மும்பை: மேளதாளம், கரகோஷம், ரோஜா மழை; பயிற்சியாளருக்கு உள்ளூர்வாசிகள் உற்சாக வரவே...
`விஜய்யின் அரசியல் மெசேஜ்; திமுகவின் முக்கியப் புள்ளிகளை அட்டாக் செய்த ஆதவ்' - பொதுக்குழு ஹைலைட்ஸ்
தவெகவின் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது. கரூர் சம்பவத்துக்கு பிறகு முதல் முதலாக விஜய் நிர்வாகிகள் மத்தியில் பேசியிருக்கிறார்.
இந்த சிறப்புப் பொதுக்குழுவின் வழி விஜய் சில அரசியல் மெசேஜ்களையும் கடத்தியிருக்கிறார். பொதுக்குழுவில் நடந்த ஹைலைட்டான விஷயங்கள் என்னென்ன?

கரூர் சம்பவத்துக்கு பிறகு, விஜய் NDA அல்லது அதிமுகவோடு கூட்டணி சேரப்போகிறார் என்பது போன்ற கருத்தாக்கங்கள் அரசியல் களத்தில் உருவாகியிருந்தது.
ஆனால், பனையூர் தரப்பு 2026 தேர்தலில் தங்கள் தலைமையில் ஒரு கூட்டணி அமைத்து மூன்றாவது அணியாக தேர்தலை சந்திக்கவே விரும்புகிறது. இடையில் அதிமுகவின் பிரசாரங்களிலும் தவெக கொடி பறந்திருந்தது.
இதனால் நிர்வாகிகளும் கொஞ்சம் குழப்பத்தில் இருந்தனர். நிர்வாகிகளுக்கு ஒரு தெளிவை ஊட்டவும் விஜய் கூட்டணிக்கு செல்கிறார் என்கிற சித்திரம் மக்கள் மனதில் பதிந்துவிடக் கூடாது என்பதற்காகவும்தான் இது பொதுக்குழு கூட்டம் திடீரென ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும், கரூர் விவகாரத்தில் ஒரு மாதமாக அமைதியாக இருந்துவிட்டதால் தங்கள் தரப்பின் வாதங்களை எடுத்து வைக்கும் மேடையாகவும் விஜய் இதை பயன்படுத்திக் கொள்ள விரும்பியிருக்கிறார்.
கட்சியின் நிகழ்ச்சிகள் மற்றும் பிரசாரங்கள் ஓய்வுபெற்ற காவல்துறையினரை பயன்படுத்தி பாதுகாப்பை மேற்பார்வை செய்ய தவெக தரப்பு திட்டமிட்டிருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு தொண்டரணி மற்றும் ஓய்வுபெற்ற காவல் அதிகாரிகளுக்கான கூட்டம் பனையூரில் நடந்திருந்தது. அந்த ரிட்டையர்டு காவல் அதிகாரிகளின் மேற்பார்வையில்தான் இன்று பாதுகாப்பு நடைமுறைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கோவில்களிலும் பொது நிகழ்வுகளிலும் வரிசைப்படுத்துவதைப் போல சிறு சிறு குழுக்களாக கூட்டத்தை பிரிது Zig Zag ஆக வரிசைப்படுத்தி அரங்கத்துக்குள் நிர்வாகிகளை அனுப்பினர்.
இனி விஜய்யின் நிகழ்ச்சிகளுக்கும் பிரசார பயணங்களுக்கும் இவர்கள்தான் பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாக திட்டமிடப் போகிறார்களாம்.
மேடையில் இருக்கை வரிசை போடப்பட்டிருந்த விதத்திலேயே ஒரு மாற்றம் இருந்தது. வழக்கமாக விஜய்யின் அருகே அமரும் பொருளாளர் வெங்கட்ராமனுக்கு இந்த முறை விஜய்யிடமிருந்து ஆதவ், அருண் ராஜ் தாணடி மூன்றாவதாகத்தான் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது.
மேடையில் மா.செக்கள் உட்பட பல நிர்வாகிகளும் பேசினர். ஆனால், வெங்கட்ராமனுக்கு பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை. கூட்டத்தோடு கூட்டமாக ஒரு தீர்மானத்தை கொடுத்து உட்கார வைத்துவிட்டார்கள். நன்றியுரை கூட கொடுக்கவில்லை.
ஏற்கனவே மதுரை மாநாட்டிலும் நேரமின்மையை காரணம் காட்டி அவரை பேசவிடவில்லை. கரூர் மக்கள் சந்திப்புக்கு ஹோட்டலுக்கு வெளியே இவரின் காரை மறித்துவிட்டார்கள். தொடர்ச்சியாக ஓரங்கட்டப்படுவதால் அவர் அப்செட்டில் இருப்பதாக கூறுகின்றனர் பனையூர் வட்டாரத்தினர்.

