தமிழக நிதிநிலை அறிக்கை 2025-26: தமிழ்நாட்டில் 30 இடங்களில் முதல்வர் படைப்பகம்!
போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக அறிவார்ந்த சூழலை உருவாக்கும் வகையில் தமிழ்நாட்டில் 30 இடங்களில் முதல்வர் படைப்பகம் அமைக்கப்படும் என தமிழக அரசின் அடுத்த நிதியாண்டுக்கான (2025-26) நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலை தமிழ்நாடு எதிா்கொள்ளவுள்ள நிலையில், அதற்கு முன்பாக திமுக தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் 5 ஆவது மற்றும் கடைசி முழுமையான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
அப்போது,
மொழிக் கொள்கையில் சமரசம் இல்லை!
எவ்வித சமரசத்திற்கு இடம்தராமல் இருமொழிக் கொள்கையை தமிழ்நாடு தொடர்ந்து பின்பற்றி வருகிறது. இதன்மூலம் தமிழ் பண்பாட்டை பாதுகாப்பதோடு, ஆங்கிலத்தின் உதவியோடு, உலகை வெல்லும் ஆற்றல்களை தமிழர்கள் பெற்றிருக்கிறார்கள்.
இன்றைக்கு இந்தியாவின் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
தமிழ்நாட்டில் 30 இடங்களில் முதல்வர் படைப்பகம்
போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக அறிவார்ந்த சூழலை உருவாக்கும் வகையில், சென்னை கொளத்தூரில் அமைக்கப்பட்ட முதல்வர் படைப்பகம் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
போட்டித் தேர்வுகளுக்கான நூல்களுடன் கூடிய நூலகம், கட்டணமில்லா இணைய வசதி, குளிரூட்டப்பட்ட ஆலோசனைக் கூடங்கள் மற்றும் கணினி உள்ளிட்ட அலுவலக கட்டமைப்புடன் கூடிய Co-Working Space, புத்தொழில் முனைவோர், ஐடி பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் பயன்பெறுவது மட்டுமின்றி, தங்களின் இல்லங்களுக்கு அருகிலேயே பெண்களும் பணிபுரிந்திடும் பெரும் வாய்ப்பு முதல்வர் படைப்பகத்தின் மூலம் உருவாகும்.
முதல்வர் படைப்பகம் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், தாம்பரம் மற்றும் ஆவடி உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் 30 இடங்களில் உருவாக்கப்படும்.
அண்ணா பல்கலைகழகத்தை ஆசியாவின் தலைச்சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசையில் இடம் பெறச் செய்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறைக்கு ரூ.572 கோடி நிதி
மலையேற்ற வீரர்களின் பெருங்கனவான உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை புரியும் தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறைக்கு ரூ.572 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
பள்ளிப் பாடங்களில் சதுரங்க விளையாட்டு
இன்று உலக அரங்கில் சதுரங்க விளையாட்டின் தலைநகராக தமிழ்நாடு விளங்குகிறது. இதுவரை இரண்டு உலக சாம்பியன்கள், 31 கிராண்ட் மாஸ்டர்கள் தமிழ் மண்ணில் இருந்து உருவாகியுள்ளனர். மேலும் பல சாம்பியன்களை எதிர்காலத்தில் உருவாக்கும் வகையில், பள்ளி பாடத்திட்டத்தில் சதுரங்க விளையாட்டை சேர்த்திடும் விதமாக, உடற்கல்வி பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும்.
ரூ.11,721 கோடியில் நீரேற்று மின் திட்டங்கள்
பசுமைப் பயணத்தின் முதற்கட்டமாக வெள்ளிமலைப் பகுதியில் 1,100 மெகாவாட் திறன் மற்றும் ஆழியாறு பகுதியில் 1,800 மெகாவாட் திறன் கொண்ட நீரேற்று மின் திட்டங்கள் ரூ.11,721 கோடி முதலீட்டில் பொதுத்துறை - தனியார் பங்கேற்புடன் உருவாக்கப்படும்.
கடல்சார் வள அறக்கட்டளை உருவாக்கம்
அலையாத்திக் காடுகள் பாதுகாப்பு, நவீன மீன்பிடி நடைமுறைகள் அறிமுகம் போன்ற முக்கியப் பணிகளை மேற்கொள்ளும் வகையில், ரூ.50 கோடி மதிப்பீட்டில் கடல்சார் வள அறக்கட்டளை (Marine Resource Foundation) உருவாக்கப்படும்.
நடப்பாண்டில் கூடுதலாக 1,125 மின் பேருந்துகள்
பெருநகரங்களில் காற்றுமாசுபாட்டை குறைத்து, சுற்றுச்சூழல்களை மேம்படுத்த சென்னைக்கு 950 மின் பேருந்துகள், கோயம்புத்தூருக்கு 75 மின் பேருந்துகள், மதுரைக்கு 100 மின் பேருந்துகள் என மொத்தம் 1,125 மின் பேருந்துகள், நடப்பாண்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
சாதி பாகுபாடற்ற ஊராட்சிகளுக்கு விருது
சாதி பாகுபாடற்ற, சமூக நல்லிணக்கத்தையும், ஒற்றுமையினையும் கடைபிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து, அவர்களை கெளரவுக்கும் வகையில், 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி ஊக்கத்தொகையுடன் சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருதுகள் வழங்கப்படும்.