செய்திகள் :

தமிழே உயிரே : இந்தி ‘நெவர்’... இங்கிலீஷ் ‘எவர்’ - தமிழனின் வெற்றி! | மொழிப்போரின் வீர வரலாறு – 3

post image

 ‘குண்டுக்கஞ்சோம் வடவர்கள் கூட்டுக்கஞ்சோம் பலபல குண்டர்க்காம் செய்தித்தாள் கூற்றுக்கஞ்சோம் அண்டிற்றா இந்நாட்டில் அயலானின் இந்திமொழி? அண்டைப்புழு மாந்திடுமென்று அதிராயோ முரசே!’ – என்று அஞ்சாமை முழங்குகிறார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.

இது நியாயமில்லை!

நாட்டின் சுதந்திரத்துக்கு முன்பு, 1937-ம்ஆண்டு கட்டாய இந்திக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்த பிறகு, 1950-ல் மீண்டும் ஓர் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்கியது. காரணம், சென்னை மாகாண கல்வியமைச்சராக இருந்த மாதவ மேனன், உயர்நிலைப் பள்ளிகளில் மீண்டும் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கும் ஆணை ஒன்றை 1950-ம் ஆண்டு மே 2-ம் தேதி பிறப்பித்தார்.

அதற்கு, தமிழகம் முழுவதும் கண்டனம் எழுந்தது. கட்டாய இந்தியை எதிர்த்து தி.மு.க போராட்டத்தைத் தொடங்கியது. தி.மு.க-வினர் பலர் கைது செய்யப்பட்டார்கள். கட்டாய இந்தியை எதிர்த்து பேரணி நடத்த அண்ணா முற்பட்டார். எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல், இந்தி கட்டாயப் பாடம் என்ற ஆணையை ஜூன் 18-ம் தேதி அரசு வாபஸ் பெற்றது.

பின்னர், கல்வியமைச்சர் மாதவ மேனன், மொழிக்கல்வியில் ‘சீர்திருத்தம்’, ‘மாறுதல்’ போன்றவை இனிமேல் இருக்காது என்ற அளவுக்கு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்தார். ‘திருத்தியமைக்கப்பட்ட’ அந்தத் திட்டம் வரவேற்புக்குரியதாக இருந்தது. அதன்படி, மாநில மொழியை அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற நிலை வருகிறது. அதாவது, தமிழ்நாட்டில் தமிழை கட்டாயம் படிக்க வேண்டும்… ஆந்திராவில் தெலுங்கு மொழியைக் கட்டாயம் படிக்க வேண்டும் என்பதாக அது இருந்தது. ஆங்கிலத்துக்கும் அந்த முக்கியத்துவம் தரப்பட்டது. இந்தி கட்டாயம் என்று அல்லாமல், விருப்பம் இருப்பவர்கள் இந்தியைப் படிக்கலாம், அல்லது கைத்தொழில் பழகலாம் என்று அந்தத் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. அந்தளவில் அமைச்சர் மாதவ மேனன் கொண்டுவந்த திட்டம் வரவேற்பைப் பெற்றது.

அதே நேரம், அதில் ஒரு சிக்கலும் இருந்தது. வடமொழிக்காரர்களைத் திருப்திபடுத்துவதற்காக சிக்கலான அந்த அம்சத்தை அமைச்சர் மாதவ மேனன் சேர்த்துவிட்டாரோ என்ற கேள்வியும் எழுந்தது. அதாவது, வட்டார மொழியைப் பொதுப்படிப்பு, சிறப்புப்படிப்பு என்று பிரித்திருந்தனர். அதில், பொதுப்படிப்பை அனைவருக்கும் கட்டாயம் என்றும், சிறப்புப் படிப்பை விருப்பப்பாடம் என்று கொண்டுவந்தது ஒரு பிரச்னையாக எழுந்தது.

