தென்காசி: விவசாய இலவச மின் இணைப்பிற்கு ரூ.7,000 லஞ்சம்: வசமாக சிக்கிய இளநிலை பொற...
`தமிழ்நாடு,கேரளாவுக்கு பட்டை நாமம்; இரயில்வே துறையில் வஞ்சகம் செய்யும் பாஜக' - எம்.பி சு.வெ காட்டம்
தமிழ்நாட்டிற்கும், கேரளாவுக்கும் பாஜக அரசு இரயில்வே துறையில் வஞ்சகம் செய்வதாக சு.வெங்கடேஷன் எம்.பி தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " 2024-25 ஆம் ஆண்டில் புதிய வழித்தடத்திற்கு ரூ.31,458 கோடி ஒதுக்கப்பட்டது.
அதில் இதில் தெற்கு இரயில்வேக்கு ஒதுக்கப்பட்டதோ வெறும் 301 கோடி. அதவாது ஒரு சதவிகிதம் மட்டுமே.

பாஜக ஆளும் மாநிலங்களுக்கு பல்லாயிரம் கோடி. ஆனால் தமிழ்நாடு, கேரளாவுக்கு பட்டை நாமம்" என்று பதிவிட்டிருக்கிறார்.
மேலும் மத்திய இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிற்கும் சில கோரிக்கைளை முன் வைத்திருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், " மூத்த குடிமக்களுக்கான ரயில் பயணச்சலுகையை மீண்டும் வழங்க வேண்டும். 2020ல் நிறுத்தப்பட்ட இந்த சலுகையினால் மூத்தோர் மருத்துவம் மற்றும் திருத்தலப் பயணங்களை மேற்கொள்ள முடியாமல் திணறுகின்றனர்.
அதே நேரத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட பயணக்கட்டண சலுகைகளும், அபராத ரத்து செய்யும் முடிவுகளும் கேள்விக்குறியாக உள்ளன.
பிங்க் புத்தகத்தை மீண்டும் வெளியிட வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளாக பிங்க் புத்தகம் நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடியும் வரை வெளியிடப்படாததால், மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு வெளிப்படையான தகவல் கிடைக்கவில்லை.

தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் புதிய ரயில் பாதைகளுக்கு கடுமையான புறக்கணிப்பு நடைபெறுகிறது. பட்ஜெட்டில் புதிய பாதைகளுக்கு ரூ.31,458 கோடி ஒதுக்கப்பட்டாலும், தெற்கு ரயில்வேக்கு அதில் வெறும் ஒரு சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் இரண்டாவது முனையம் அமைப்பது அவசியம். கோயம்புத்தூர் ப்ளாட்ஃபாரங்கள் மிகுந்த நெரிசலுடன் செயல்பட்டு வருவதால் போத்தனூரை இரண்டாவது முனையமாக மாற்ற வேண்டும்.
அதேபோன்று மதுரை கூடல் நகரிலும் இரண்டாவது ரயில் முனையத்தை உருவாக்க வேண்டும்.
ரயில் பாதுகாப்பை உறுதி செய்ய இன்டர்லாக் செய்யாத கேட்டுகளை உடனடியாக இன்டர்லாக் கேட்களாக மாற்றுவதற்கு போதிய நிதி வழங்க வேண்டும். செம்மங்குப்பத்தில் சமீபத்தில் ஏற்பட்ட பள்ளி குழந்தைகள் உயிரிழப்பு விபத்து போன்றவை இன்டர்லாக் கேட் இல்லாததாலேயே நடக்கின்றன.

கொல்லம்–நாகூர் விரைவு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும், தெற்கு ரயில்வேயில் உள்ள ஆயிரக்கணக்கான காலியிடங்களை நிரப்ப அனுமதி வழங்க வேண்டும்.
இறுதியாக மதுரையிலிருந்து மேலும் பல பயணிகள் ரயில்களை இயக்க வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறார்.

















