மகாருத்ர ஹோமம்: 2026 உங்களுக்கு அதிர்ஷ்ட ஆண்டாக அமையும்! ஆயுள் ஆரோக்கியம் ஐஸ்வர்...
'அறிவாலய வசை, உடைந்து போன மனம்!' - தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்
மதிமுக, திமுக, அதிமுக என பல்வேறு கட்சிகளில் பேச்சாளராக முக்கியப் பொறுப்புகளில் இருந்த நாஞ்சில் சம்பத் இன்று விஜய்யை சந்தித்து தவெகவில் இணைந்திருக்கிறார். போயஸ் கார்டனில் உள்ள ஆதவ்வின் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த நாஞ்சில் சம்பத் பேசியவை இங்கே.
அவர் கூறியதாவது, ``தம்பி விஜய்யை சந்தித்து பொன்னாடை அணிவித்து `நீயும் முதல்வன் ஆகலாம்’ புத்தகத்தை கொடுத்து தவெகவில் இணைந்தேன். ஆறு ஆண்டுகளாக எந்தக் கட்சியிலும் இல்லாமல் பெரியார், அண்ணாவின் லட்சியங்களை பேசிக் கொண்டிருந்தேன். விஜய்யை என்னை சந்தித்தவுடனேயே, 'நான் உங்களின் ரசிகன்!' என்றார்.

வசைமாரி பொழிந்தார்கள்
கரூர் சம்பவத்தில் விஜய்க்கு ஆதரவாக பேசியதால், அறிவாலயத்திலிருந்து வசைமாரி பொழிந்தார்கள். வள்ளுவர் கோட்டத்தில் நடந்த அறிவுத்திருவிழாவில் என்னை திட்டமிட்டு நிராகரித்தார்கள். உதயநிதியின் பிறந்தநாளை கொண்டாட வட சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சேகர் பாபு என்னிடம் தேதி வாங்கியிருந்தார்.
என் மனம் உடைந்து போனது
கடந்த 28 ஆம் தேதி அந்த நிகழ்வில் பேசியிருந்தேன். அந்த நிகழ்வில் கரு.பழனிப்பன் என்னை நக்கல் செய்தார். அதற்கு சில நாட்களுக்கு முன்பு சுப.வீ என்னை திமுக மேடையில் வசைபாடினார். என் மனம் உடைந்து போனது.
எந்த பரிந்துரைக்கும் நான் அவர்களிடம் சென்று நின்றது இல்லை. ஆனால், என்னுடைய நிகழ்ச்சிகளை ரத்து செய்து என் வயிற்றில் அடித்தார்கள். விஜய்க்கு ஆதரவாக பேசியதால் என்னை மிரட்டுகிறார்கள்.

புதிதாக தொடங்கிய ஒரு அமைப்புக்கு பெரியாரையும் அம்பேத்கரையும் விஜய் கொள்கைத் தலைவராக முன்னிறுத்துகிறார். குலக்கல்வி சட்டத்தை எதிர்த்த இந்தியாவில் விடுதலைக்காக போராடிய காமராஜரையும் தலைவராக வைத்திருக்கிறார். லட்சக்கணக்கான இளைஞர்களை மூலதனமாக கொண்ட இயக்கம் தவெக.

தமிழகம் முழுவதும் இளைஞர்களுக்கு பாசறை நடத்த வேண்டும் என விஜய்யிடம் கூறினேன்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இரண்டு பிரிவுகளிடையே கலவரத்தை தூண்ட முனைகிறார்கள். அதில் விஜய் மௌனமாக இருப்பதே நல்லதுதானே. விஜய்யிடம் நீங்கள் பாஜகவுடன் நெருக்கமாக இருப்பதாக சொல்கிறார்களே என கேட்டேன். அதற்கு விஜய், 'இங்கே ஆட்சி புரிபவர்களை வலுவாக எதிர்க்க வேண்டும். தேவை வரும்போது அவர்களையும் வலுவாக எதிர்ப்போம்' என்றார்.’ என முடித்துக்கொண்டார்.











