'அறிவாலய வசை, உடைந்து போன மனம்!' - தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்
திருப்பரங்குன்றம் விவகாரம்: ``நான் ஒன்னே ஒன்னு கேட்கிறேன், பதில் சொல்லுங்கள்'' - எம்.பி கனிமொழி
திருப்பரங்குன்ற விவகாரம் தமிழகம் மட்டுமன்றி, நாடாளுமன்றம் வரை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பரங்குன்ற மலையில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் ‘தமிழகத்தில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க மதவாத சக்திகள் முயற்சி’ என ஒரு தரப்பினரும், ‘இந்துக்களுக்கு விரோதமாக செயல்படும் திமுக அரசு’ என்று இன்னொரு தரப்பினரும் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக்கோரி தி.மு.க எம்.பி-க்கள் சார்பில் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
தி.மு.கவின் மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு மற்றும் மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா ஆகியோர் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கினார்.
இதேபோல் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூரும் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கினார். இந்நிலையில், இரு அவைகளிலும் திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி எம்.பி-க்கள் தொடர் முழக்கம் எழுப்பினர்.
ஆனால், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஒத்திவைப்பு நோட்டீஸை ஏற்க முடியாது என மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மறுத்ததால், தி.மு.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சி எம்பி.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.
மேலும், திருப்பரங்குன்ற விவகாரம் தொடர்பாக மக்களவையில் விவாதிக்க வேண்டும் என திமுக கூட்டணி கட்சி எம்பிக்கள் கோரிக்கை வைத்த நிலையில், சபாநாயகர் ஓம் பிர்லா அதை மறுத்துள்ளார்.
இந்த நிலையில், திமுக எம்.பி கனிமொழி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது கனிமொழி பேசுகையில், ``நீதிமன்ற தீர்ப்பிலே குறிப்பிட்டப்பட்டிருந்தது போல, கோயில் நிர்வாகமும், அறநிலையதுறையும் சேர்ந்து கார்த்திகை தீபத்தை மலையின் உச்சியில் இருக்கும் பிள்ளையார் கோயில் தீபத் தூணிலே ஏற்றியிருக்கிறார்கள்.

திடீரென்று எந்த மதத்திற்கும் சம்பந்தமே இல்லாத, ஆங்கிலேயர் காலத்திலே வைக்கப்பட்ட நில அளவை கல் மீது ஒரு தீபத்தை ஏற்ற வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.
இது இந்து மதத்திற்கு எதிராக, இந்து மக்களின் மனநிலையை உண்மையிலேயே புண்படுத்தக்கூடிய செயல். கோயிலுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு கல்லிலே தீபம் ஏற்றப்பட வேண்டும் என, பிரச்னைகளை உருவாக்குவதற்காகவே ஒரு முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது.
நீதியரசர் சுவாமிநாதன் தேவையில்லாமல் தலையிட்டு தீர்ப்பு எனும் கட்டளைகளை பிறப்பித்திருக்கிறார். தமிழ்நாடு காவல் துறையை தாண்டி, மத்திய போலீசையும் அனுப்பியிருக்கிறார்.
இந்த சூழலைப் பயன்படுத்திக் கொண்டு பா.ஜ.க அங்கே மத கலவரத்தை உருவாக்க துடிப்பது தெரிகிறது. அங்க வாழும் பொதுமக்களுக்கு கூட அச்சத்தை ஏற்படுத்ததும் நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை, கண்கூடாக பார்க்கிறோம்.
பா.ஜ.க தலைவர்கள் முதல் பா.ஜ.கவைச் சார்ந்தவர்களின் சமூக ஊடகங்கள் வரை எல்லோரும் 'திருப்பரங்குன்றம் இன்னொரு அயோத்தியாவாக மாற்ற வேண்டும்' எனப் பேசுகிறார்கள். அவர்கள் என்ன முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

இன்று நாடாளுமன்றத்தில் இந்த பிரச்னையை நாங்கள் எழுப்பிய போது, பாராளுமன்றத்தின் பொறுப்பு அமைச்சர் கிரண் ரிஜு, மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலுவைப் பார்த்து, 'நீங்கள் பேசுவது உங்களுக்கும், உங்கள் கட்சிக்கும் நல்லதல்ல' என்று மிரட்டும் வகையில் பேசியிருப்பது நிச்சயமாக கண்டிக்கத்தக்கது.
அதுமட்டுமில்லாமல், ஜீரோ நேரம் உறுப்பினர்களின் நேரம்.
அந்த நேரத்தில் அமைச்சர் முருகன் தேவையில்லாமல் மிக நீண்ட ஒரு உரையை ஆற்ற அனுமதிக்கப்பட்டார். அவர் உரையில் பல பொய் பிரசாரங்களை அந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு பேசினார்.
தமிழக அரசின் மீதும், தமிழக மக்கள் மீதும் ஒரு காழ்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடுதான், அவருடைய உரை அமைந்திருந்தது. இது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தொடர்ந்து பா.ஜ.க-வின் அரசியல் வியூகம் மத கலவரத்தை உருவாக்குவது தான் என்பதை நாம் பல மாநிலங்களின் உதாரணங்களை வைத்து அவதானிக்க முடியும்.

