செய்திகள் :

BB Tamil 9: Day 60: முடியாத முக்கோணக் காதல்; பாரு அட்ராசிட்டி - கானா வினோத்தின் முரட்டு சம்பவங்கள்!

post image

வீக்லி டாஸ்க் முடியும் ஒவ்வொரு முறையும் ‘ஹப்பாடா’ என்று போட்டியாளர்கள் துள்ளிக் குதிக்கிறார்கள். ஆனால் அப்படி மகிழ வேண்டியது பார்வையாளர்கள்தான். 

‘இப்போதாவது முடிந்து தொலைத்ததே’ என்று நிம்மதிப் பெருமூச்சு விடுமளவிற்கு ஒவ்வொரு டாஸ்க்கையும் போட்டியாளர்கள் பயங்கரமாக சொதப்புகிறார்கள். 

சுபிக்ஷா பார்த்துக் கொண்டிருக்கும் போதே சபரி நெக்லஸை திருடியது விதிமீறல். பொதுவாக நியாயமாக நடந்து கொள்ளும் சபரியே இப்படிச் செய்தது அதிர்ச்சியானது. எதிரணியினரைப் பழிவாங்கும் ஆத்திரத்தில் செய்தது நன்றாகவே தெரிகிறது. எனவே இதை நிராகரித்த பிக் பாஸ், சபரியை சிறைக்கு அனுப்பியது நியாயமான முடிவு. 

‘முக்கோணக் காதலை முடித்து விடலாம்’ என்று விடிய விடிய பேசினாலும் பாரு - அரோரா சண்டை எளிதில் முடியாது போலிருக்கிறது. ரெட்ரோ சினிமா அணி ஒளித்து வைத்திருக்கும் நெக்லஸை தேடுகிறேன் பேர்வழி என்று வந்த பாரு, அரோராவின் படுக்கையில் இருக்கும் பொருட்களை சோதனை செய்து ‘தோண்ட தோண்ட இன்னும் எத்தனை வருமோ?” என்று டபுள் மீனிங்கில் பேசி வம்புக்கு இழுத்தார். 

இதனால் ஆத்திரமடைந்த அரோரா, ‘என் பொருட்களை தொடும் உரிமை உனக்கு கிடையாது’ என்று ஆட்சேபித்தார். ‘பொருள்’ என்பது கம்ருதீன் என்பது மாதிரியும் நமக்குப் பொருளாகியது. ‘டிரஸ்ஸ நோண்டுங்க. என்னை நோண்டாதீங்க’ என்று அரோரா ஆட்சேபிக்க, “இந்த ஆட்டத்துல இதெல்லாம் சகஜம். தெரிஞ்சுதானே வந்திருப்பீங்க?” என்று அட்ராசிட்டியை தொடர்ந்தார் பாரு. 

அந்தச் சமயத்தில் கம்மு வர, வீட்டுக்குள் நுழைந்த அப்பாவை தூக்கச் சொல்லி கை நீட்டும் பாப்பா போல பாரு கையை நீட்டி ‘என்னாச்சு பேபி?’ என்று வந்து கட்டிக் கொண்டார் கம்மு. இந்தச் செயல் அரோராவை வெறுப்பேற்றுவதற்காக என்பது வெளிப்படை. 

‘அவங்க ரெண்டு பேரும் பிரெண்டா இருக்கட்டும். ஆனா என் முன்னாடி கட்டிப் பிடிச்சு டான்ஸ் ஆடினா.. எனக்கு ஹர்ட் ஆகுது’ என்று முன்னர் கதறிய பாரு, தான் அனுபவித்த அதே வலியை இன்னொருவருக்கு தருவதற்கு துளி கூட தயங்கவில்லை. 

அரோ அழுவதற்கான ஆரம்பங்களைச் செய்ய ‘இதுதான் சாக்கு’ என்று FJவும் வினோத்தும் ஓடி வந்து அரோவை கட்டிப்பிடித்து சமாதானம் செய்ய முயற்சித்தார்கள். “பாரு.. இப்படித்தான் எமோஷனலா விளையாடுவா. விடு” என்றார் FJ. “பேசிக்கிட்டே இருக்கா.. எனக்கு மண்டை வெடிக்குது” என்று கதறினார் அரோ. 


“அவன் போறேன்னு சொன்னப்ப நீ அழுதல்ல.. அப்ப ஃபீலிங்க்ஸ்தானே?” என்று சந்தர்ப்பம் புரியாமல் வினோத் கேட்க “அவன் என் நண்பன்தான்” என்ற அரோ, திடீரென தலையில் பயங்கரமாக அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தார். “ஒரு பிரெண்டா நல்லது கெட்டதெல்லாம் அவனுக்கு சொன்னேன்.. நீ ஹீரோவா ஆக வேண்டியவன். அதற்கு உண்டான வேலையைப் பாருன்னு மோட்டிவேட் பண்ணேன்” என்பது அரோவின் கதறல். (வேலையைப் பாருன்னு சொன்னா, பாருவைப் பார்க்க ஆரம்பிக்க விட்டார் போல கம்மு!) 

