செய்திகள் :

2 கிலோ தங்கம் கொள்ளை; எதிர்கடைக்காரரின் மாஸ்டர் பிளான்; முன்னாள் ஊழியர் உட்பட ஐவர் சிக்கிய பின்னணி!

post image

கேரள மாநிலம், திருவனந்தபுரம் சாலா பகுதியில் 'வைஷ்ணவி ஜுவல்லரி' என்ற பெயரில் நகைக்கடை மற்றும் தங்கம் சுத்திகரிக்கும் தொழில் நடத்தி வருபவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்த நந்தகுமார். கடந்த வியாழக்கிழமை இரவு 10.30 மணியளவில் கடையைப் பூட்டிவிட்டு, 250 பவுன் (சுமார் 2 கிலோ) பழைய தங்கத்தைத் தனது தோள்பையில் எடுத்துக்கொண்டு ஸ்கூட்டரில் அருகிலுள்ள வீட்டிற்குப் புறப்பட்டார். அவர் கடையிலிருந்து கிளம்பிய மூன்று நிமிடங்களுக்குள்ளாக, பைக்கில் பின்தொடர்ந்து வந்த கும்பல், நந்தகுமாரின் தோள்பையைப் பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றது. இந்தச் சம்பவம் குறித்து நந்தகுமார் காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தில், "என் கடைக்கு எதிரே உள்ள 'மாளவிகா ஜுவல்லரி' உரிமையாளர் ஜெயராம் என்னைத் தொழில் ரீதியாகத் தீர்த்துக் கட்டுவேன் என ஏற்கனவே மிரட்டியிருந்தார்" என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து, மாநகரக் காவல் ஆணையர் அருள் ஆர்.பி. கிருஷ்ணா தலைமையிலான தனிப்படை போலீசார் ஜெயராமின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தபோது, நந்தகுமாரின் கடையில் முன்னாள் ஊழியராகப் பணியாற்றியவரும், தற்போது பழைய சாலாவில் 'ஆற்றுக்கால் கோல்ட் சில்வர் டெஸ்டிங்' நிறுவனம் நடத்தி வருபவருமான மகாராஷ்டிராவைச் சேர்ந்த அமுல் அசோக்குடன் அவர் தொடர்ந்து தொடர்பில் இருந்தது தெரியவந்தது. காவல்துறையின் தீவிர விசாரணையில், நகை வியாபாரிகளுக்கு இடையிலான தொழில் பகைமையே இந்தக் கொள்ளைக்குக் காரணம் என்பது உறுதியானது. நந்தகுமாரிடம் வேலை பார்த்த அமுல் அசோக், பின்னர் சொந்தமாகத் தொழில் தொடங்கி பழைய சாலாவில் மூன்று மாடிக் கட்டடம் வாங்கும் அளவிற்கு உயர்ந்தார். இதற்கிடையே, கடந்த ஜனவரி மாதம் நந்தகுமார் புதிய நகைக்கடையைத் தொடங்கிய பிறகு, அவரது பொருளாதார வளர்ச்சியைக் கண்டு அமுல் அசோக் மற்றும் எதிர்க்கடை உரிமையாளர் ஜெயராம் ஆகியோருக்குப் பொறாமை ஏற்பட்டது. நந்தகுமாரின் தொழிலை முடக்க வேண்டும் என்ற நோக்கில், அமுல் அசோக்கின் 'ஆற்றுக்கால் கோல்ட் சர்வீஸ் ஏஜென்சி' அலுவலகத்தில் வைத்து இந்தக் கொள்ளைக்கான சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

தங்க நகைகள் (சித்தரிப்பு படம்)

அந்தத் திட்டத்தின் ஒருபகுதியாக திருட்டு வழக்குகளில் தொடர்புடைய அனூப் என்பவரை அமுல் அசோக் அணுகியுள்ளார். அனூப் தனது கூட்டாளியான அனில் பிரசாத் என்கிற ஷேடோ அனில் மற்றும் நண்பர்களுடன் இணைந்து கொள்ளையை அரங்கேற்றத் திட்டமிட்டார். திட்டத்தின்படி, கொள்ளை நடந்த வியாழக்கிழமை காலையில் நந்தகுமாரின் கடைக்குச் சென்ற அமுல் அசோக், ரூ.15 லட்சம் மதிப்பிலான தங்கத்தை விற்றுப் பணம் பெற்றுள்ளார். இதன் மூலம், அன்று இரவு நந்தகுமார் அதிக அளவிலான தங்கத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்வதை அவர் உறுதி செய்துகொண்டார். மேலும், அடுத்த வாரம் காயங்குளத்தில் உள்ள நகைக்கடை உரிமையாளர் ஒருவருக்கு நந்தகுமார் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை வழங்க உள்ள தகவலையும் அறிந்துகொண்ட கும்பல், அதற்கு முன்பாகவே இந்தத் திட்டத்தை நிறைவேற்ற முடிவுசெய்தது. இதைத்தொடர்ந்தே கடந்த வியாழக்கிழமை இரவு நந்தகுமார் கடையிலிருந்து புறப்பட்ட தகவலைக் கூட்டாளியான ஸ்ரவன் என்பவர் செல்போன் மூலம் அனூப் மற்றும் அனிலுக்குத் தெரிவித்துள்ளார். இதையடுத்து பைக்கில் பின்தொடர்ந்து வந்த அனூப்பும் அனிலும் நந்தகுமாரின் தங்கப் பையைப் பறித்துக்கொண்டு தப்பினர்.

