Stephen Movie Review | Gomathi Shankar | Mithun | Cinema Vikatan | Netflix Films
"தமிழ்நாட்டுல எதுவுமே சரியில்லை" - அவசர அழைப்பு; அமித் ஷாவிடம் அண்ணாமலை கொடுத்த ரிப்போர்ட்!
தமிழகமே திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சூடாகிப் போயிருந்த நேரத்தில், திடீரென மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் சந்தித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார், பாஜக மாநில முன்னாள் தலைவரான அண்ணாமலை. 'தனிக்கட்சி தொடங்கப்போகிறார்.., நயினார் நாகேந்திரனால் ஓரங்கட்டுப்பட்டுவிட்டார்.., கும்பகோணத்தில் நடந்த அணிப்பிரிவு நிர்வாகிகள் சங்கமம் நிகழ்ச்சிக்கு, மனவருத்தத்தில் இருந்ததால்தான் அவர் வரவில்லை...' என்று அண்ணாமலை குறித்து பாஜக-வுக்குள் தகவல்கள் பரவிவரும் நிலையில், அவரது டெல்லி விசிட் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.
அவசர அழைப்பு
அண்ணாமலையின் டெல்லி விசிட் குறித்து நம்மிடம் பேசிய பாஜக-வின் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் சிலர், "திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட குப்பைக் கழிவுகளை, இடுவாய் கிராமம் மற்றும் சின்னக்காளிப்பாளையம் பகுதியில் கொட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அப்பகுதி மக்கள் போராடி வருகிறார்கள். அந்தப் போராட்டத்தில் கலந்துக்கொள்ள, கடந்த டிச.4-ம் தேதி நேரம் கொடுத்திருந்தார் அண்ணாமலை. திருப்பூருக்கு அவர் கிளம்பிக் கொண்டிருந்த நேரத்தில்தான், டெல்லியில் இருந்து அவசர அழைப்பு வந்தது. அமித் ஷாவின் வீட்டில் ஒரு ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது தெரிந்தவுடன், தன் நிகழ்ச்சிகளை ரத்துச் செய்துவிட்டு டெல்லி புறப்பட்டார் அண்ணாமலை. அதனால்தான், திருப்பரங்குன்றம் போராட்டத்தில் அவர் கலந்துக்கொள்ள முடியாமல் போனது.
அமித் ஷாவின் வீட்டிற்கு, கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோரும் அந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்திருந்தனர். முதலில் அமித் ஷாதான் பேசத் தொடங்கியிருக்கிறார். 'கட்சியும் கூட்டணியும் எப்படி இருக்கிறது...' என்று அவர் கேட்கவும், 'அமைப்புரீதியாக நாம் வலுப்பெற்று வருகிறோம். ஆனால், தேர்தலை எதிர்கொள்ளும் அளவுக்கு இன்னும் பூத் கமிட்டிகள் அமைக்கப்படவில்லை. 62 சட்டமன்றத் தொகுதிகளில் நாம் வலுவாக இருக்கிறோம். இப்போதிருக்கும் கூட்டணியை மட்டும் வைத்துக்கொண்டு தேர்தலைச் சந்தித்தால், எதிர்பார்த்த ரிசல்ட் வராது. தே.மு.தி.க., பா.ம.க., அ.ம.மு.க போன்ற கட்சிகளையும் நாம் கூட்டணிக்குள் இணைத்துக்கொள்ள வேண்டும்' என்றிருக்கிறார் அண்ணாமலை.

