'வணிக சிலிண்டர் விநியோகம் 10 நாள்களில் சீராகும்' - மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் ...
ஆரண்ய காண்டம்: `அந்தக் காட்சிக்கு மட்டும் 15 டேக் எடுத்தேன்.!' - 'சுப்பு' யாஸ்மின் பேட்டி
இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவின் 'ஆரண்ய காண்டம்' திரைப்படம் இந்த வாரம் ரீ ரிலீஸ் ஆகிறது.
புதுமையான திரைமொழி, தமிழின் முதல் நியோ நாயர் திரைப்படம் என புதியதொரு பார்முலாவை தமிழ் சினிமாவுக்கு இப்படம் அறிமுகப்படுத்தியது. சில படைப்புகள், காலம் தாமதமாகி கொண்டாடப்படும்.

அப்படி இப்படைப்பு ரிலீஸுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு இணையவாசிகளால் பெரியளவில் கொண்டாடப்பட்டது. இன்று கல்ட் க்ளாசிக் திரைப்படமாகவும் இப்படம் மாறியிருக்கிறது.
ரீ ரிலீஸையொட்டி படத்தில் சுப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்த யாஸ்மின் பொன்னப்பாவை பேட்டி கண்டேன்.
நம்மிடையே பேசிய யாஸ்மின், "'ஆரண்ய காண்டம்' படத்தை கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி நான் மறுபடியும் பார்த்திருந்தேன். நண்பரொருவர் பார்க்கணும்னு கேட்டிருந்தார். அவருக்கு கம்பெனி கொடுக்க நானும் படத்தை மீண்டும் உட்கார்ந்து முழுமையாக பார்த்தேன்.
இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இப்போ மறுபடியும் படம் ரீ ரிலீஸ் ஆகுறதுல ரொம்ப மகிழ்ச்சியாகவும் ஆவலாகவும் காத்திருக்கேன்." என விறு விறுப்பாக பேசத் தொடங்கினார்.

"பெங்களூருல ஒரு பிரபல புகைப்படக் கலைஞர் மூலமாக நான் மாடலிங் துறைக்குள்ள வந்தேன். மும்பையில நான் மாடலிங் செய்யும்போது ஒரு விளம்பர படத்துல நடிச்சிருந்தேன். அந்த விளம்பர படத்தை குமாரராஜா சார் பார்த்திருக்கார். பிறகு என்னை படத்துக்காகக் கூப்பிட்டார். பிறகு ஆடிஷன் பண்ணினேன். அப்புறம் ரிஹர்சல் பண்ணி சுப்பு கேரக்டருக்குள்ள நான் வந்தேன்.
நடிப்பின் பக்கம் வருவேன்னு நான் துளியும் எதிர்பார்க்கல. இட்ஸ் ஜஸ்ட் ஆன் ஆக்ஸிடென்ட்! முதல் படத்திலேயே இப்படியான ஒரு கிரே ஷேட் கேரக்டர் செய்யுறோம்னு எனக்கு எந்த தயக்கமும் இல்ல. சொல்லப்போனால், அப்படியான விஷயங்களை நான் யோசிச்சும் பார்க்கல. ஏன்னா, நடிகர்களுக்கு இப்படியான பெர்பார்மென்ஸ் இருக்கிற கேரக்டர் அமைவது ரொம்பவே பெருசு. ஸ்டீரியோடைப் பத்தின யோசனைகள் இல்லாமல் நடிக்க ஒப்புகிட்டேன்.
ஆனா, படம் ரிலீஸுக்குப் பிறகு அந்த ஸ்டீரியோடைப் தொடர்ந்ததுனுதான் சொல்லணும். வில்லி மாதிரியான கேரக்டர்கள் நிறைய கேட்டு வந்தாங்க. ஆனா, ஒரே மாதிரியான கதாபாத்திரங்கள் செய்வதில் எனக்கு உடன்பாடில்லை." என்றவர்,
"ஆனா, ஒரு விஷயம்... இப்போ வரைக்கும் நான் எங்கப் போனாலும் என்னை சுப்புனுதான் அடையாளப்படுத்துறாங்க. எனக்கு அக்கதாபாத்திரம் மரியாதையையும் தேடித் தந்திருக்கு. சுப்புக்குள்ள ஒரு ஆட்டிடியூட் இருக்கும். அந்த விஷயத்துல என்னோட பர்சனலாகவும் சுப்பு கேரக்டர் கனெக்ட் ஆச்சு. என்னுடைய கேரக்டரை தாண்டி ஐயா கேரக்டரும், சப்பை கேரக்டரும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

