Kuttram Purindhavan Review: பரபர த்ரில்லர் வெப் சீரிஸ்; வெல்கிறதா பசுபதி - விதார...
``இந்தியாவும் ரஷ்யாவும் 2030 வரைக்குமான பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தை எட்டியுள்ளன!" - மோடி
உக்ரைன் மீது ரஷ்யா போர் (2022) தொடங்குவதற்கு முந்தைய ஆண்டு (2021) கடைசியாக இந்தியா வந்த ரஷ்ய அதிபர் புதின், நான்காண்டுகளுக்குப் பிறகு இரண்டு நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார்.
அவரின் வருகையைத் தொடர்ந்து டெல்லியில் ரஷ்யா - இந்தியா 23-வது உச்சி மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டுக்குப் பின்னர் புதினும், பிரதமர் மோடியும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி,

இந்தியாவும் ரஷ்யாவும் 2030 வரைக்குமான பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தை எட்டியுள்ளன!
``கடந்த எட்டு தசாப்தங்களாக, உலகம் ஏராளமான ஏற்ற தாழ்வுகளைக் கண்டுள்ளது. மனிதகுலம் பல சவால்களையும் நெருக்கடிகளையும் கடந்து செல்ல வேண்டியிருந்தது.
இவை அனைத்திற்கும் மத்தியில், இந்தியா - ரஷ்யா நட்பு ஒரு துருவ நட்சத்திரத்தைப் போல உறுதியாக உள்ளது. பரஸ்பர மரியாதை மற்றும் ஆழ்ந்த நம்பிக்கையில் நிற்கும் இந்த உறவு எப்போதும் காலத்தின் சோதனையைத் தாங்கி நிற்கிறது.
இந்தியாவும் ரஷ்யாவும் ஒரு புரிந்துணர்வுடன் 2030 வரைக்குமான பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தை எட்டியுள்ளது. இது ஏற்றுமதி, கூட்டு உற்பத்தி மற்றும் கூட்டு கண்டுபிடிப்புகளுக்கு புதிய கதவுகளைத் திறக்கும்.
அதோடு, யூரேசிய பொருளாதார ஒன்றியத்துடன் ஒரு FTA (Free Trade Agreement)-வை முன்கூட்டியே முடிவுக்குக் கொண்டுவருவதற்கு இரு தரப்பும் பாடுபடுகின்றன.
இந்தியா - ரஷ்யா கூட்டாண்மையின் வலுவான தூண் எரிசக்தி பாதுகாப்பு!
25 ஆண்டுகளுக்கு முன்பு, அதிபர் புதின் இந்தியா - ரஷ்யா மூலோபாய கூட்டாண்மைக்கு அடித்தளமிட்டார்.
15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த உறவு, சிறப்பு மற்றும் சலுகை பெற்ற மூலோபாய கூட்டாண்மையாக உயர்த்தப்பட்டது. கடந்த 25 ஆண்டுகளில் அவர் இந்த உறவை தொடர்ந்து வளர்த்து வருகிறார்.
எரிசக்தி பாதுகாப்பு இந்தியா - ரஷ்யா கூட்டாண்மையின் வலுவான மற்றும் முக்கியமான தூண். இந்த வெற்றிக் கூட்டணியை நாங்கள் தொடர்வோம்.

உலகம் முழுவதும் பாதுகாப்பான மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட விநியோகச் சங்கிலிகளை உறுதி செய்வதற்கு, முக்கியமான கனிமங்களில் நமது கூட்டுறவு மிக முக்கியமானது.
இது தூய்மையான எரிசக்தி, உயர் தொழில்நுட்ப உற்பத்தி மற்றும் புதுயுகத் தொழில்களில் நமது கூட்டாண்மைக்கு உறுதியான ஆதரவை அளிக்கும்.
இப்போது இந்திய கடற்படையினருக்கு துருவ நீரில் பயிற்சி அளிப்பதில் நாம் ஒன்றிணைவோம். இது ஆர்க்டிக்கில் (Arctic) நமது கூட்டுறவை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், இந்திய இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும்.
இந்தியா நடுநிலையானது அல்ல!
உக்ரைன் பிரச்னையில் இந்தியா தொடக்கத்திலிருந்தே அமைதிக்காக வாதிட்டு வருகிறது. இதில் அமைதியான மற்றும் நீடித்த தீர்வுக்காக மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளையும் நாங்கள் வரவேற்கிறோம்.
இந்தியா எப்போதும் தனது பங்களிப்பை வழங்கத் தயாராக உள்ளது. இது எதிர்காலத்திலும் அப்படியே இருக்கும்.
தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவும் ரஷ்யாவும் நீண்ட காலமாக தோளோடு தோள் நின்று வருகின்றன.
அது பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலாக இருந்தாலும் சரி, குரோகஸ் நகர கட்டடத்தின் மீதான கோழைத்தனமான தாக்குதலாக இருந்தாலும் சரி. இந்த சம்பவங்கள் அனைத்திற்கும் மூல காரணம் தீவிரவாதம் ஒன்றுதான்.

தீவிரவாதம் என்பது மனிதகுலத்தின் விழுமியங்கள் மீதான நேரடித் தாக்குதல் என்றும், அதற்கு எதிரான உலகளாவிய ஒற்றுமை நம்முடைய மிகப்பெரிய பலம் என்றும் இந்தியா நம்புகிறது.
எதிர்காலங்களில், நமது நட்பு உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள நமக்கு வலிமையைத் தரும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்த நம்பிக்கையே நமது எதிர்காலத்தை வளப்படுத்தும்.
சமீப காலங்களில் நான் உலக சமூகத்தின் தலைவர்களுடன் பேசி இந்த பிரச்னையை விரிவாக விவாதித்த போதெல்லாம், இந்தியா நடுநிலையானது அல்ல என்று எப்போதும் கூறி வருகிறேன்.
இந்தியா தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. அந்த நிலைப்பாடு அமைதிக்கானது. அமைதிக்கான ஒவ்வொரு முயற்சியையும் நாங்கள் ஆதரிக்கிறோம். இந்தியா அமைதியின் பக்கம் உள்ளது. உலகம் அமைதிக்குத் திரும்ப வேண்டும்" என்று கூறினார்.











