'வணிக சிலிண்டர் விநியோகம் 10 நாள்களில் சீராகும்' - மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் ...
ரத்தன் டாடா வாழ்ந்த வீடு; ரூ.17.6 லட்சம் வாடகைக்கு விட்ட டாடா நிறுவனம் - நோயல் டாடா குடியேற முடிவு?
தொழிலதிபர் ரத்தன் டாடா, டாடா குழுமத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகிய பிறகு தென்மும்பையில் 3 மாடிகள் கொண்ட பக்தவார் என்ற கட்டடத்தில் வசித்து வந்தார். இக்கட்டடம் மும்பை கொலாபா பகுதியில் இருக்கிறது. 13,200 சதுர அடி கொண்ட இந்த வீட்டில் ரத்தன் டாடா இறக்கும் வரை வசித்து வந்தார். அவர் இறந்த பிறகு அந்த வீடு டாடா நிறுவனத்திற்கு சொந்தமான ஈவார்ட் இன்வெஸ்ட்மென்ட் என்ற கிளை நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. தற்போது அந்த வீட்டை டாடா சன்ஸ் நிர்வாகம் குத்தகைக்கு எடுத்து இருக்கிறது.
ரத்தன் டாடா 2024ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி இறந்தார். அவர் இறந்த அடுத்த நாளான அக்டோபர் 10ம் தேதியில் இருந்து இந்த குத்தகை ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. ஒரு மாதத்திற்கு ரூ.17.60 லட்சம் மாத வாடகையாகும். இந்த ஒப்பந்தம் கடந்த பிப்ரவரி 6ம் தேதி பதிவு செய்யப்பட்டிருந்தாலும், இது அக்டோபர் 10, 2024 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

மொத்தம் ஐந்து ஆண்டுகள் செல்லுபடியாகும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் மாத வாடகையில் 10 சதவீத உயர்வு இருக்கும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தவிர வட்டி இல்லாத பாதுகாப்பு வைப்புத்தொகையாக ரூ. 10 கோடி செலுத்தப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்காக சுமார் ரூ. 4.63 லட்சம் முத்திரை வரியாக (Stamp duty) செலுத்தப்பட்டுள்ளது. வரலாற்று ரீதியாக இந்த வீடு டாடா குடும்பத்தோடு மிகவும் நெருக்கமானது ஆகும். இந்த வீட்டை தற்போது தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஈவார்ட் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனம் டாடா குழுமத்தின் பல்வேறு பட்டியலிடப்பட்ட மற்றும் பட்டியலிடப்படாத நிறுவனங்களில் சிறு பங்குகளைக் கொண்டுள்ளது.
தற்போதைய சந்தை நிலவரப்படி ரத்தன் டாடா வசித்து வந்த வீட்டின் மதிப்பு ரூ.150 கோடியாகும். மகாராஷ்டிரா வீட்டுவசதி மற்றும் பகுதி மேம்பாட்டு வாரியம் கடந்த 2004 ஆம் ஆண்டில் இந்த கட்டடம் மிகவும் சிதிலடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, 2008 ஆம் ஆண்டில் இக்கட்டடம் புதிதாக கட்டப்பட்டது. இந்த வீடு ரத்தன் டாடாவிற்கு டாடா குழுமம் தனது விருப்பத்தின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டது.
அவர் மறையும் வரை அவர் டாடா டிரஸ்ட்ஸ் தலைவராக இருந்ததால் அவருக்கு இந்த வீடு நிரந்தரமாக ஒதுக்கப்பட்டு இருந்தது. பிரபல கட்டடக் கலைஞர் ரத்தன் பாட்லிபாய் உதவியுடன், ரத்தன் டாடாவே இந்த வீட்டை வடிவமைத்து தனது விருப்பப்படி கட்டினார். ரத்தன் டாடாவின் மறைவுக்குப் பிறகு, டாடா டிரஸ்ட்ஸ் (Tata Trusts) தலைவராகப் பொறுப்பேற்றுள்ள நோயல் டாடா இந்த இல்லத்திற்கு மாறக்கூடும் என்று கூறப்படுகிறது.
நோயல் டாடா தற்போது மும்பையின் கஃப் பரேடில் உள்ள விண்டர்மேர் என்ற ஆறு அடுக்கு மாடி குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். ரத்தன் டாடாவின் மறைவுக்குப் பிறகு அவர் வசித்த இல்லம் காலியாக இருப்பதைத் தவிர்க்கவும், டாடா குடும்பத்தின் பாரம்பரியத்தைத் தொடரவும் நோயல் டாடா இங்கு குடியேற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. நோயல் டாடா அல்லது குழுமத்தின் மூத்த நிர்வாகிகள் தங்குவதற்கு ஏதுவாகச் செய்யப்பட்ட ஏற்பாடாகவே டாடா சன்ஸ் நிறுவனம் இந்த இல்லத்தை குத்தகைக்கு எடுத்திருப்பதாக பார்க்கப்படுகிறது.



















