Mrunal Thakur: "பச்சை நிறமே பச்சை நிறமே" - மிருணாள் தாக்கூர் லேட்டஸ்ட் போட்டோ ஆல...
`தற்போது தவெக; அங்கிருந்து எங்கு செல்வார் என்று தெரியாது..!' - செங்கோட்டையன் குறித்து நயினார்
"ஒரே பாரதம், உன்னத பாரதம்" என்ற நோக்கத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கும், காசிக்கும் இடையிலான கலாசாரம் மற்றும் ஆன்மிகப் பிணைப்பை வலுப்படுத்தும் விதமாக "காசி தமிழ் சங்கமம் 4.0" என்ற நிகழ்வு நடத்தப்பட்டு வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக, தெற்கே உள்ள காசியான தென்காசியில் இருந்து வடக்கே உள்ள காசி நோக்கி அகத்திய முனிவர் வாகன யாத்திரை இன்று தென்காசி காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் இருந்து தொடங்கி வைக்கப்பட்டது.
மத்திய அமைச்சர் காணொளி வாயிலாக தொடக்கம்:
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் காணொளிக் காட்சி வாயிலாக இந்த வாகன யாத்திரையைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், ZOHO நிறுவனத்தின் ஸ்ரீதர் வேம்பு உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர்.

தமிழ் கலாசாரத்தின் பெருமைகளைச் சுமந்து செல்லும் இந்த வாகன யாத்திரை தஞ்சாவூர், புதுச்சேரி, திருப்பதி, நந்தியால், ஹைதராபாத், நாக்பூர், ஜபல்பூர் மற்றும் பிரயாக்ராஜ் வழியாக வாரணாசியை அடையும் என்று கூறப்படுகிறது. இந்த வாகன யாத்திரை செல்லும் பல்வேறு மாநிலங்களில் சிறப்பு வரவேற்பும் அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன் கூறுகையில், "நமது நாட்டின் பிரதமர் உலக நாடுகளுக்கு எங்குச் சென்றாலும் தமிழ் மொழி பற்றியும், அதன் கலாசாரத்தைப் பற்றியும் பெருமையாகப் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். குறிப்பாக, வாழும் பாண்டிய மன்னராக பாரத பிரதமர் செயல்பட்டு காசியில் தமிழ் சங்கம் மாநாட்டை நான்கு ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.
எஸ்.ஐ.ஆர் குறித்து:
குறிப்பாக, இறந்தவர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருக்கும் நிலையில், அவர்களை நீக்கிவிடக் கூடாது என்பதற்காகத்தான் தி.மு.க போராடுகிறது. எஸ்.ஐ.ஆர்-இல் எந்த விதமான குளறுபடியும் இல்லை, குளறுபடியே தமிழக முதல்வர் மட்டும்தான்.

அ.தி.மு.க - த.வெ.க குறித்து:
மேலும், 50 வருடகால அ.தி.மு.க ஆட்சியில் இருந்துவிட்டு, அப்போது நல்லாட்சி இல்லாதது போல தற்போது த.வெ.க-வின் மூலம் நல்லாட்சி கொடுப்பேன் என்று செங்கோட்டையன் கூறியுள்ளது வருத்தமாக உள்ளது. அ.தி.மு.க-வில் இருந்து தற்போது செங்கோட்டையன் த.வெ.கவிற்குச் சென்றுள்ள நிலையில், அங்கிருந்து எங்குச் செல்வார் என்று தெரியாது.
பா.ஜ.க மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மக்கள் சக்தியோடு உள்ளதால், பொங்கலுக்குப் பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இணையும். எந்தத் தனிநபரை வைத்தும் எந்தக் கட்சியும் இல்லை. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 100 நாட்களே உள்ள நிலையில், தேர்தலுக்கு முந்தைய நாள்கூட அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மக்கள் சக்தி கை ஓங்கி, தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும்" என்று தெரிவித்தார்.
















