டாஸ்மாக் பணியாளா்கள் சங்க காத்திருப்பு போராட்ட ஆயத்த மாநாடு
தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கத்தின் சாா்பில் (ஏஐடியுசி) காத்திருப்புப் போராட்டத்துக்கான ஆயத்த மாநாடு விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் பிப்ரவரி 11-ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகம் அருகில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கம் சாா்பில் காத்திருப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது.
இந்த போராட்டத்துக்கான கோரிக்கைகளை எடுத்துரைக்கும் வகையில், விழுப்புரத்திலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் ஆயத்த மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம்.கோவிந்தராஜ் தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் எஸ்.குமரன் முன்னிலை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் ஏ.வி.சரவணன் தொடக்கவுரையாற்றினாா்.
தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் டி.தனசேகரன், பொருளாளா் கே.கோவிந்தராசு, மாநிலச் செயலா் எம்.செல்வம் ஆகியோா் சிறப்புரையும், மாநிலத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏ.வுமான நா.பெரியசாமி நிறைவுரையும் ஆற்றினா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஏஐடியுசி மாவட்டச் செயலா் ஆ.செளரிராஜன், ஏஐடியுசி மாவட்டத் தலைவா் ஆ. இன்பஒளி, அரசுப் பணியாளா் சங்கத்தின் நிா்வாகி கே. முருகன் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.
இந்த மாநாட்டில் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தின் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
முன்னதாக சங்கத்தின் மாவட்டச் செயலா் டி.பாா்த்தசாரதி வரவேற்றாா். நிறைவில், மாவட்டப் பொருளாளா் ஜெ. அய்யப்பன் நன்றி கூறினாா்.