சோனியா புத்தக விழா: 'காங்கிரஸ் அழைப்பை ஸ்டாலின் நிராகரித்தாரா?' - ஆர்.எஸ்.பாரதி ...
தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற 80 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை; குற்றவாளியைத் தேடும் போலீஸ்!
.
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் மருதம்நகரைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி தினமும் அதிகாலையில் எழுந்ததும் அருகில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் செல்வது வழக்கம். அவரது நடவடிக்கையை கண்காணித்த மர்ம நபர், அதிகாலையில் மூதாட்டியை வழிமறித்துள்ளார். என்ன என்று புரியாமல் திகைத்து நின்ற மூதாட்டியின் முகத்தை துண்டால் மூடிய நபர், அவரை புதருக்குள் தள்ளி இழுத்துச் சென்றுள்ளார். அலறித் துடித்த மூதாட்டியை அடித்து அச்சுறுத்திய நபர், அவரை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.
அதிகாலை நேரத்தில் அப்பகுதியில் மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டதால் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஓடிச் சென்றுள்ளனர். அவர்கள் வருவதை அறிந்ததும் அந்த மர்ம நபர், அங்கிருந்து தப்பியோடி விட்டார். மூதாட்டியை முள்புதருக்குள் தள்ளிவிட்டதால் அவரது உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக முன்னீர்பள்ளம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து விரைந்து வந்த போலீஸார் மூதாட்டியை மீட்டு, நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குடியிருப்பு பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றுக்கு தனியாகச் சென்ற 80 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடுமை குறித்து கேள்விப்பட்ட மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், "80 வயது மூதாட்டி கூட தனியாகச் செல்ல முடியாத அளவுக்கு நிலைமை உருவாகி இருப்பதற்கு, போதைப் பழக்கமே காரணம். கஞ்சா விற்பனை பல இடங்களில் நடக்கிறது. குறிப்பாக, மாணவர்கள், இளைஞர்களைக் குறிவைத்து விற்பனை செய்யப்படுகிறது. அதை முழுமையாகத் தடுத்தால் மட்டுமே இத்தகைய குற்றச்செயல்களை நிறுத்தமுடியும்

இந்தக் கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர் 30 முதல் 35 வயதுக்கு உள்பட்டவராக இருந்ததாக தெரிகிறது. இந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை காவல்துறையினர் முழுமையாக ஆய்வு செய்து, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபரைக் கண்டுபிடித்து, அதிகப்பட்ச தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும்" என்கிறார்கள். இந்த குற்றச் சம்பவம் தொடர்பாக முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளியைத் தேடிவருகின்றனர். இந்த கொடூரச் சம்பவம் அப்பகுதி மக்களை அச்சம் அடையச் செய்துள்ளது.


















