`அவரைச் சந்திக்க விரும்பியதில்லை' - தந்தையின் பெயரை பயன்படுத்தாதது குறித்து நடிக...
`திமுக-வில் இணைவது பற்றி, இன்னும் முடிவு பண்ணல..!’ - அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோஃபர்
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்தவரும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சருமான நிலோஃபர் தி.மு.க-வில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஜோலார்பேட்டை பொன்னேரியில், வரும் 14-ம் தேதி தி.மு.க வடக்கு மண்டலத்துக்குட்பட்ட 47 தொகுதிகளின் வாக்குச்சாவடிக் குழுவினருக்கான பயற்சி மாநாடு நடைபெற உள்ளது. அதில், முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொள்கிறார். இந்த நிகழ்ச்சியின்போதுதான், முதலமைச்சர் முன்னிலையில் நிலோஃபர் தி.மு.க-வில் இணையத் திட்டமிட்டிருக்கிறாராம்.
இது பற்றிப் பேசுகிற திருப்பத்தூர் மாவட்ட ஆளும்கட்சிப் புள்ளிகள் சிலர், ``ஆம்பூர் எம்.எல்.ஏ அ.செ.வில்வநாதன் ஆட்சி முடியும் தறுவாயில், தனது சட்டமன்ற அலுவலகத்தைக் கட்டி முடித்து, கடந்த மாதம் 26-ம் தேதி மாவட்ட பொறுப்பு அமைச்சரும் தி.மு.க வடக்கு மண்டலத் தேர்தல் பொறுப்பாளருமான எ.வ.வேலுவை வரவழைத்து திறக்கச் செய்தார்.

அதைத் தொடர்ந்து, அன்றைய தினம் ஏலகிரி மலையிலுள்ள தங்கும் விடுதிக்குச் சென்ற எ.வ.வேலு, வாணியம்பாடி தொகுதி தி.மு.க நிர்வாகிகள் சிலரையும் அழைத்து பேசினார். அப்போது, `நிலோஃபர் நம் கட்சிக்கு வரேன்னு சொல்றாங்க. சேர்த்துக்கொள்ளலாமா?’ என்று கேட்டார். பதிலளித்த வாணியம்பாடி நகர நிர்வாகி ஒருவர், `அ.தி.மு.க ஆட்சி இருக்கும்போது, அந்த அம்மா என்மேல வழக்குப் போட்டு குண்டாஸ் அடிக்கப் பார்த்தாங்க. தி.மு.க-வுக்கு எதிராக வாணியம்பாடி நகரத்திலும் நிறையப் பிரசாரம் பண்ணியிருக்கிறாங்க. அப்பேர்ப்பட்டவங்க நம் கட்சிக்குத் தேவையா?’ என்றார்.
அதற்கு எ.வ.வேலு, `நிலோஃபர் இணைவதால் நமக்குப் பயனில்லை என்றாலும், அவர் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் என்ற ஒற்றைக் காரணத்தை வைத்து நாம் அரசியல் செய்யலாம். இதன் மூலம் எடப்பாடிக்கும் ஒரு மெசேஜ் சொல்ல முடியும். நிலோஃபர் வரட்டும், தேர்தல் சமயம் என்பதால் சேர்த்துக்கொள்வோம்’ என்று கூறினார்.
ஆனாலும், வாணியம்பாடி நகர தி.மு.க நிர்வாகிகளுக்கு நிலோஃபரைத் தி.மு.க-வுக்குள் சேர்ப்பதில் சுத்தமாக உடன்பாடில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்திலேயே, தி.மு.க-வில் இணைந்து வேலூர் தி.மு.க எம்.பி கதிர் ஆனந்த்துக்காக வேலைப் பார்க்கும் திட்டத்துடன் தி.மு.க பொதுச்செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகனிடம் தூது சொல்லி அனுப்பியிருந்தார் நிலோஃபர். வேலூர் எம்.பி தொகுதிக்குட்பட்ட வாணியம்பாடி நகர தி.மு.க-வில் இருந்து அப்போதும் எதிர்ப்புக் கிளம்பியதால், நிலோஃபர் தி.மு.க-வில் இணையும் முடிவில் இருந்து ஒதுங்கிக்கொண்டார். இப்போது சட்டமன்றத் தேர்தலையொட்டி, மீண்டும் தி.மு.க-வில் இணையும் திட்டத்துடன் எ.வ.வேலு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார் நிலோஃபர்.

முதலமைச்சர் கலந்துகொள்ளும் மாநாடு நிகழ்ச்சிக்கு இன்னும் 10 நாள்கள் இருக்கின்றன. அதுவரை தி.மு.க-வில் இணையும் தகவலை `சர்ப்ரைஸ்’ ஆக வைத்துக்கொள்வதற்காகத்தான் அமைதிக் காக்கிறார் நிலோஃபர். ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும் திருப்பத்தூர் மாவட்டச் செயலாளருமான கே.சி.வீரமணியுடன் நிலோஃபருக்கு இன்னமும் மோதல் நீடிக்கிறது. 2021-ல் வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் சீட் எதிர்பார்த்த நிலோஃபருக்கு சீட் கிடைக்கவிடாமல் தனது ஆதரவாளரான செந்தில்குமாரை முன்னிறுத்தி வெற்றிபெறச் செய்தார் கே.சி.வீரமணி. இந்த முறையும் அ.தி.மு.க-வில் தனக்கு சீட் கிடைக்காது. அப்படியே, அ.தி.மு.க தலைமை நினைத்தாலும், வீரமணி ஒத்துக்கொள்ள மாட்டார் என்று தெரிந்த பிறகே நிலோஃபர் தி.மு.க-வுக்குத் தாவும் முடிவை எடுத்திருக்கிறார்’’ என்கின்றனர்.
இதையடுத்து, ``முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் இணையப் போகிறீர்களா?’’ என்று முன்னாள் அமைச்சர் நிலோஃபரையே தொடர்புகொண்டு கேட்டோம். அதற்கு அவர், ``தி.மு.க-வில் இணைவது பற்றி, நான் இன்னும் முடிவு பண்ணல. யோசிக்கவும் இல்ல’’ என்று தெரிவித்துவிட்டு, அழைப்பைத் துண்டித்துவிட்டார்.