சான்ட்ரா, வியானா, ரம்யா ஆகிய மூவரும் அமர்ந்து புறணி பேசிக் கொண்டிருந்தனர். “எங்க பார்த்தாலும் சுபிக்ஷா வந்து உக்காந்துக்கறா.. அதனாலதான் அவளை ஸ்னூப்பி டாக்’குன்னு சொன்னேன்’ என்று சான்ட்ரா சொல்வதெல்லாம் அநியாயம். இந்தச் சமயத்தில் ஒரு சம்பவம். இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை பிக் பாஸிற்கு அடுத்தபடியாக காது கொடுத்து ஒட்டுக் கேட்டார் கனி. அநாகரிகமான செயல். பிறகு மாட்டிக் கொண்டவுடன் இளித்தபடி சென்றார். 

துவைத்த துணியை காயப்போடாத விஷயத்தில் ரம்யா சொன்னபடி செய்த விக்ரமை டார்கெட் செய்து பாரு வசைபாடிக் கொண்டிருந்தார். “சுயபுத்தி இல்லையா?” என்றெல்லாம் பாரு வம்பிழுக்க, பல்லைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தார் விக்ரம். “நீதான் இதுக்கான எல்லையை நிர்ணயிக்கணும். இல்லைன்னா ஓவரா பேசுவா” என்று விக்ரமிடம் சொன்னார் கனி. 


“யாராவது கேரக்டர்ல இருந்து வெளியேறினா, பஸ்ஸர் அடிச்சு அவங்களை டாஸ்க்ல இருந்து வெளியேத்திடுவேன்’ என்றெல்லாம் சீன் போட்ட பிக் பாஸ், அதைச் செய்யவில்லை. அந்தப் பொறுப்பை போட்டியாளர்களிடமே தள்ளி விட்டார். அப்போதுதானே சண்டை நடந்து கன்டென்ட் கிடைக்கும்?!


‘மாடர்ன் சினிமா அணியில்’ சிறப்பாக செய்யாதவர் யார்?’ என்கிற கேள்விக்கு மெஜாரிட்டியான கைகள் FJவை நோக்கியே நீண்டன. FJ பதில் சொல்லும் போது பாருவின் பெயரைச் சொல்லி விட்டு ‘கம்ருதீன் கூட லவ் பண்ணவே இவங்களுக்கு நேரம் சரியா இருந்தது’ என்று புகார் சொல்ல, சும்மாவே ஆடும் பாரு, சலங்கை கட்டிக் கொண்டு ஆடினார். “என் கேரக்டரை தப்பா சொல்றான்’ என்று FJ மீது ஆத்திரமடைந்தார் பாரு. 

 ‘எத்தனை முறை சொல்லியிருக்கேன். மைக்கை ஆஃப் பண்ணிட்டு பேசாதீங்க’ என்று பிக் பாஸிடம் திட்டு வாங்கும் அளவிற்கு ரொமான்ஸை சிறப்பாக செய்த பாரு - கம்மு ஜோடி இதற்காகப் பொங்குவது நகைச்சுவை. 

அடுத்த அறிவிப்பைச் சொல்ல பிக் பாஸ் முயற்சித்தாலும் பாருவின் ஆத்திரம் அடங்காமல் பேசிக் கொண்டேயிருக்க, FJவும் அதற்கு மல்லுக்கட்டினார். ‘சைலன்ஸ்.. சைலன்ஸ்’ என்று உடல்நலக்குறைவாக இருந்த ரம்யா கத்த வேண்டியதாக இருந்தது. போட்டியில் இருந்து FJ வெளியேற்றப்பட்டார். “நான் என்ன பண்ணேன்னு மக்களுக்குத் தெரியும். என் டாஸ்க்கை பண்ணிட்டுதான் இருந்தேன்” என்று புலம்பினார் FJ. 

FJவுடன் ஏழாம் பொருத்தம் என்றாலும் விடாமல் நோண்ட ஆரம்பித்தார் பாரு. “ஏன் டாஸ்க் சரியாப் பண்ணாம ஒதுங்கியிருந்தே. ஏதாவது காரணம் இருக்கா?” என்று பாரு கேட்க “என்னோடது இன்ட்ரோவொ்ட் கேரக்டர். அதை வெச்சு பண்ணிட்டுதான் இருந்தேன். நான் சும்மா இல்லை. உன்னை மாதிரி மத்தவங்களை நோண்ட மாட்டேன். பிடிக்கலைன்னா தனியா போய்டுவேன்” என்று FJ பதிலடி கொடுக்க மீண்டும் சண்டை. 