'கும்பகோணம் நிர்வாகிகள் கூட்டத்திற்கு ஏன் வரவில்லை...' என்று பி.எல்.சந்தோஷ் கேட்கவும், 'எந்த அடிப்படையில் என்னை அங்கு வரச் சொல்கிறீர்கள்... கட்சியில் எனக்கு எந்த பொறுப்பும் இல்லை. ஆனாலும்கூட, ஒரு காரியகர்த்தாவாக என் பணியை நான் செய்துக் கொண்டிருக்கிறேன்.
கோவாவிலும் கேரளாவிலும் நீங்கள் கொடுத்த பணிகளை முகம் சுளிக்காமல் செய்து முடித்திருக்கிறேன். ஆனால், என் ஆதரவாளர்களைக் கட்சிப் பொறுப்பிலிருந்து தொடர்ந்து நீக்கி வருகிறார் நயினார் நாகேந்திரன். கும்பகோணம் நிர்வாகிகள் கூட்டத்திற்கு முதல் நாள்கூட, என் ஆதரவாளர்கள் சிலர் நீக்கப்பட்டனர். அதைச் சொல்வதற்காக உங்களை நான் தொடர்புகொண்ட போது, நீங்கள் அழைப்பை ஏற்கவில்லை. மரியாதை இல்லாத நிலையில், நான் எப்படி வருவது...' என்று சந்தோஷிடம் பொங்கியிருக்கிறார் அண்ணாமலை.
அவரைச் சமாதானம் செய்த ஜெ.பி.நட்டா, 'தமிழகத்தில், நம்முடைய கூட்டணிக் கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்திருக்கிறோம். அவரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தித்தான் தேர்தலையும் சந்திக்கப் போகிறோம். இந்தச்சூழலில், உங்களுடைய ஆதரவாளர்கள் எடப்பாடியை விமர்சனம் செய்வது, கூட்டணிக்கு பங்கம் விளைவிக்காதா...' என்று கேட்கவும், 'நானே பல பேட்டிகளில், முதல்வராக எடப்பாடி பழனிசாமியை அமர வைப்பதற்கு கடுமையாக உழைப்போம் என்று சொல்லியிருக்கிறேன். பிறகு எதற்காக நான் உள்ளடி செய்யப்போகிறேன்... திமுக ஐ.டி விங்கைச் சேர்ந்த சிலர்தான், என் ஆதரவாளர்கள் போர்வையில் வதந்தியைப் பரப்புகிறார்கள்' என்று விளக்கமளித்திருக்கிறார் அண்ணாமலை.
நடந்த விவாதத்தையெல்லாம் அமைதியாகக் கேட்டுக்கொண்ட அமித் ஷா, 'மாநிலத் தலைவராக நீங்கள் இருந்தபோது, என்னவெல்லாம் செய்தீர்கள்... இப்போது என்ன செய்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதெல்லாமே எங்களுக்குத் தெரியும். உங்கள் மீதும் சில தவறுகள் இருக்கின்றன. அதைத் திருத்திக் கொள்ளப் பாருங்கள். உங்களால், கூட்டணிக்கு எந்த பிரச்னையும் வரக்கூடாது. நான் டிச.14-ம் தேதிவாக்கில் சென்னை வரவிருக்கிறேன். அப்போது, தமிழகத்திலுள்ள சிறுசிறு சமுதாயத் தலைவர்களையும் இயக்கங்களின் பிரதிநிதிகளையும் சந்திக்கத் திட்டமிட்டிருக்கிறேன். அவர்களை ஒருங்கிணைக்கும் வேலையைப் பாருங்கள். நயினாரை மாநிலத் தலைவராக நியமித்ததற்குக் காரணமிருக்கிறது. உங்களுக்கான அங்கீகாரம் உரிய நேரத்தில் வழங்கப்படும்' என்று சொல்லியிருக்கிறார்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்தும், தி.மு.க ஆட்சி குறித்தும் பேச்சு திரும்பியிருக்கிறது. 'தி.மு.க-விலுள்ள சிட்டிங் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மீதெல்லாம் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அவர்களை தேர்தலுக்குள் 'டைட்' செய்தால், நம்மால் சுலபமாக அரசியல் செய்ய முடியும். தமிழகத்தில் எதுவுமே சரியில்லை... திருப்பரங்குன்றம் விவகாரத்திலேயே கூட, நீதிமன்றங்களுடன் திமுக மோதிக் கொண்டிருக்கிறது....' என்று அண்ணாமலை சொல்லவும், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இதுவரை நடந்த விஷயங்களை பேட்டியாகக் கொடுக்கச் சொல்லியிருக்கிறார் ஜெ.பி.நட்டா. அதைத்தொடர்ந்துதான், தமிழிசை செளந்திரராஜன், சக்கரவர்த்தி சகிதமாக கமலாலயத்தில் பேட்டிக் கொடுத்திருக்கிறார் அண்ணாமலை.

அமித் ஷா வீட்டில் நடந்தச் சந்திப்பில், அண்ணாமலை மீது சமீபகாலமாக எழுந்திருக்கும் சொத்துக்குவிப்பு சர்ச்சைகள் தொடர்பாகவும் பேசியிருக்கிறார்கள். அதற்கு, தன் தரப்பு நியாயங்களைச் சொல்லியிருக்கிறார் அண்ணாமலை. தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொண்டு வரும் சுற்றுப்பயணம், எதிர்பார்த்தளவு சோபிக்கவில்லை. அவரது சுற்றுப்பயணத்தில் எழுச்சியுமில்லை. அதனை உணர்ந்துதான், அண்ணாமலையை அழைத்துப் பேசியிருக்கிறது டெல்லி. அவரிடம் சில அசைன்மெண்ட்டுகளும் அளிக்கப்பட்டுள்ளன..." என்றனர் விரிவாகவே.

அண்ணாமலையைத் தொடர்ந்து, நயினார் நாகேந்திரனும் விரைவில் டெல்லிக்கு அழைக்கப்படுவார் என்கிறார்கள் விவரமறிந்த பாஜக சீனியர்கள். இன்னும் இரண்டு வாரங்களில் பாஜக தேசிய தலைவருக்கான தேர்தலை நடத்திட திட்டமிட்டிருக்கிறதாம் டெல்லி. 'புதிய தலைவர் தேர்வான பிறகு, தேசியளவில் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு வழங்கப்படும்' என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். இந்த டெல்லி பயணத்தால், தனக்கிருந்த தடையெல்லாம் விலகிவிடும் என்று உறுதியாகவே நம்ப ஆரம்பித்திருக்கிறாராம் அண்ணாமலை. 'தடை விலகுமா...', என்பது இம்மாத இறுதியில் தெரிந்துவிடும்.!