சப்பையை அனைவரும் நசுக்கப் பார்ப்பாங்க. ஆனா, அவனுக்குள்ள ஒரு தைரியம் இருக்கும். அது எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது. என்னுடைய கேரக்டர் கடைசியில ஹீரோ மாதிரி இருக்கும். நிறைய ஃபீமேல் ஓரியன்டட் படங்கள் வந்திருக்கு.
ஆனா, அதுல முதன்மை கதாபாத்திரங்கள் போலீஸ் மாதிரி பவர்புல்லாக இருக்கிற மாதிரி காட்சிப்படுத்தியிருப்பாங்க. இந்தப் படத்துல அப்படியில்லாமல் நான் ஹீரோவாகத் தெரிவேன்." என்றார்.
"சின்ன வயசுல 'ராம் லக்கான்' மாதிரியான ஜாக்கி ஷெரஃப் சாருடைய படங்களை நான் ரசிச்சு பார்த்திருக்கேன். ஸ்டார்ங்கிற உணர்வை அவர் ஷூட்டிங்ல கொடுக்கமாட்டார். எல்லோரிடமும் ஜோவியலாக பழகுவார். சொல்லப்போனால், தமிழ் கத்துக்கவும் அவர் ஷூட்டிங் ஸ்பாட்ல முயற்சி செய்வார்.
பெரிய நட்சத்திரங்கள்கூட நடிக்கும்போது கொஞ்சம் நடுக்கம் இருக்கும். ஆனா, அப்படியான விஷயங்களை எங்களுக்குக் கொடுக்காமல், நாங்க நடிப்பைக் கொண்டு வர்றதுக்கு இயல்பாக்கினாரு.
குமாரராஜா சார் பத்தி அனைவருக்குமே தெரியும். படத்துல நான் சமோசா சாப்பிடுற மாதிரி ஒரு சீன் இருக்கும்.
கிட்டத்தட்ட அந்தக் காட்சிக்கு மட்டும் 15 டேக் எடுத்தேன். நான் நடிச்ச சீன்கள்ல இதுதான் அதிகமான டேக் எடுத்தது. படத்துல எனக்கு நிறைய முக்கியமான வசனங்கள் இருக்கும். அதுல எனக்கு லைஃப் சைக்கிள் பத்தி வருகிற ஒரு வசனம் ரொம்ப பிடிக்கும்.
ஏன்னா, படத்துல நான் பேசுற வசனங்கள் அத்தனைக்கும் தத்துவரீதியான அர்த்தங்கள் இருக்கும்." என்றவர், "க்ளைமேக்ஸ்ல நான் பேசுற காட்சி ரொம்பவே முக்கியமானது. அந்தக் காட்சியை நான் 5 டேக்ல முடிச்சிட்டேன்.

அந்த சீன்ல 'ஓரம் போ' படத்தோட யூனிவர்ஸ் கனெக்டும் இருக்கும். அப்போவே, ஈஸ்டர் எக் மாதிரியான விஷயம்னு தெளிவாக எங்களுக்கு குமாரராஜா சார் விளக்கிட்டாரு." எனப் பேசினார்.
மேலும் பேசியவர், "எனக்கு அது முதல் படம் மாதிரியே தெரியலைனு நிறைய பேர் பாராட்டினாங்க. 'ஆரண்ய காண்டம்' படத்துக்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனா, ஒரே மாதிரியான கேரக்டர்ஸ்தான் வந்தது. சுப்பு கேரக்டர் அவ்வளவு ஸ்ட்ராங்காக இருந்ததுனாலதான் ஸ்டீரியோடைப் ஃபாலோ ஆச்சுனு நினைக்கிறேன்.
படத்துல ஏதோவொரு முக்கியமான விஷயம் இருக்கிறதுனாலதான் இப்போ படம் ரீ ரிலீஸ் ஆகுது. இப்போ கல்ட் கிளாசிக் படமாக இது கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கு." என்றவரிடம் அவருடைய அடுத்த ரிலீஸ்கள் பற்றி கேட்டோம். அவர், " சுவாரஸ்யமான கதாபாத்திரங்களுக்கு நான் காத்துட்டு இருக்கேன். பார்ப்போம்!" எனப் பேசி முடித்தார்.



