இதுவரை, வட்டார மொழி என்ற பாடத்தில் கற்றுத்தரப்பட்ட அளவு பாடங்களையே முதற்பாகம், இரண்டாம் பாகம் என்று பங்கு போடுகிறார்கள். முதற்பாகம் சாதாரண மொழிப் பயிற்சி மட்டுமே பெற உதவும். இரண்டாம் பாகம்தான் இலக்கியப் பயிற்சிக்கு இடமளிக்கிறது. முதற்பாகம்தான் இப்போது கட்டாயப்பாடம். அதாவது, சாதாரண மொழியறிவுதான் கட்டாயம். இலக்கண, இலக்கியப் பயிற்சி விருப்பமிருந்தால் கற்றுக்கொள்ளலாம். அவ்வளவுதான். இந்த நிலை விருப்பத்தக்கது அல்ல என்ற விமர்சனங்கள் எழுந்தன.

இந்தி திணிப்பு

ஆங்கில மொழியைப் பொருத்தளவில், இதுவரை இருந்துவந்த பாடத்திட்டத்தில், நேரத்தில் மாறுதல் ஏதும் இல்லை. ஆனால், வட்டார மொழிக்கு இதுவரை கிடைத்துவந்த பாடத்திட்டத்திலும், நேரத்திலும் பங்கு போட்டு, வடமொழிக்கு வழங்கியிருக்கிறார்கள். இதுவரை இருந்துவந்த வட்டார மொழிப் (தமிழ்) பாடத்திட்டமே போதுமான அளவில் இல்லை. இன்னும் ஆக்கம் பெற வேண்டும். அப்படியிருக்கும்போது, பாடத்திட்டத்தில் வடமொழிக்கு ஆக்கம் அளிப்பதற்காக வட்டார மொழியின் பங்கை இழக்கச் செய்திருப்பது சிறிதும் நியாயமில்லை என்று தமிழறிஞர்களிடமிருந்தும், தமிழ் அமைப்புகளிடமிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்தி மீது தார்!

1950-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17-வது பிரிவில் நான்கு இயல்கள் அமைந்திருக்கின்றன. முதலாவது இயலில் உள்ள 343-வது விதி, தேவநாகரி வடிவத்தில் எழுதப்பட்டிருக்கும் இந்தி மொழியை மைய அரசின் ஆட்சி மொழி என்றும், 1965 வரை ஆங்கிலம் தொடர்ந்து ஆட்சிமொழியாகப் பயன்படுத்தலாம் என்றும் இருந்தது. 344-வது விதியில், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்தி மொழியின் வளர்ச்சியைக் கண்டறிய ஆட்சி மொழி ஆணையம் ஒன்றை நியமிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் வழங்குகிறது. இப்படியாக, இந்தியை  வளர்க்கவும், பரவலாக்கவும், ஆட்சி மொழியாக நிலைபெறச் செய்யவும் விதிகள் உருவாக்கப்பட்டிருந்தன.

அதை எதிர்த்து, திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும், தமிழறிஞர்களும் போராட்டத்தில் குதித்தனர். புகைவண்டி நிலையங்களிலும், அஞ்சல் நிலையங்களிலும் பெயர்ப்பலகைகளில் இருந்த இந்தி எழுத்துக்களை தார்பூசி அவர்கள் அழித்தார்கள். ஈரோடு புகைவண்டி நிலையத்தில் அண்ணாவும், திருச்சி புகைவண்டி நிலையத்தில் பெரியாரும் இந்தி எழுத்துக்களை அழித்தனர்.

திருச்சி தெப்பக்குளம் அஞ்சல் அலுவலகத்தில் கருணாநிதி, நாகூர் அனிபா, எசு.மணி உள்ளிட்டோர் இந்தி பெயர்ப்பலகையை தார்பூசி அழித்தனர். இந்தப் போராட்டம் தமிழகம் முழுவதும் தீவிரமான நடைபெற்றன. திருச்சி அருகே கல்லக்குடியின் பெயரை ‘டால்மியாபுரம்’ என்ற மாற்றியதைக் கண்டித்து 1953-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார் கருணாநிதி.

சங்கரலிங்கனாரின் உயிர்மூச்சு!