பாருவின் அலப்பறையால் தான் பாதிக்கப்படவில்லை என்று காண்பித்துக் கொள்வதற்காக உரத்த குரலில் பாடினார் FJ. ஒருவரை வெறுப்பேற்றுவது எப்படி என்பதில் பாருவிற்கு பிஹெச்டி பட்டமே தரலாம். 


இந்த டாஸ்க் முடியும் சமயத்தில், ரெட்ரோ அணி செய்ததைப் போலவே, மாடர்ன் அணியும் ஓடிச் சென்று போர்வையை மூடி நெக்லஸை எடுக்க முயற்சித்தார்கள். ரெட்ரோ அணியாவது யாரும் இல்லாத சமயத்தில் இதைச் செய்தது. ஆனால் மாடர்ன் அணியோ ‘பட்டப்பகலில் வழிப்பறி’ என்பது மாதிரி அனைவரும் இருக்கும் போதே போர்வையை மூடி எடுக்க முயன்றது அபத்தமான மற்றும் அநியாயமான ஸ்ட்ராட்டஜி.

இது தொடர்பாக அமித்திற்கும் வினோத்திற்கும் இடையே மோதல். வினோத்திற்கும் பிரஜனுக்கும் இடையே பயங்கர சண்டை.  இந்தப் பஞ்சாயத்து நடக்கும் போதே வினோத்தும் கம்ருதீனும் மீண்டும் போர்வையை தூக்கிக் கொண்டு ஓட, அதைத் தடுக்க முயன்றதில் சுபிக்ஷாவின் காலில் அடிபட்டு அழ ஆரம்பித்தார்.

தமிழ் சினிமாவில் ஹீரோவும் ஹீரோயினும் முத்தமிட நெருங்கும் போது காமிரா விலகி அருகிலுள்ள செடி பூக்களைக் காட்டும். அது போல இந்த வன்முறைக் காட்சிகளின் போது வீட்டிலுள்ள இன்டீரியர் காட்சிகளை காமிரா காட்டிக் கொண்டிருந்தது. 

வீடே சந்தைக் கடையாக மாறி ஆளாளுக்கு கத்திக் கொண்டிருக்க ‘சைலன்ஸ்’ என்று கத்தி அமைதியைக் கொண்டு வர போராடினார் சபரி. “நாங்க இன்னமும் எடுக்கலேன்னு எப்படியெல்லாம் கலாய்க்கறீங்க.. அப்ப எப்படித்தான் நெக்லஸ எடுக்கறது?” என்று தாங்கள் செய்த முரட்டுத்தனத்திற்கு சப்பைக் கட்டு கட்டினார் கம்ருதீன். 

இவர்களைச் சமாளிக்க முடியாமல் “என்னால முடியல.. உடம்பு சரியில்லாம இவங்களை மேய்க்கறது கஷ்டமா இருக்கு” என்று அழ ஆரம்பித்தார் வீட்டு ‘தல’ ரம்யா. ஒருவழியாக திரும்பி வந்த ரம்யா கண்ணீர் காயாமல் கூட்டத்திடம் பேச ஆரம்பிக்க “அது ஏன் எங்களைப் பார்த்து சொல்றீங்க?” என்று பாரு அலப்பறையை ஆரம்பிக்க மீண்டும் கலாட்டா. 

‘பிக் பாஸ் ஏதோ சொல்லப் போறாரு.. சும்மா இருங்க’ என்று கத்தியும் பாருவும் FJவும் உக்கிரமாக சண்டை போட்டுக் கொண்டார்கள். செல்லப் பிள்ளையான விக்ரமை கன்ஃபெஷன் ரூமிற்கு கூப்பிட்டார் பிக் பாஸ். டாஸ்க் லெட்டரை கொண்டு வந்த விக்ரம், இவர்கள் செய்த கலாட்டா காரணமாக “ஆக்டிவிட்டி ஏரியாவிற்கு உடனே வாங்க.. இல்லைன்னா சாவுங்க” என்று அதுவரை அடக்கி வைத்திருந்த கோபத்தை வெளியில் கொட்டினார். இவர்களின் சந்தைக் கடை இரைச்சலைப் பார்த்தால் நமக்குமே அப்படித்தான் எரிச்சல் வந்தது. 

ஆங்கில எழுத்துக்களை சரியாக அடுக்குவதின் மூலம் உணவுப் பொருளின் பெயரை உருவாக்கி அதை கீழே சரியாமல் கொண்டு வந்தால், சம்பந்தப்பட்ட உணவு ஜெயித்த அணிக்கு கிடைக்கும். இதில் ரெட்ரோ சினிமா அணி வெற்றி பெற்றது. 