தங்கம் கொள்ளை வழக்கில் கைதான அமுல் அசோக்

கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட புதிய ரக பைக்கின் பதிவு எண் மற்றும் சுங்கச்சாவடி சிசிடிவி காட்சிகளைப் பின்தொடர்ந்த போலீஸார், வயநாடு மாவட்டம் படிஞாறத்தறா பகுதியில் பதுங்கியிருந்த அனில் பிரசாத், அனூப் மற்றும் வினோத் ஆண்டனி ஆகிய 3 பேரைக் கைது செய்து, அவர்களிடமிருந்து 488 கிராம் தங்கத்தை மீட்டனர். இதன் தொடர்ச்சியாக, இந்தக் கொள்ளையின் முக்கிய சூத்திரதாரியான அமுல் அசோக் மற்றும் சதித்திட்டத்தில் உடந்தையாக இருந்த அவரது நண்பர் திலீப் ஆகியோரை ஃபோர்ட் காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். இதில் அனில் பிரசாத், அனூப், வினோத் ஆண்டனி, அமுல் அசோக் மற்றும் திலீப் ஆகிய 5 பேரும் நேற்றிரவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே, மாளவிகா ஜுவல்லரி உரிமையாளர் ஜெயராமைப் போலீஸார் காவலில் எடுத்துத் தீவிர விசாரணை நடத்தி வருவதுடன், தப்பியோடிய ஸ்ரவனையும் மீதமுள்ள தங்கத்தையும் தேடும் பணியை முடுக்கிவிட்டுள்ளனர்.

சென்னை: நட்சத்திர ஹோட்டலில் பெண்ணிடம் ஆபாசமாக பேசிய த.வெ.க-வினர் கைது - கட்சிப் பதவியும் பறிப்பு!

சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இளம்பெண் ஒருவர் வேலை செய்து வருகிறார். கடந்த 9-ம் தேதி அந்தப் பெண் வேலைக்கு வந்திருக்கிறார். அப்போது பைக்கில் ஹோட்டலுக்கு வந்த இரண்டு இளைஞர்கள், அந்தப் பெண்ணி... மேலும் பார்க்க

சென்னை: பணம் வாங்கிக் கொண்டு போக்சோ வழக்கு பதிவு - பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் சுரேஷ் கண்ணா (40). இவர் திருமண இணையதளம் மூலம் வரன் தேடி வந்தார். அப்போது கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியை சேர்ந்த பெண்ணின் விவரங்களைப் பார்த்ததும் சுரேஷ் கண்ணாவுக்கு பிடித்... மேலும் பார்க்க

தனிஷ்க் நகைக்கடை கொள்ளை: சிக்கிய நிஷாந்த்; பேருந்து ஓட்டுநர் கொடுத்த தகவலால் தூக்கிய போலீஸ்!

மதுரை தனிஷ்க் ஜுவல்லரி நகைக்கடையில் பல கோடி மதிப்பிலான நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் நிஷாந்தின் தோழி மீனாட்சி மற்றும் நிஷாந்தின் தந்தை சுரேஷ் ஆகிய இருவரும் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டு நீதிமன்ற... மேலும் பார்க்க

`காதல், போதைப்பொருள், பாக்., தொடர்பு' ராஜஸ்தான் குண்டுவெடிப்பில் பஞ்சாப் இளம்பெண் சிக்கியது எப்படி?

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காபூர் மாவட்டத்தில் ரயில் தண்டவாளத்தில் கடந்த 2ம் தேதி வெடிகுண்டு வெடித்தது தொடர்பாக பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் பகுதியை சேர்ந்த மஹதீப் கவுர்(21) என்ற பெண்ணும், தேவிந்தர் சிங... மேலும் பார்க்க

மதுரை நகைக்கடையில் ஹாலிவுட் பட பாணியில் கொள்ளை; சிக்கிய தோழி; எஸ்கேப் ஆன திருடன்; நடந்தது என்ன?

மதுரை பைபாஸ் சாலையில் உள்ள பிரபல தனிஷ்க் நகைக்கடையில் 11.62 கிலோவிற்கும் அதிகமான தங்க நகைகளை முகமூடி அணிந்த ஒருவன் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் கடைக்குள் இருந்த... மேலும் பார்க்க

மதுரை காவல்நிலையத்தில் மர்ம மரணம்; உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்; பின்னணி என்ன?

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள டி.அழகர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன், ஏலக்காய் மூட்டைகள் தொடர்பான புகாரில் விசாரணைக்காக செக்கானூரணி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்ப... மேலும் பார்க்க