செய்திகள் :

தஞ்சை மாவட்டம் திருவையாறு ஐயாரப்பர் கோயில்: வட கயிலாயம்... ஆயுள் விருத்திதரும் ஆட்கொண்டார் சந்நிதி!

post image

ஆரோக்கியம் அருளும் தலங்களில் முக்கியமானது திருவையாறு. தேவாரம் பாடப்பெற்ற 51-வது காவிரி வடகரைத்தலம் இது. திரு - உயர்ந்த; ஐ - அகன்ற; ஆறு - காவிரி. அகன்ற காவிரியாற்றை உடைய ஊர் ஆதலால், திருவையாறு என இந்த ஊருக்குப் பெயர்.

அதேபோல, காவிரி, குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு என ஐந்து ஆறுகள் ஓடுவதாலும் இந்தப் பெயர் வந்தது என்பர்.

ஐயாறு தலத்திற்குரிய இறைவன்... ஐயாரப்பன். 15 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த மிகப்பெரிய திருக்கோயிலில், பிருத்வி லிங்கமாய் (மண் லிங்கம்), சுயம்பு மூர்த்தியாய் கிழக்கு நோக்கி எழுந்தருளியிருக்கிறார்.

மண் லிங்கம் என்பதால் ஆவுடையாருக்கு மட்டும் அபிஷேகம் செய்யப்படுவதும், லிங்கத்திருமேனிக்கு புனுகு சாற்றப்படுவதும் இங்கு வழக்கம்.

திருவையாறு ஐயாரப்பர் கோயில்
திருவையாறு ஐயாரப்பர் கோயில்

இத்தலத்து பெருமானின் ஜடாமுடிக் கற்றைகள், பின் பிராகாரம் முழுவதும் விரிந்து கிடப்பதாக ஐதிகம் என்பதால், கருவறைச் சுற்றுப் பிராகாரத்தை எவரும் வலம் செய்வது இல்லை. அம்பிகைக்கு தர்மசம்வர்த்தனி எனும் அறம் வளர்த்த நாயகியாக எழுந்தருளியிருக்கிறார்.

இறைவனிடம் திருநாழி நெல் பெற்று 32 அறங்களையும் வளரச்செய்தமையால் இத்திருநாமம் பெற்றவள். மேலிரு திருக்கரங்களில் சங்கு, சக்கரம் தாங்கியும், முன் இடக்கரம் இடுப்பில் ஊன்றியும், வலக்கரம் அபய ஹஸ்தமாகவும் காட்சி தருகிறாள். இவள் மஹாவிஷ்ணு ரூபமாகக் காட்சியளிப்பதாக ஐதிகம்.

ஐயாரப்பரை பூஜித்திருந்த 24 ஆதி சைவர்களில் ஒருவர், காசி யாத்திரை சென்று நெடுநாள் வரவில்லை. இதனால் அவருடைய சொத்துகளை ஏனையோர் பங்கிட்டுக்கொண்டு அவருடைய குடும்பத்தினருக்குத் துன்பம் விளைவித்தனர். ஆதிசைவருடைய மனைவியும் மக்களும் ஐயாரப்பனிடம் முறையிட்டனர்.

ஈசன், காசிக்குச் சென்றவருடைய வடிவெடுத்து, கங்கை நீரும் மலரும் கொண்டு, திருவையாற்றில் தம்முடைய சிவலிங்கத்திருமேனியைத் தாமே பூஜித்தார். காணாமல்போனவர் வந்துவிட்டதைக் கண்டு உரிய சொத்துகளைத் திரும்ப அளித்தார்கள் என்பது திருவையாற்று புராணம் கூறும் செய்தி.

இதனால், வருடாந்திர சப்தஸ்தான திருவிழாவில் `ஐயாரப்பர் தம்மைத்தாமே பூசித்தல்' என்ற ஐதிக நிகழ்வு ஐந்தாம் நாள் திருவிழாவாக நிகழ்த்தப்படுகிறது.

அப்பர் பிரான், கயிலைக் காட்சியைக் காணும் பொருட்டு தன் உடல் தேய கயிலை நோக்கி உந்தி நகர்ந்தார். ஈசன் ஆணையால் அங்கிருந்த பொய்கையில் மூழ்கி, திருவையாற்றுத் தடாகத்தில் எழுந்தார். அவர் கோரிக்கைக்கேற்ப ஈசன் அவருக்குக் கயிலைக் காட்சியை அருளினார்.