தமிழ்நாட்டில் அவங்கள் எவ்வளவு முயற்சி செய்தும், அவர்களுக்கு வாக்களிக்க தமிழ் மக்கள் தயாராக இல்லை. இதைப் புரிந்து கொண்டுதான், ஒரு மத கலவரப் பிரச்னையை உருவாக்கி அரசிற்கு கெட்ட பெயரை உருவாக்கி விட வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் மக்கள் முதலில் தமிழர்களாக தங்களை உணர்ந்தவர்கள்.
அடுத்து அவர்களுக்கு யார் தங்களுக்காக பாடுபடுகிறார்கள், பெரும்பான்மை மக்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்கு யார் உழைக்கிறார்கள், யார் மக்களை பிளவுபடுத்தி ஆபத்திலே தள்ள நினைக்கிறார்கள் என்பதை தெளிவாக புரிந்து கொண்டவர்கள். அதனால், இதுபோன்றப் பிரச்னைகளை உருவாக்குவது எந்த காலத்திலும் பிரச்னைகளை உருவாக்குபவர்களுக்கு பயன்படாது.
இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்திலே அத்தனை கட்சிகளும் எங்களோடு இணைந்து போராட்டத்தில் பங்கேற்றுக் கொண்டார்கள். எங்களோடு நின்றார்கள்.

திருப்பரங்குன்றம் விவகாரம் மாதிரி, நீதிமன்றத்தை பயன்படுத்தி மணிப்பூரிலும் ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்பிறகுதான் அங்கு கலவரம் வெடிக்கும் சூழல் உருவானது. நீதிமன்றத்தை பயன்படுத்தி கலவரங்களை உருவாக்குவது மிகவும் தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்பதை மக்களும் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
முதல்வரின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு அரசு, இந்த ஆட்சியில் எத்தனையோ கோயில்களில் கும்பாபிஷேகம், திருவிழா எனப் பல நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறது. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு எல்லா வசதிகளையும் தொடர்ந்து அறநிலையத்துறை செய்து கொண்டுதான் இருக்கிறது.
அதனால் மக்களுக்கு இடையூறுகளை உருவாக்க வேண்டும் என்று நினைக்கக்கூடியவர்கள் நாங்கள் அல்ல. ஆனால் இப்போது திருப்பரங்குன்றத்தில் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு சூழலை உருவாக்கி, அரசியல் குளிர்காய்வதற்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் அவர்களை அடையாளம் கண்டிருக்கிறார்கள். அவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
இதுவரைக்கும் எந்த காலத்திலும் இந்துக்கள் திருப்பரங்குன்றத்துக்கு போக முடியாத ஒரு சூழ்நிலை இருந்ததே இல்லை. கோயில் செல்பவர்கள் கூட எல்லா இடத்துக்கும் சென்றுவிட்டுதான் வருகிறார்கள். அப்படியான இணக்கமான சூழலைதான் நாம் தமிழ்நாட்டில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால், இப்போது யாருமே அங்கு நிம்மதியாக போக முடியாத ஒரு நிலையை பா.ஜ.க உருவாக்கியிருக்கிறது. ஆனால், தமிழ்நாடு அரசும், காவல்துறையும் பக்தர்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்திவருவதால், பக்தர்கள் கோயில் சென்றுவருகிறார்கள்.
இது எங்களின் ஈகோ பிரச்சனை அல்ல.
ஒரு அளவீட்டு கல் மேல் தீபம் ஏற்ற வேண்டும் என்பதுதான் இந்துகளின் மனதை புண்படுத்தும். ஆகம விதிகள் குறித்து அடிக்கடி பேசிக் கொண்டிருப்பவர்கள், அந்த ஆகம விதிகளை எல்லாம் குழிதோண்டி புதைக்கக்கூடிய வகையில், அடுத்த நாளும் தீபத்தை ஏற்றுவதும் இந்துகளின் மனதைப் புண்படுத்தும்.
எங்கள் மீது பழி சுமத்த வேண்டும் என நினைக்கக்கூடியவர்கள், உண்மையிலேயே மக்களை புண்படுத்துகிறார்கள். தமிழ்நாட்டு மக்களை தன் அரசியலுக்காக ஒவ்வொரு நாளும் கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
நான் ஒன்றே ஒன்றைக் கேட்கிறேன் பதில் சொல்லுங்கள்... தமிழ்நாடு அமைதியாக இருக்கிறது. மத பிரச்சனைகள் இல்லாத ஒரு மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து இருக்கிறது. பா.ஜ.க ஆட்சி இருக்கக்கூடிய எந்த மாநிலத்திலாவது மதநல்லிணக்கமும், அமைதியும் இருக்கிறதா? அப்படியானால் மத பிரச்னைகள் உருவாக்குவது யார்? அப்படிப்பட்ட பிரச்னைகள் இல்லாமல், மனிதர்கள் மனிதர்களாக வாழக்கூடிய ஒரு சூழ்நிலையை திமுக ஆட்சி உருவாக்கி தந்திருக்கிறது. அதை இவர்கள் குலைக்க பாடுபட்டு கொண்டிருக்கிறார்கள்." என்றார்.











