'ரெண்டே ரெண்டு நிமிஷம் பெண்களே! நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா?’ | உங்கள் கர...
``வாக்குறுதியை முதல்வர் ஏமாற்றிவிட்டார்; மக்கள் என்னை திட்டுகிறார்கள்” - தென்காசி எம்.எல்.ஏ ஆதங்கம்
தென்காசி மாவட்டத்தில், தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் இரட்டைக் குளம் கால்வாய் திட்டம் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதான வாக்குறுதியாக இருந்து வருகிறது.
அந்த வகையில் தி.மு.க சார்பில் கடந்த தேர்தலில் இரட்டைக் குளம் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.
இரட்டைக் குளம் கால்வாய் திட்டம் என்பது அடவிநயினார் அணையில் இருந்து வரக்கூடிய உபரி நீரை சுரண்டை முதல் ஊத்துமலை வரை 30 கிராம விவசாய நிலங்களில் பயன்படக்கூடிய வகையில் கால்வாய் அமைக்கக்கூடிய திட்டமாகும்.
இந்தத் திட்டத்திற்கான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, ரூ. 74 கோடி மதிப்பீட்டில் திட்டம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.

ஆனால் இது தொடர்பாக தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், முதல்வர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களையும் சந்தித்தும் இதுவரை எந்தவித பயனும் இல்லை. தென்காசிக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சமீபத்தில் வந்த முதல்வர் இந்த திட்டத்தை அறிவிப்பார் என எதிர்பார்த்த நிலையில் இது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் மாவட்ட அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்,
“தென்காசியின் முதன்மையான வாக்கு உறுதியாக இரட்டைக் குளம் கால்வாய் திட்டம் மக்களுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் முதல்வர் இந்த திட்டத்தை தனது வாயால் பரப்புரையில் கூறினார்.
ஆனால் தற்போது அது நிறைவேற்றப்படாமல் ஏமாற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நான் தென்காசியில் எங்கும் செல்ல முடியவில்லை. நீ எல்லாம் என்ன எம்.எல்.ஏ என்று மக்கள் என்னை கேள்வி கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.

வரக்கூடிய தேர்தலில் மக்கள் வாக்கு சேகரிக்க விடமாட்டார்கள். எனவே இதனை தமிழக முதல்வர் புரிந்து கொண்டு இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
இல்லையென்றால், இந்த கால்வாய் அமைக்க தேவையான 97 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தி இந்தத் திட்டத்திற்கு அனுமதி கொடுத்தால் போதும்; தானே தனது சொந்த நிதியில் இதனை செய்து முடித்து தனது வாக்குறுதியை நிறைவேற்றிக் கொள்கிறேன் என ஆதங்கத்துடன் கூறினார்.
மக்கள் மேம்பட நானே இந்த திட்டத்தை எனது சொந்த செலவில் செய்ய தயாராக உள்ளதாகவும், முதல்வர் ஏமாற்றியது வேதனை அளிப்பதாக ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

