எனவே, ஐயாறு தரிசனம் செய்தாலே கயிலைத் தரிசனம் செய்ததற்கு இணையான புண்ணியம் கிடைத்திடும் என்பது நம்பிக்கை. திருவையாற்றுப் பதியில், வடகயிலாயம் மற்றும் தென்கயிலாயம் என இரண்டு கயிலாயங்கள் இருப்பது கூடுதல் விசேஷம்.

திருவையாறு ஐயாரப்பர் கோயில்
திருவையாறு ஐயாரப்பர் கோயில்

தென்கயிலாயம், பஞ்சவன் மாதேவி அவர்களால் கட்டப்பெற்றதால் அதற்கு `பஞ்சவன்மாதேவிச்சுரம்' என்பது பெயர். இது சூரியபுஷ்கரணியின் தென்கரையில், வடக்கு நோக்கிய கற்கோயிலாக அமைந்துள்ளது.

இங்குள்ள மகாமண்டபத்தில் அப்பர் சுவாமிகள் தனித்த சந்நிதியில் எழுந்தருளி இருக்கிறார். இங்கு நடைபெறும் ஆடி அமாவாசைக் கயிலைக் காட்சித் திருவிழா வெகு பிரபலமானது.

வடகயிலாயம், நான்காவது திருச்சுற்றில் வடப்புறத்தில் தனிக்கோயிலை எடுப்பித்தவர் முதலாம் ராஜராஜரின் அரசியான லோகமாதேவி. எனவே, இது `லோகமாதேவிச்சுரம்’ என அழைக்கப்படுகிறது.

ஆலயத்தின் மேற்குப் பிராகாரத்தில் அமைந்துள்ளது, வேலவன் கோட்டம். இவ்விடத்தில் வள்ளி - தெய்வானை சமேதரராக எழுந்தருளியுள்ள முருகர் வில்லேந்தியவராய்க் காட்சி தருகிறார். இவருக்கு தனுசு சுப்பிரமணியர் என்பது திருநாமம். சிவலிங்கத் திருமேனி போன்றே, ஆவுடையாரில் பாணத்திற்குப் பதிலாக விநாயகர் திருமேனி அமைந்துள்ளது விசேஷம்.

திருவையாறு தலத்தில்தான் நந்திக்கு ஈஸ்வரப் பட்டத்துடன் சிவகணங்களின் தலைமைப் பதவியையும், ஆதிகுரு என்கிற தகுதியினையும் பெருமான் அளித்தார். எனவே, இத்தலத்தில் பிரதோஷ காலத்தில் வழிபடுபவருக்குத் தலைமைப் பதவி, உத்தியோக உயர்வு, ஆட்சியதிகார பலம் முதலியவைக் கிடைத்திடும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்கொண்டார் மற்றும் உய்யக் கொண்டார் எனப்படும் துவாரபாலகர்களுக்கு வடைமாலை சாத்தி வழிபாடு செய்வது இங்கு சிறப்புடையது. தெற்கு கோபுரவாயிலில் உள்ள பெரிய குண்டத்தில் எப்பொழுதும் குங்கிலியம் புகைந்து கொண்டே இருக்கும் அதிசயம் காணலாம்.

குங்கிலியம் இட்டு வழிபாடாற்றிய சசுரிதன் எனும் பக்தனின் உயிரை எமன் பறிக்க வந்தபோது, அதைத் தடுத்து ஆட்கொண்டவர் இத்தலத்து ஈசன். எனவே, பக்தர்கள் தீர்க்க ஆயுளுக்காக இங்கு குங்கிலியத்தை தூபமிட்டால் ஆயுள் கூடும் என்பது நம்பிக்கை.

திருவையாறு ஐயாரப்பர் கோயில்
திருவையாறு ஐயாரப்பர் கோயில்

ஆட்கொண்டார் சந்நிதிக்கு அருகில் உள்ள ஓலமிட்ட விநாயகர், மிகுந்த வரப்பிரசாதி. வெள்ளத்தில் அகப்பட்ட சுந்தரர் மற்றும் சேரமான் பெருமாளுக்குப் பயம் போக்கி அருளியவர். திருமகள் சிவவழிபாடு செய்த தலங்களுள் இதுவும் ஒன்று என்பதால் திருமகளுக்குத் தனி சந்நிதி உண்டு.

