தேர்வுக்குழுவை புறக்கணித்தது ