``தவெக-வின் 60 - 70 எம்.எல்.ஏ-க்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள்" - திமுக ரகுபதி...
`ஆடையின்றி பேசுங்களேன்!’ - இன்ஸ்டாவில் வலை, வாட்ஸ்-அப்பில் ஸ்கெட்ச்; இளம்பெண்ணை தேடும் போலீஸ்!
தகவல் தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு நிகராக, அதன்மூலம் நடைபெறும் சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சோசியல் மீடியா கணக்குகள் மூலம் நாள்தோறும் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அப்படிப்பட்ட இரண்டு சம்பவங்கள்தான் புதுச்சேரியில் அரங்கேறியிருக்கின்றன.
புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த இளைஞரை இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்த பெண் ஒருவர், `நீங்க ரொம்ப மேன்லியா இருக்கீங்க… அழகா இருக்கீங்க…’ என்று புகழ்ந்து பேசியிருக்கிறார். அதில் உருகிப்போன அந்த இளைஞரும், அந்தப் பெண்ணிடம் தினமும் செல்போனிலும், வீடியோ காலிலும் பேசி வந்திருக்கிறார். ஒருகட்டத்தில், `வீடியோ காலில் ஆடையின்றி பேசுங்களேன். உங்களை அப்படிப் பார்க்கணும்போல இருக்குது’ என்று அந்தப் பெண் கோரிக்கை வைத்திருக்கிறார்.

அதன்படி அந்த இளைஞரும் தினமும் ஆடையின்றி அந்தப் பெண்ணுடன் வாட்ஸ்-அப் வீடியோ காலில் பேசி வந்திருக்கிறார். அதை இளைஞருக்கு தெரியாமல் தன்னுடைய செல்போனில் பதிவு செய்து கொண்டே வந்திருக்கிறார் அந்தப் பெண். ஒருநாள் அந்த வீடியோவை அந்த இளைஞருக்கு அனுப்பியவர், `பணம் கொடுக்கவில்லை என்றால் வீடியோவை உன் செல்போனில் இருக்கும் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அனுப்பிவிடுவேன்’ என்று மிரட்டியிருக்கிறார்.
அதில் பதறிப்போன அந்த இளைஞர், புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸில் புகாரளித்திருக்கிறார். அதேபோல, புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞர், இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு பெண்ணுடன் அறிமுகமாகியிருக்கிறார். அவரும் இதேபோல வாட்ஸ்-அப்பில் ஆடையின்றி வீடியோ காலில் பேசியிருக்கிறார். அதைப் பதிவு செய்த அந்தப் பெண், ரூ.2,000 கேட்டு மிரட்டியிருக்கிறார். அதுகுறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