இது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த டாஸ்க்கிலும் ரெட்ரோ சினிமா அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணியில் உள்ள அனைவரும் நாமினேஷன் ஆபத்திலிருந்து தப்புவார்கள். போலவே இந்த டாஸ்க்கில் தோற்ற மாடர்ன் சினிமா அணியில் உள்ள அனைவரும் எவிக்ஷன் ஆபத்தை எதிர்கொள்வார்கள். 

‘இத்துடன் இந்த டாஸ்க் முடிந்தது’ என்று சொன்னதை விடவும் ‘சந்தைக் கடை டாஸ்க் முடிந்தது’ என்று சொல்லியிருக்கலாம். அத்தனை சண்டை. 

சற்று அடாவடி பேர்வழியாக இருந்தாலும் தனது காமெடி பன்ச்களின் மூலம் கவனத்தைக் கவர்ந்த வினோத், இந்த இரண்டு நாட்களில் கம்ரூதீனைப் போல முரட்டுத்தனமாக கோபம் கொண்டு பெயரைக் கெடுத்துக் கொண்டார் எனலாம். பிரஜன், திவ்யா, அமித், ஆதிரை என்று பலரிடமும் இன்று உக்கிரமான சண்டை போட்டார். 

டாஸ்க் முடிந்து அநாதையாக கிடந்த நெக்லஸைப் பார்த்து “கொஞ்ச நேரம் முன்னாடி வரைக்கும் உன்னைக் கைப்பற்ற அத்தனை சண்டை நடந்தது. இப்ப பார்த்தியா… உன்னை அப்படியே போட்டுட்டு போயிட்டாங்க. இதுதான் மனுஷ குணம்” என்று நெக்லஸை கொஞ்சுவதின் மூலம் காதல் தத்துவம் பேசிக் கொண்டிருந்தார் அரோ. 

சீசனின் ஆரம்பத்திலேயே விக்ரம் சொன்னது போல, இந்த சீசனில் கிரியேட்டிவிட்டியை விடவும் நெகட்டிவிட்டிதான் அதிகமாக இருக்கிறது. இதன் உற்பத்தியாளர்களாக பாரு போன்றவர்களைச் சொல்லலாம்.!

BB Tamil 9: "இப்போ எனக்கு எல்லாம் புரியுது" - அரோராவின் காலில் விழுந்த கம்ருதீன்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 60 நாட்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்த நிகழ்ச்சியில் 9 பேர் வெளியாகி இருக்கும் நிலையில் கடந்த வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை. மேலும் ஹவுஸ்மேட்ஸ... மேலும் பார்க்க

BB Tamil 9: "வினோத்துக்கு டைட்டில் வின்னர் பட்டம் கொடுக்குறதை ஏத்துக்கவே முடியாது"- காட்டமான ஆதிரை

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 60 நாட்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்த நிகழ்ச்சியில் 9 பேர் வெளியாகி இருக்கும் நிலையில் கடந்த வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை. மேலும் ஹவுஸ்மேட்ஸ... மேலும் பார்க்க

AVM Saravanan: ``ஷூட்டிங் ஸ்பாட்டுல ஆர்ட்டிஸ்ட்டுகளை பாராட்ட மாட்டார் ஏன்னா..." - நடிகை ராணி

சினிமா மட்டுமில்லாமல் சீரியல்களையும் தயாரித்திருக்கிறது ஏவிஎம் நிறுவ்னம். 'சொர்க்கம்', 'ஆசை' உள்ளிட்ட ஏவிஎம் தயாரித்த பல தொடர்களில் நடித்த நடிகை ராணியிடம் பேசினோம்.''டிவி நடிகர் நடிகைகளுக்கு வேலை தரணு... மேலும் பார்க்க

BB Tamil 9: Day 59: `இதை நான் எந்த சீசன்லயும் சொன்னதில்ல’ உக்கிரமான பிக் பாஸ்; எல்லை மீறிய கம்ருதீன்

சினிமா கேரக்டர்களைத் தந்து ‘இதையாவது ஒழுங்கா பண்ணுங்க’ என்றால் அதிலும் ஒரே சண்டை போட்டு நாறடிக்கிறார்கள்.அரோரா கூட இருக்கும் வரைக்கும் கொஞ்சம் திருந்தி வாழ்ந்த கம்ருதீன், பாருவுடன் முழுதாக இணைந்த பிறக... மேலும் பார்க்க

BB Tamil 9: ``நீ யார் என்னைப் பத்தி பேசுறதுக்கு'' - FJ பார்வதி மோதல்; கலவரமான பிக் பாஸ் வீடு

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 59 நாட்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்த நிகழ்ச்சியில் 9 பேர் வெளியாகி இருக்கும் நிலையில் கடந்த வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை. மேலும் ஹவுஸ்மேட்ஸ... மேலும் பார்க்க