1956-ம் ஆண்டு. ‘சென்னை மாகாணம் என்ற பெயரை மாற்றுங்கள்… தமிழ்நாடு என்று பெயர் சூட்டுங்கள்’ என்று உயிரைப் பணயம் வைத்து உண்ணாவிரதம் இருந்தார் தியாகி சங்கரலிங்கனார். தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும், பொது வாழ்விலும் ஆட்சியதிகாரத்திலும் பரிசுத்தம் நிலவ வேண்டும் என்பன உட்பட 12 கோரிக்கைகளை சங்கரலிங்கனார் வலியுறுத்தினார்.

முதல்வர் காமராஜர், தி.மு.க தலைவர் சி.என்.அண்ணாதுரை, தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சிவஞானம், கம்யூனிஸ்ட் தலைவர் ப.ஜீவானந்தம் உட்பட பல தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தும் உண்ணாவிரதத்தைக் கைவிட சங்கரலிங்கனார் மறுத்துவிட்டார்.

சங்கரலிங்கனார்

அந்த தேசபக்தரின் சொந்த ஊரான அதே விருதுநகரைச் சேர்ந்த காமராஜர்தான் அன்றைக்கு சென்னை மாகாண முதல்வராக இருந்தார். தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்ட முடியாது என்று காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் அரசு மறுத்துவிட்டது.

1956-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி தொடங்கிய சங்கரலிங்கனாரின் உண்ணாவிரதப் போராட்டம், அக்டோபர் 13-ம் தேதி முடிவுற்றது. காரணம், அன்றைய தினம் அவரது மூச்சு நின்றுவிட்டது. மதுரை எர்ஸ்கின் மருத்துவமனையில் சங்கரலிங்கனாரின் உயிர் பிரிந்த செய்தி வெளியே பரவியது. மருத்துவமனை முன்பு மதுரை மக்கள் திரண்டனர். மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் ஓடோடிவந்து அந்த தேசபக்தருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

சாவதற்கு முன்பு மூன்று கடிதங்களை அவர் எழுதியிருந்தார். ஒரு கடிதத்தில், ‘பொதுஜனங்களின் விருப்பத்திற்கு மாறாக, தவறான வழியில்  கண்மூடித்தனமாகப் போய்க்கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி ஒழிந்தே தீரும். அறிவுத்திறன் இருந்தால் அது திருத்திக்கொள்ளட்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். இன்னொரு கடிதத்தில், ‘நான் மரணமுற்ற பிறகு என் சடலத்தை கம்யூனிஸ்ட்களிடம் ஒப்படையுங்கள்’ என்று சங்கரலிங்கனார் தன் விருப்பத்தைத் தெரிவித்திருந்தார்.

பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினர். மதுரை தத்தனேரி சுடுகாட்டில் சங்கரலிங்கனாரின் இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது. அதை, கம்யூனிஸ்ட் தலைவர்களான கே.பி.ஜானகியம்மாள், கே.டி.கே.தங்கமணி உள்ளிட்டோர் முன்னின்று நடத்தினர். சங்கரலிங்கனார் மரணமடைந்தார். ஆனால், அவரது உயிர்மூச்சான ‘தமிழ்நாடு என்று பெயர்சூட்டுங்கள்’ என்ற கோரிக்கை உயிரோடு இருந்தது.

தமிழனின் வெற்றி!