திருமால் வழிபட்ட சிவகுரு என்கிற சிறப்புடையவர், இத்தலத்து தட்சிணாமூர்த்தி. இவருடைய பாதங்கள் முயலகன் மீது அமையாமல், ஆமையொன்றின் மீது அமைந்திருப்பது அரிய காட்சி.

வாய்ப்பிருப்பவர்கள் வேண்டும் வரம் தரும் இத்தலத்துக்கு வந்து வழிபட்டு வளம் பெறலாமே!

திருவண்ணாமலை மாவட்டம் தென்னாங்கூர் பாண்டுரங்கன்: பண்டரிபுரம் சென்ற பலன்... திருமண வரம் கிடைக்கும்!

பகவான் விஷ்ணு பாண்டுரங்கனாகக் கோயில்கொண்டிருக்கும் தலம் பண்டரிபுரம். அந்தப் பண்டரிநாதன் தானே விரும்பி வந்து தென்னாட்டில் கோயில்கொண்ட தலம்தான் தென்னாங்கூர். காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில், வந்தவாசியிலிர... மேலும் பார்க்க

கும்பகோணம் பிளாஞ்சேரி கயிலாசநாதர் கோயில்: அச்சம் அகற்றும் அஷ்டபைரவர்; சரபசூலினி சந்நிதிகள்!

ஒரு சிலருக்குத் தீராத நடுக்கமும் பயமும் உள்ளூர இருந்துகொண்டே இருக்கும். ஒரு சிலர் பகைவர்களின் தொல்லைகளால் கஷ்டப்படுவார்கள். அப்படிப்பட்டவர்கள் வழிபாடு செய்ய வேண்டியது அஷ்ட பைரவர்களை. மேலும் தீராத வினை... மேலும் பார்க்க

வெற்றி அருளும் உள்ளகரம் ஸ்ரீவிஜயகணபதி கோயில் மகா கும்பாபிஷேகம்; ஸ்ரீவிஜயேந்திர சுவாமிகள் முன்னிலை!

சென்னை உள்ளகரம் கிருஷ்ணா நகர், திலகர் தெருவில் அமைந்திருக்கிறது பழைமையான விஜய கணபதி திருக்கோயில். இந்தப் பகுதியின் அடையாளமாகத் திகழும் இந்தக் கோயிலுக்கு மகாபெரியவர் முதலான மகான்கள் பலரும் வருகை தந்து ... மேலும் பார்க்க

முதல்வர் விஜய் வழிபட்ட கொல்லூர் மூகாம்பிகை - தங்க வாள், கஷாய பிரசாதம்.. வியக்க வைக்கும் தகவல்கள்!

முதலமைச்சர் விஜய் இன்று கர்நாடக மாநிலம், கொல்லூரில் அமைந்திருக்கும் மூகாம்பிகை கோயிலில் தரிசனம் செய்தார். மிகவும் சக்தி வாய்ந்த அம்மனாகக் கருதப்படும் அன்னை மூகாம்பிகையை வழிபட்டால் வாழ்வில் உண்டாகும் த... மேலும் பார்க்க

கரூர் மாவட்டம், தொப்பேஸ்வரர் கோயில்: கால்நடைச் செல்வங்கள் பெருகும்... தொழில் மேன்மையுறும்!

மலை மீது கோயில் கொண்டிருக்கும் ஈசனின் சந்நிதிகள் சாந்நித்தியம் நிறைந்தவை. எனவேதான் கடும்பாடுபட்டு பக்தர்கள் மலையேறி சுவாமியைத் தரிசனம் செய்கிறார்கள். அதன் மூலம் புத்துணர்ச்சி பெறுவதோடு ஆரோக்கியமும் அட... மேலும் பார்க்க

திருச்செந்தூர்: கடற்கரையில் ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்; பக்தர்கள் பாதுகாப்பாக நீராட அறிவுறுத்தல்!

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை மற்றும் விசேச நாள்களில... மேலும் பார்க்க