சேலம்: சாலை அமைக்கும் பணியில் தகராறு; மூதாட்டியைத் தாக்கிய அதிமுக முன்னாள் எம்எல...
தேதி குறித்த திருமா; 234 மா.செ-க்கள்; மறுசீரமைக்கப்படும் வி.சி.க? - பரபரக்கும் அம்பேத்கர் திடல்!
2026 சட்டமன்றத் தேர்தல் ஆயத்த பணிகள் தமிழகத்தில் அனலடிக்கத் தொடங்கியிருக்கும் சூழலில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மறுசீரமைப்பு பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார் திருமாவளவன். வி.சி.க-வில் நடக்கவிருக்கும் மாற்றங்கள் குறித்து அம்பேத்கர்திடல் வட்டாரத்தில் விரிவாக விசாரித்தோம்.
'மறுசீரமைக்கப்படும் வி.சி.க!'
நம்மிடம் பேசிய வி.சி.க மாநில நிர்வாகிகள் சிலர், "வட மாவட்டங்கள் மட்டுமில்லாமல், தமிழ்நாடு முழுக்கவே கட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்த விரும்புகிறார் திருமா. நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக 2023 செப்டம்பரில், 88 ஆக இருந்த மாவட்டச் செயலாளர் எண்ணிக்கையை 144 ஆக உயர்த்தினார். அதிலும் வன்னியர்கள், இளைஞர்கள், பெண்களுக்கு தலா 10% ஒதுக்கீடு செய்யப்பட்டது. சட்டமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாகும் விதமாக மீண்டும் கட்சி மறுசீரமைப்பில் கவனம் செலுத்தி வருகிறார் எங்கள் தலைவர்" என்றனர்.

'234 மா.செ-க்கள்..!
தொடர்ந்து பேசியவர்கள், "ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற அடிப்படையில் 234 மாவட்டச் செயலாளர்களை நியமிக்கும் வேலைகள் நடக்கின்றன. ஏற்கனவே 2-3 தொகுதிகளுக்கு ஒரு மா.செ-க்கள் என்றிருந்த நிலையை 144 மா.செ-க்கள் உள்ள நிலையில் கூடுதலாக 90 மா.செ-க்களை நியமித்து டிசம்பர் 6-ம் தேதி அறிவிப்பு வெளியாகலாம்.
இதனால் உட்கட்சிப் பிரச்னைகள் உருவாகும் அபாயம் இருந்தாலும் 'Decentralisation of Power' என்பதை இலக்காகக் கொண்டிருக்கிறோம். புதிய மாவட்டச் செயலாளர்களின் மூலம் வட மாவட்டங்களை தாண்டி மத்திய, தென் மாவட்டங்களில் பூத் கமிட்டியை வலுப்படுத்தவுள்ளோம். கூடுதலாகத் தொகுதிவாரியாக துணை மா.செ-க்களையும், தொகுதிக்கு ஒரு செய்தித் தொடர்பாளரையும் தேர்ந்தெடுக்கவுள்ளோம். கூடவே மண்டலச் செயலாளர்களை நியமிக்கவும் திட்டமிடுகிறார் திருமா" என்றனர்.

'அப்செட் நிர்வாகிகள்'
நம்மிடம் பேசிய அரசியல் நோக்கர்கள் "கட்சியை வலுப்படுத்த திருமா இதுபோன்ற முன்னெடுப்புகளை மேற்கொண்டாலும் இது உட்கட்சி மோதலுக்கு வழிவகுக்கும் அபாயங்களும் உள்ளன. இந்த மறுசீரமைப்பின் மூலம், 2-3 தொகுதிகளை தன்வசம் வைத்திருக்கும் மா.செ-க்கள் 2 தொகுதிகளை ஜூனியர்களுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும். ஜூனியர் - சீனியர் வேறுபாடுகளின்றி கட்சிப் பொறுப்புகளை வடிவமைப்பது சரி என்றாலும் அதனை கட்சிக்காரர்கள் ஏற்கிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்றனர்.