1952 முதல் 1962 வரை, ராஜாஜியின் சீடரான சி.சுப்பிரமணியம் தமிழ்நாட்டின் கல்வியமைச்சராக இருந்தார். அவர், 1956-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி, தமிழ் ஆட்சி மொழி மசோதாவை சட்டமன்றத்தில் முன்வைத்தார். சென்னை மாகாணம் மொழிவழி மாநிலங்களாகப் பிரிந்த பிறகு, தமிழ் பேசும் பகுதிகளை மட்டுமே கொண்ட சென்னை மாகாணத்தின் சட்டமன்றத்தில் இந்த மசோதா முன்வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டமன்றத்தில் அந்த மசோதா மீதான விவாதத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ப.ஜீவானந்தம் பங்கெடுத்தார். அப்போது, ‘அடுத்து புதிதாக வரப்போகும் சட்டமன்றத்தில் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் நம் மாநிலத்துக்கு நிச்சயம் சூட்டப்படும். அந்த ஆட்சியின் காலவரையறை தீருவதற்கு முன்பு, ஐந்தாண்டுகளுக்குள் கல்லூரிகளில் தமிழ் ஆனந்தத் தாண்டவமாடும் என்பதில் சந்தேகம் கிடையாது. தமிழ் ஆட்சிமொழி என்பது மந்திரி அவர்களின் வெற்றி கிடையாது. இது தமிழனின் ஜனநாயக வெற்றி’ என்றார். பிறகு, தமிழ் ஆட்சி மொழி மசோதா சட்டமன்றத்தில் ஏகமனதுடன் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், ஆட்சி மொழி ஆணையத்தின் அறிக்கை 1957 ஆகஸ்ட் 12-ம் தேதி நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டது. அதை ஆராய்ந்து கருத்து தெரிவிக்க 30 பேர் கொண்ட குழு உள்துறை அமைச்சர் வல்லப பந்த் தலைமையில் அமைக்கப்பட்டது. அந்தக் குழு அளித்த அறிக்கையின் மீது நாடாளுமன்றத்தில் தீவிரமான விவாதங்கள் நடைபெற்றன. அப்போது, ‘எவ்வளவு காலத்துக்கு மக்கள் விரும்புகிறார்களோ, அதுவரையில் ஆங்கிலம் இருக்க வேண்டும். இதற்கான முடிவு கூறும் உரிமையை இந்தி பேசும் மக்களிடம் விடமாட்டேன். இந்தி பேசாத மக்கள்தான் அதில் முடிவெடுக்க வேண்டும்’ என்று பிரதமர் நேரு உறுதியளித்தார்.

இந்தித் திணிப்புக்கு எதிரான கடும் போராட்டத்துக்குப் பிறகு, இந்தி ‘நெவர்’… இங்கிலீஷ் ’எவர்’ என்ற கொள்கையை ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொண்டாலும், அதில் அவர்கள் உறுதியாக இல்லை என்பதுதான் பிந்தைய வரலாறாக அமைந்தது. ஆட்சியாளர்கள் வார்த்தை தவறியதால், ‘உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு’ என்று அடுத்த சில ஆண்டுகளில் வீருகொண்டு போராட்டம் எழுந்தது.

- தொடரும்

Grok AI சர்ச்சை: 'இந்திய சட்டத்தின் படி நடப்போம்' - தவறை ஒப்புக்கொண்ட எலான் மஸ்கின் எக்ஸ் நிறுவனம்

எலான் மஸ்க்கின் எக்ஸ் தளம், தனது Grok AI மூலம் ஆபாசப் படங்கள் உருவாக்கப்பட்ட விவகாரத்தில் தனது தவறை ஒப்புக்கொண்டு 600 கணக்குளை ஒப்புக்கொண்டிருக்கிறது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம... மேலும் பார்க்க

`தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு கிடையாது' - அமைச்சர் ஐ.பெரியசாமி

திண்டுக்கல் மாநகராட்சி 44 வது வார்டில் தி.மு.க சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என மும்மதத்தைச் சார்ந்த பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் சமத்துவ பொங்கல்... மேலும் பார்க்க

AjithKumar: "அவர்களும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும்"- ரசிகர்கள் குறித்து அஜித்குமார்

நடிகர் அஜித்குமார், ‘குட்​பேட் அக்​லி’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்​சந்​திரன் இயக்​கும் படத்​தில் நடிக்க இருக்​கிறார். இதனிடையே கார் பந்​த​யத்​தில் கவனம் செலுத்தி வரு​கிறார் அஜித்குமார். து... மேலும் பார்க்க

`பாமக பிரிவுக்கு பணம்தான் காரணம்' - புதிய கட்சி தொடங்கிய குரு மகள் கடும் தாக்கு

பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்த தலைவராகவும்,வன்னியர் சங்கத் தலைவராகவும் இருந்தவர் ஜெ.குரு. இரண்டு முறை எம்.எல்.ஏ-வாக இருந்த குரு, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2018-ஆம் ஆண்டு உயிரிழந்தார். குருவின் மரண... மேலும் பார்க்க