வேலூரில், மினி டைடல் பார்க்; திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின் - 600 பேருக்கு வேலை...
இன்று அமெரிக்க உச்ச நீதிமன்ற விசாரணைக்கு வரும் ட்ரம்ப் வரி வழக்கு! - வரிகள் திரும்ப பெறப்படுமா?
இன்று (அமெரிக்க நேரப்படி) உலக நாடுகளின் மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போட்ட வரி வழக்கு அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
ஏன் இந்த வரி?
உலக நாடுகளுடன் அமெரிக்காவிற்கு நிறைய வரி பற்றாக்குறை உள்ளது. அமெரிக்கப் பொருள்களுக்கு பிற நாடுகள் அதிக வரிகளை விதிக்கிறது என்று ட்ரம்ப் முதன்முதலாக உலக நாடுகளின் மீது அதிக வரிகளை விதித்து உத்தரவிட்டார்.
இந்த வரிகளை ட்ரம்ப் ‘தேசிய அவசரநிலை மற்றும் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம், 1977’-க்கு கீழ் தான் நடைமுறைக்கு கொண்டார்.

அதன் பிறகு, இந்த வரிகளின் அமலுக்கு கொஞ்சம் கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்தக் கால அவகாசத்தில் உலக நாடுகள் கட கடவென வர்த்தக ஒப்பந்தங்களைப் பேசி முடித்தது. இதனால், ஒப்பந்தங்கள் முடிந்த நாடுகளுக்கு ட்ரம்ப் வரிகளை குறைத்தார்.
இந்தியா, சீனா உள்ளிட்ட சில நாடுகள் இன்னும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
இன்னொரு பக்கம், இந்த வரி உலக நாடுகள் எப்படி பாதிக்கிறதோ, அமெரிக்க மக்களும் விலை உயர்வு போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர்.
வழக்கு
இதனையடுத்து, இந்த வரிகளை எதிர்த்து அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், "தேசிய அவசர நிலையின் போது, அதிபருக்கு பல அதிகாரங்கள் உள்ளன. ஆனால் அந்த அதிகாரங்களில் வரிகள் விதிப்பது அடங்காது" என்று தீர்ப்பு வழங்கினர்.
இதை எதிர்த்து தான் அமெரிக்க உச்சநீதிமன்றத்தை நாடினார் ட்ரம்ப்.
இன்று அந்த வழக்கின் விசாரணை நடைபெற உள்ளது. இந்த வழக்கை உலகம் உற்றுநோக்கி வருகிறது.

அமெரிக்க அரசாங்கம் தயார்
ஒருவேளை, இந்த வழக்கில் வரிக்கு எதிராக தீர்ப்பு வந்தால், இதுவரை அமெரிக்கா வசூலித்த வரிகளை அந்தந்த நாடுகளுக்கே திருப்பி செலுத்த வேண்டியதாக இருக்கும்.
இதை தவிர்க்க, இந்த வரிகளை அமெரிக்காவிற்குள்ளேயே வைத்துக்கொள்ள பிற வரிச் சட்டங்களை தயார் செய்து வருவதாகவும், கையிலெடுக்க உள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேற்கூறிய சட்டங்களுக்கு கீழ், வரி விதிக்க முடியாது என்றாலும், ட்ரம்ப் அரசு வேறு சட்டங்களின் வழியே உலக நாடுகளின் மீது வரிகளை தொடர்ந்து விதிக்குமாம். அதற்கான நடைமுறைகளையும் தயார் செய்துவிட்டது.
ஆக, தயாராக இருங்கள், உலக நாடுகளே!

















