வேலூரில், மினி டைடல் பார்க்; திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின் - 600 பேருக்கு வேலை...
தவெக கூட்டம்: "கரூர் செந்தில் பாலாஜி... அங்க ஏன் போனீங்கன்னு கேட்குறாங்க"- ஆதவ் அர்ஜுனா
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
அந்த சமயத்தில் தவெக மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
இந்த சம்பவத்தை அடுத்து, கட்சியின் நிர்வாக நடவடிக்கைகள் முடங்கியிருந்த நிலையில், ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தீவிரமடைந்துள்ளன.

அந்தவகையில் இன்று (நவ.5) மாமல்லபுரத்தில் விஜய் தலைமையில் தவெக சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.
அதில் பேசிய தவெக தேர்தல் வியூக வகுப்பாளர் ஆதவ் அர்ஜுனா, " "சூழ்ச்சியென்றால் என்னவென கரூரில் பார்த்துவிட்டோம். சூழ்ச்சி செய்த திமுக இன்று மக்கள் மத்தியில் குற்றவாளியாக நிற்கிறது.
திமுகவின் பொய்ப் பிரசாரங்களை தனது அமைதியின் மூலம் முறியடித்து மௌனப் புரட்சியை தலைவர் செய்திருக்கிறார்.
நாங்கள் ஓடிவிட்டோமா? நாங்கள் தலைமறைவாகிவிட்டோமா? கலைஞரைக் கைது செய்த போது அவரின் மகன் ஓடினாரே? நாங்கள் வரலாற்றை பேசட்டுமா?
இந்தியாவின் நம்பர் 1 நடிகர், அதிகப்படியான சம்பளம் என அதையெல்லாம் விட்டு விட்டு தலைவர் அரசியலுக்கு வந்திருக்கிறார்.
திமுகவுக்கு 10 வருடம் வேலை பார்த்ததற்காக பாவமன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
2021 தேர்தலின் போது கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து தலைவர் உங்களுக்கு ஆதரவு கொடுத்தாரே? அவர் மீது இவ்வளவு விமர்சனமா?

நாகப்பட்டினத்தில் பேசும்போதே நல்ல இடமும் மக்களுக்கு பாதுகாப்பும் வேண்டும் எனத் தலைவர் பேசினார்.
முதல்வர், துணை முதல்வர் கூட்டங்களுக்கு சுய உதவிக்குழுக்கள் மூலம் மக்களைக் கூட்டுகிறார்கள். நாங்கள் அப்படியா மக்களை கூட்டினோம்?
காவல்துறை அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதம் நாங்கள் 10,000 பேர்தான் வருவோம் எனக் கூறியதாகச் சொல்கிறார்கள்.
நீங்கள் திருவாரூரை பார்க்கவில்லையா? நாகப்பட்டினத்தை பார்க்கவில்லையா? கூட்டம் கூடும் என உங்களுக்கு தெரியாதா? தெரியவில்லையெனில் உள்துறை அமைச்சர் பதவி விலகுங்கள்.
கரூர் செந்தில் பாலாஜி ரவுடிப்பய அங்க ஏன் போனீங்கன்னு கேட்குறாங்க. இன்னும் ஆறே மாசம்தான் இருங்க. பார்த்துக்குறோம்.
கோவை பெண் பாலியல் வன்கொடுமையில், அந்தப் பெண் அந்த நேரத்தில் ஏன் அங்கே சென்றார் என திமுகவினர் கேட்கிறார்கள். உங்கள் வீட்டிலெல்லாம் பெண் பிள்ளைகள் இல்லையா?
எந்த இடத்திலும் இல்லாத வரவேற்பு கரூரில் இருந்தது. எங்களுக்கு சூழ்ச்சி தெரியவில்லை. அதனால்தான் கரூரில் தலைவர் போலீஸூக்கு நன்றி கூறினார்.
சம்பவம் நடந்த அன்று கரூருக்குள் தவெகவினரை காவல்துறையினர் கடுமையாக தாக்கினர். நாங்கள் கரூருக்கு வெளியேயே காத்திருந்தோம்.
எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் சூழ்ச்சி செய்து என்ன செய்தீர்கள் என எங்களுக்குத் தெரியாதா?