மேடையில் 12 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது. முதல் தீர்மானமே கரூர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம். கரூர் சம்பவத்தில் சிறை சென்று ஜாமீனில் வந்த கரூர் மேற்கு மா.செ மதியழகன் தான் அதை வாசித்தார்.
மதியழகனை ஏற்கனவே குடும்பத்தோடு அழைத்து பனையூரில் சந்தித்த விஜய், இன்றும் அவரை ஆரத்தழுவி தீர்மானம் வாசிக்க அனுப்பி வைத்தார். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கு முன்பும் கோவிலில் பூஜை செய்வது ஆனந்தின் வழக்கம். பொதுக்குழுவுக்கு முன்பாக இந்த தனியார் விடுதியிலுள்ள விநாயகர் கோவில் மதியழகனோடு சேர்ந்து பூஜை போட்டிருந்தார் ஆனந்த்.
கரூர் சம்பவத்தில் திட்டமிடப்பட்ட பாதுகாப்பு குறைபாடு நடந்ததென மதியழகன் தீர்மானம் வாசித்தார். மற்ற நிர்வாகிகளின் பேச்சிலும் இதே பாய்ண்ட் கொஞ்சம் தூக்கலாக வைத்து பேசப்பட்டது. விஜய்யுமே கரூர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கேட்ட கேள்விகளை வைத்துதான் ஸ்டாலினை அட்டாக் செய்தார். ஆதவ் அர்ஜூனா செந்தில் பாலாஜி, கரூர் எஸ்.பி. செல்வராஜ் வரைக்கும் இறங்கி அடித்துவிட்டார்.
திமுக எதிர்ப்பில் மதுரை மாநாட்டு பார்முலாவைத்தான் இங்கேயும் பின்பற்றினார்கள். மற்ற நிர்வாகிகள் திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களை குறிவைப்பார்கள். விஜய் ஸ்டாலினை குறிவைப்பார். இங்கேயும் அதுதான்.

