத்தில் நீங்கள் காணாமல் போய்விடுவீர்கள். மோடியின் பயத்தில் நீங்கள் செயல்படுகிறீர்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது" என்றார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரைக் குறிப்பிட்டு, ``உங்களுக்கு வேறு என்னதான் வேண்டும்? உங்கள் மகளுக்கும், மருமகனுக்கும் மட்டும்தான் எல்லாம் கொடுக்கப்பட வேண்டுமா? உங்கள் மகளை மாவட்ட ஆட்சியராக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அரசாங்கத்தைத் தேர்வு செய்வது மக்களா அல்லது தேர்தல் ஆணையமா?" என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பினார்.
மேலும், தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் செயல்பாட்டை விமர்சித்த மம்தா, "அவர் ஒரு ஜமீன்தார் போலவும், நாங்கள் என்னவோ அவரிடம் வேலை செய்யும் வேலைக்காரர்களைப் போலவும் பேசினார். அவர்களிடம் பா.ஜ.க-வின் அதிகார சக்தி இருக்கலாம், ஆனால் எங்களிடம் மக்களின் சக்தி இருக்கிறது. நீதி தேடி அங்குச் சென்றதற்கு வருத்தப்படுகிறோம். அவர்கள் எங்களை அவமானப்படுத்திவிட்டார்கள். தேர்தல் ஆணையம் இப்போது பா.ஜ.க-வின் தரகராகச் செயல்படுகிறது. அவர்கள் மீது எனக்குத் துளியும் நம்பிக்கை இல்லை" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.