இந்தக் குடும்பம் மட்டும்தான் 100 ஆண்டுகள் ஆள வேண்டும் என்ற எண்ணம். பெரிய நடிகர்களெல்லாம் ரெட் ஜெயன்ட்டில் கையெழுத்திட்டு விட்டார்கள். தலைவர் நினைத்திருந்தால் ரெட் ஜெயன்ட் மூலம் 500 கோடி ரூபாய் சம்பாதித்திருக்க முடியும்.
5 வருடத்துக்கு முன்பு மாற்றம் என பேசிய நடிகரெல்லாம் இப்போது இவர்களின் ரெட் ஜெயன்ட்டில் கையெழுத்தை போட்டு இணைந்துவிட்டார்.
செந்தில் பாலாஜியும் அன்பில் மகேஷூம் நடித்ததிலேயே மக்களுக்கு உண்மை தெரிந்துவிட்டது.
எந்த கட்சித் தலைவரும் உயிர்களைப் பலிகொடுக்க நினைக்கமாட்டார் என ஸ்டாலின் பேசுகிறார். ஆனால், தவெக கொல்லும் நீதி வெல்லும் என முரசொலி தலையங்கம் எழுதுகிறது.
துபாய்க்கு தியாகம் செய்ய சென்றதை போல உடனே கரூருக்கு ஒரு நெப்போ கிட் ஓடி வருகிறார். வெறும் 1 மணி நேரம் இருந்துவிட்டு ஓடிவிட்டார்.
முதல்வருக்கு உடல்நிலை சரியில்லை. எழுதிக் கொடுப்பதை பேசுகிறார்.
அதிகார மமதையில் இருக்கிறார்கள். விஜய்க்கு எந்த ஆலோசனையும் தேவையில்லை. விஜய் அதிகம் பேச மாட்டார். எல்லாம் செயலில் காட்டுவார்.
கரூர் டிஎஸ்பி, செந்தில்பாலாஜி தும்மினால் கூட கைக்குட்டையை எடுத்துக்கொடுப்பார்.
நாங்கள் கேட்ட இடத்தை அவர்கள் கொடுக்கவில்லை. திமுகவின் ரவுடி அரசியல் எங்களுக்கு தெரியவில்லை.
அரசியலில் யாரை வேண்டுமானலும் கைது செய்துகொள்ளுங்கள். ஆனால் மக்களின் உயிரில் விளையாடாதீர்கள்.

சட்டசபையை கேலி செய்துக்கொண்டிருக்கிறார்கள். தைரியம் இருந்தால் என் தலைவர் மீது கை வையுங்கள். அதிகாரம் இருந்தால் என்ன வேண்டுமானலும் செய்வீர்களா?
எங்களுக்கும் அரசியல் தெரியும். ஆனால் மக்கள் பாதுகாப்புதான் முக்கியம். உதயநிதி வாக்கிங்போனால் யாரும் கண்டுக்க மாட்டாங்க. எங்க தலைவர் போனால் அவ்வளவு கூட்டம் கூடும்.
சாதி, மதம், ஊழல் பார்த்து அரசியல் செய்யவில்லை. இதற்கு மேல் எங்களுக்கு என்ன கொள்கை வேணும்.
ஸ்டாலின் திமுக என்றால் என்ன தெரியுமா? பேப்பர் கொடுப்பார்கள் அதை அவர் படிப்பார். அவரின் மகனும், மருமகனும் இயக்குவது தான் திமுக. எம்.ஜி.ஆர் பிறகு திமுகவைப் பற்றி நன்றாகத் தெரிந்த ஒரே நபர் நான்தான்" என்று பேசியிருக்கிறார்.

