அருண் ராஜ் கே.என்.நேரு, அன்பில் மகேஷ், செந்தில் பாலாஜி என திமுகவின் முக்கியப் புள்ளிகளை அட்டாக் செய்தார். மிகக்குறிப்பாக காவல்துறை பற்றி கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். ஆதவ் கிட்டத்தட்ட முக்கால் மணி நேரத்துக்கு மேல் பேசினார்.
கரூர் சம்பவத்தில் தவெக மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கெல்ல்லாம் பதில் வாதங்களை முன்னெடுத்து வைத்தார். செந்தில் பாலாஜியை விமர்சிக்கையில் கொஞ்சம் காட்டமாக ஒருமையில் பேசினார். உதயநிதியையும் குறிவைத்து வழக்கம்போல வாரிசு அரசியல் விமர்சனங்களை முன்வைத்தார்.
இதுவரையிலான மேடைகளில் தங்களுக்கு 20% வாக்குகள் இருப்பதாக பேசி வந்த ஆதவ் இந்த மேடையில் தங்களுக்கு இப்போதே 26% வாக்குகள் இருப்பதாக கூறினார்.
வரவேற்புரை கொடுத்த ஆனந்த் தொடங்கி ஆதவ் வரைக்கும் தவெக தலைமையில்தான் கூட்டணி விஜய்தான் முதல்வர் என்பதை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்தனர்.
விஜய்யின் பேச்சு மொத்தமும் சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரையை மையப்படுத்தியதாகத்தான் இருந்தது. மேலும், கரூரில் திட்டமிடப்பட்ட பாதுகாப்பு குறைபாடு என்றுதான் அனைவரும் மேடையில் பேசினர்.
இதே லைனில்தான் தவெகவுக்கு சப்போர்ட் செய்து அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரங்களிலும் சட்டமன்றத்திலும் பேசியிருந்தார். ஆனால், தனித்து தவெக தலைமையில் கூட்டணி செல்லும் முடிவில் இருப்பதால் அதிமுகவின் சப்போர்ட்டுக்கு நன்றி கூறும் வகையிலோ அதை அங்கீகரிக்கும் வகையிலோ மறைமுகமாக கூட எதுவும் பேசவில்லை.

மாறாக, தஞ்சை மா.செ சரவணன் 75 ஆண்டுகளாக தமிழகத்தை சுரண்டி தின்ற திராவிடக் கட்சிகள் என அதிமுகவையும் சேர்த்து விமர்சித்தார். விஜய்யும் தன்னுடைய பேச்சை முடிக்கையில் ரெண்டே ரெண்டு பேருக்கு இடையிலதான் போட்டி திமுக vs தவெக என பழையபடியே பேசினார்.
இதிலிருந்து அதிமுகவோடோ அல்லது NDA கூட்டணிக்குள்ளோ தவெக செல்ல இப்போதைக்கு வாய்ப்பில்லை என்பதை வெளிப்படையாக உணர்த்தியிருக்கின்றனர்.
தவெகவுக்கு கட்டமைப்பு இல்லை, இரண்டாம் கட்ட தலைவர்கள் இல்லை என்கிற விமர்சனம் வலுவாக எழுந்திருக்கிறது. அதை கவனத்தில் கொண்டுதான் இன்று மூன்று மா.செக்களை மேடையில் பேச வைத்தனர். ஆனால், அவர்கள் எங்களிடம் கட்டமைப்பு இருக்கிறது, கட்டமைப்பு இருக்கிறதென மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருந்தனர்.
ஆதவ், சி.டி.ஆர் போன்றவர்கள் பேசும்போதும் கட்டமைப்பெல்லாம் தேவை இல்லை மக்கள் செல்வாக்கு போதும் என்கிற தொனியில் பேசியிருந்தனர். திமுகவின் டி.என்.ஏ எம்.ஜி.ஆருக்கு பிறகு எனக்குதான் தெரியும் என பேசும் ஆதவ் கட்சி கட்டமைப்பு சார்ந்து இப்படி பொதுப்படையாக பேசுவது வினோதமாக இருக்கிறது.
திமுக எதிர்ப்பை வலுப்படுத்தும் நோக்கில், திமுகவை கடந்து இன்னும் நுணுக்கமாக உள்ளே இறங்கி `பென்’ நிறுவனம் வரை கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது முக்கியமான விஷயமாக இருந்தது.

விஜய்தான் முதல்வர் வேட்பாளர், அவர் தலைமையில்தான் கூட்டணி, அது சம்பந்தமான முடிவுகளை அவரே எடுப்பார் என தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். அந்த மெசேஜை கடத்ததான் இந்த பொதுக்குழு கூட்டம்.
உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட பிறகு விஜய்யின் பிரசார பயணம் மீண்டும் தொடங்கும் என்கிறார்கள். அதே பேருந்து பிரசாராமா இல்லை பொதுக்கூட்டங்களா என்பதை மட்டும் இன்னும் முடிவு செய்யாமல் இருக்கிறார்கள்.!













