மகாருத்ர ஹோமம்: 2026 உங்களுக்கு அதிர்ஷ்ட ஆண்டாக அமையும்! ஆயுள் ஆரோக்கியம் ஐஸ்வர்...
அமெரிக்காவை அதிரவைத்த பேருந்து புறக்கணிப்பு போராட்டம்! 70 ஆண்டுகள் கடந்தும் கவனம்பெறும் `டிசம்பர் 5’
பேருந்துகள் என்பது வெறும் போக்குவரத்து வாகனம் மட்டுமல்ல. நவீன சமுதாயத்தின் கட்டமைப்பு. பேருந்துகள் என்பவை பலரது வாழ்வாதாரத்திற்கான கடத்து சங்கிலி, சாமானிய மக்களை வாழ்வின் அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் இயங்கு சாதனம், விளிம்புநிலை மக்களை சமூக கட்டமைப்பிலிருந்து விடுவிக்கும் விடுதலை களம்.
75 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில், விஞ்ஞான வளர்ச்சியில் விண்வெளிக்கே ஏவுகணை ஏவும் இந்த காலகட்டத்தில், சாலை வசதி கேட்டும் , பேருந்து வசதி கேட்டும் அதிகார மையங்களில் மனு அளித்து போராடும் நிலைதான் இருக்கிறது என்பது மறுக்க முடியாதது.
இன்றைக்கும் கிராமங்களில் பேருந்துக்கான போராட்டம் நடந்துகொண்டு தான் இருக்கிறது.

2021ல் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த கர்ணன் திரைப்படத்தில் பொடியன்குளம் கிராமத்திற்கென பேருந்து நிறுத்தமே இல்லாத நிலையில், மாற்று சாதியினர் வசிக்கும் பக்கத்து கிராமத்தில் சென்றுதான் பேருந்தைப் பிடிக்க வேண்டிய காட்சி நினைவிருக்கும். இத்திரைப்படத்தில் வரும் பேருந்துக்கான போராட்டம் என்பது ஒடுக்கப்பட்டோருக்கான சமத்துவ உரிமையை கோருகிறது.
இந்த நிலை பல கிராமங்களில் இன்றும் நிலவும் சூழலில், உலகின் வல்லரசு நாடாக கருதப்படும் அமெரிக்காவில் அலபாமா மாகாணத்தில் மாண்ட்கோமெரி நகரில் 70 ஆண்டுகளுக்கு முன்பு நிற பாகுபாட்டால், வெள்ளையினத்தவர் அமர வேண்டும் என்பதற்காக ஆப்ரிக்க அமெரிக்கர்களுக்கு ஒதுக்கப்பட்ட பேருந்து இருக்கையிலிருந்து எழ மறுத்த பெண்ணின் செயல், அடுத்த ஓராண்டு, அமெரிக்காவில் புரட்சிக்கான கனலை பற்ற வைத்தது.
என்ன நிகழ்ந்தது?
அன்றைய அமெரிக்காவில் பேருந்துகளில் வெள்ளை இனத்தவருக்கு என முன்பக்கங்களில் இருக்கையும் பின்புறத்தில் ஆப்ரிக்க அமெரிக்கர்களுக்கு இருக்கையும் ஒதுக்கப்பட்டிருக்கும். டிசம்பர் 1,1955 அலபாமா மாகாணத்தில் மாண்ட்கோமெரி என்ற நகரில் பேருந்து ஒன்றில் வெள்ளை இனத்தவர்க்கான இருக்கை முழுவதுமாக நிரம்பிவிட்ட நிலையில் ,வெள்ளை இனத்தவர்க்காக ஆப்ரிக்க அமெரிக்க மக்கள் அமரும் இருக்கையில் அமர்ந்திருந்த ரோசா பார்க்ஸை ஏழ பேருந்து ஓட்டுனர் கேட்டுக்கொண்டார்.

ஆனால் இதை கேட்க மறுத்த ரோசா பார்க், "பயணத்திற்காக டிக்கெட் எடுத்துள்ளேன். இது எனக்கான இருக்கை, நான் எழமாட்டேன்" என்று உறுதிப்பட கூறினார்.
இதனால் கோபமுற்ற பேருந்து ஓட்டுநர் காவலர்களை அழைத்து விதிகளை மீறியதாக குற்றம் சுமத்தினார். காவல்துறையோ சட்டப்படி நடக்காமல் அவருக்கு அபராத தொகை விதித்து கைது செய்தனர்.
இந்த நிகழ்வு அமெரிக்காவில் பெரும் புரட்சி தீயை பற்ற வைத்தது. மாண்ட்கோமெரியில் 70% பேருந்துகளை பயன்படுத்துவோர் ஆப்ரிக்க அமெரிக்க மக்கள். இந்த நிகழ்வால் பேருந்துகளை புறக்கணிக்க முடிவு செய்தனர்.
டாக்ஸிகளில் பயணம் செய்ய தொடங்கினர் . பணம் இல்லாதவர்கள் நடக்கத் தொடங்கினர். பேருந்தில் சென்று படிக்கும் நிலையில் உள்ள குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை. ஆப்ரிக்க அமெரிக்க மக்களின் விடுதலைப் போராளி மாட்டின் லூதர் கிங் தலைமையில் இந்த போராட்டம் அமெரிக்கா முழுவதும் பரவியது.
மேடைப் பேச்சுகள், துண்டறிக்கைகள் எனப் போராட்டங்கள் வேகமெடுத்தன. இந்த முடிவால் பேருந்து நிறுவனங்கள் நட்டத்தில் நடை போடத் தொடங்கின. ரோசா பார்க்ஸ் மீதான வழக்கு விசாரணையால் வேலை பறிபோனது. பொது இடங்களில் ஆப்ரிக்க அமெரிக்கர்களுக்கு உரிய மரியாதையோடு இருக்கைகள் வழங்கப்படவேண்டும் என்பதில் உறுதி காட்டினார்.

டிசம்பர் 5, 1955 ல் தொடங்கிய பேருந்து புறக்கணிப்பு டிசம்பர் 20,1956 வரை,13 மாதங்கள், அதாவது 381 நாட்கள் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் ஆப்ரிக்க அமெரிக்க மக்களுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. பேருந்துகளில் இரு வேறு பிரிவுகளுக்கு தனித்தனியாக இருக்கை இருப்பது சட்டப்படி குற்றம் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

மனிதன் எந்த நிறத்தில் இருப்பினும் சக மனிதரை மனிதர் மதிக்க வேண்டும் என்ற அடிப்படை உரிமையை நிலைநாட்ட ரோசா பார்க்ஸ் தனது இருக்கையை தர மறுத்து போராடியது அமெரிக்க வரலாற்றில் ஆப்ரிக்க அமெரிக்க மக்கள் போராட்டத்தின் மைல்கல்.!

















