பிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை; மும்பையில் அதிர்ச்சி!
`டயலாக் பேசிய முதல்வரே..!' - 3 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்; கண்டனம் தெரிவிக்கும் தலைவர்கள்
கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தக் கொடூரச் சம்பவத்திற்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க எம்.பி கனிமொழி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் குரல் கொடுத்திருந்தனர்.
அந்த வகையில் தற்போது அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
டயலாக் பேசிய முதல்வரே… இதுதான் அந்த மாற்றமா?
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, முட்புதரில் வீசப்பட்டு கொலை செய்யப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
தமிழகத்தில் எங்கே இருக்கிறது பெண்கள் பாதுகாப்பு?என்ன தான் செய்கிறது காவல்துறை? எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை? இதுபோன்று இன்னும் எத்தனை பெண்கள், சிறுமிகள் உங்களுடைய 6 மாத Trial Period முடியும் வரை பாதுகாப்பை இழந்து, உயிரை இழக்க வேண்டும்?
“அதிகாரிகளை நியமித்துவிட்டேன். இனிமே எல்லாம் மாறிவிடும்” என்று டயலாக் பேசிய முதல்வரே… இதுதான் அந்த மாற்றமா?
குழந்தை பாலியல் வன்கொடுமை- கொலை வழக்கில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இனியாவது Show காட்டும் அரசியலை நிறுத்திவிட்டு, Seriousness புரிந்து சட்டம் ஒழுங்கைக் காக்கும் செயல்களில் ஈடுபடுமாறு இந்த பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்" என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
'சிங்கப்பெண்கள் கட்டுப்படுத்த முடியவில்லை.!'- தமிழிசை
இதனைத்தொடர்ந்து தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் வெளியிட்டிருக்கும் பதிவில், " கும்மிடிப்பூண்டியில் மூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்டு இருக்கும் சம்பவம் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது... வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தில். . வெளி மாநிலத்தைச் சார்ந்த ஒரு குழந்தை கசக்கி வீசப்பட்டு இருப்பது வேதனை அளிக்கிறது...
தமிழக முதலமைச்சர் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பாக இருப்பேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும் வார்த்தைகள் காற்றில் பறந்து கொண்டிருக்கிறது... பிஞ்சிக் குழந்தையை கடித்து குதறும் மனித ஓநாய்களை தமிழக சிங்கப்பெண்கள் கட்டுப்படுத்த முடியவில்லை..கண்டுபிடிக்க முடியவில்லை ... என்பதை வன்மையாக கண்டிக்கிறோம். பாலியல் வன்முறைகள் தொடர்கதைகளாக ஆகி கொண்டு இருப்பது.. மிகுந்த கவலை அளிக்கிறது... தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு இந்த இரக்கம் இல்லாத மனித மிருகங்களை தண்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.
தொடர் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் ?
மேலும் அ.ம.மு.க தலைவர் டிடிவி தினகரன் வெளியிட்டிருக்கும் பதிவில், " தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் - வளர்ச்சி திட்டங்களுக்குக் கால அவகாசம் கேட்பது நியாயமாக இருக்கலாம்; ஆனால் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை அவசியம் என்பதை முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களும், அவருக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களும் எப்போது உணரப்போகிறார்கள்?
சிவகங்கையில் ஆயுதப்படை பெண் காவலர் , சங்கரன்கோவில் அருகே 10 ஆம் வகுப்பு மாணவி, ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே 9 வயது மாணவி, கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பச்சிளம் குழந்தை என கடந்த இரு தினங்களில் பாலியல் ரீதியான தொந்தரவுக்கும், வன்கொடுமைக்கும் உள்ளாக்கப்பட்டவர்கள் பட்டியல் தான் இது. இதில் கும்மிடிப்பூண்டியில் பால் மனம் மாறா பச்சிளம் குழந்தை காம வெறியர்களால் சிதைக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் குழந்தையின் சடலம் முட்புதரில் கண்டெடுக்கப்பட்டதாக வரும் செய்தி மனதை உலுக்குகிறது.

பச்சிளம் குழந்தைகளில் தொடங்கி வயதான மூதாட்டிகள் வரை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இத்தகைய குற்றச் சம்பவங்களையும், பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களையும் இன்னும் எத்தனை நாட்கள் தான் சகித்துக் கொள்ள வேண்டும் ?
பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீதான நடவடிக்கை மிகக் கடுமையானதாக இருக்கும் என கடுங்கோபத்துடன் சினிமாவில் பேசுவது போல வசனம் பேசும் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் தமிழகத்தில் அரங்கேறும் தொடர் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?" என்று காட்டமாக பதிவிட்டிருக்கிறார்.













