மும்பை: மேளதாளம், கரகோஷம், ரோஜா மழை; பயிற்சியாளருக்கு உள்ளூர்வாசிகள் உற்சாக வரவே...
175 மில்லியன் டாலர்களுக்கு அதிபதி; இருந்தும் ஊபர் ஓட்டுவது ஏன்? - நெகிழ வைக்கும் காரணம்!
பிஜி நாட்டில் தொழில்முனைவோர் ஒருவர் ஊபர் ஓட்டுநருடன் நடத்திய உரையாடல் வைரலாகியிருக்கிறது.
நவ் ஷா என்ற தொழில்முனைவோர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் வீடியோவில், ஊபர் வாகனத்தை ஓட்டும் வயதான ஓட்டுநர், ஆண்டுக்கு $175 மில்லியன் வருவாய் ஈட்டும் வணிக சாம்ராஜ்யத்தை நடத்துகிறார் என்பதை அறிந்து, தான் அதிர்ச்சியடைந்ததாகக் கூறியுள்ளார்.
'பிசினஸ் இருந்தும் ஊபர் ஓட்டுவது ஏன்' எனக் கேட்டபோது "நான் இந்த பணத்தை இந்தியாவில் உள்ள பெண் குழந்தைகள் படிப்புக்காக அனுப்புகிறேன். ஒவ்வொரு ரைடும் மற்றொரு குழந்தை பள்ளிக்குச் செல்ல உதவும்" எனக் கூறியுள்ளார்.
Uber ஓட்டுநரிடமிருந்து வாழ்க்கைப் பாடம்
இந்த வீடியோவின் கேப்ஷனில், "இவர் 86 வயது நபர். ஊபர் ஓட்டுகிறார் ஆனால் அவரது தொழில்கள் 170 மில்லியனுக்கும் அதிகமான வருவாயைக் கொண்டுள்ளன. செல்வம், தொழில், லெகஸி எல்லாமும் பார்த்தவர், இன்னும் காருண்யம் மற்றும் குறிக்கோளில் நிலையாக உள்ளார். 'உண்மையான வெற்றி என்பது நீங்கள் எவ்வளவு உயரம் செல்கிறீர்கள் என்பதில் இல்லை, எத்தனை பேரை உயரத்துக்கு தூக்கிவிடுகிறீர்கள் என்பதில் இருக்கிறது' என இவர் எனக்கு உரைக்கிறார்" என எழுதியுள்ளார் நவ் ஷா!
நகைக்கடை, உணவகம், சூப்பர் மார்கெட்
வீடியோ உரையாடலில் ஊபர் ஓட்டுநர் தான் கடந்த 10 ஆண்டுகளாக ஊபர் வருமானத்தின் மூலம் ஆண்டுக்கு 24 இந்திய பெண் குழந்தைகள் கல்விக்கு பணம் வழங்கியுள்ளதாகக் கூறியுள்ளார்.
மேலும் அவர் தனக்கு 3 மகள்கள் இருப்பதாகவும், அவர்கள் அனைவரும் படித்து நல்ல நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். "நான் அவர்களுக்கு நல்ல கல்வியைக் கொடுத்தேன். அவர்கள் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார்கள். இப்போது மிக உயர்ந்த பதவியில் இருக்கிறார்கள். அதனால், மற்ற பெண் குழந்தைகளும் தங்கள் கனவுகளை அடைய உதவ முடியும் என்று நினைத்தேன்" எனப் பேசியுள்ளார்.
மேலும் தனது குடும்பத்தின் தொழில்கள் குறித்துப் பேசியவர், "எங்களுக்கு 13 நகைக் கடைகள் மற்றும் ஆறு உணவகங்கள் உள்ளன. எங்களுக்கு நான்கு பல்பொருள் அங்காடிகள் (சூப்பர் மார்கெட்) மற்றும் சில வணிகங்கள் உள்ளன." எனக் கூறியிருக்கிறார். மேலும் அவரது தந்தை 1929ம் ஆண்டு இந்தியாவிலிருந்து வந்து 5 பவுண்டுகளுடன் தொழிலைத் தொடங்கியதாகவும் பேசியுள்ளார்.
இந்த உரையாடல் இணையத்தில் வெகுவாக வைரலாகியிருக்கிறது. பலரும் அந்த நபரின் கொடை உள்ளத்துக்காக வாழ்த்தியுள்ளனர்.














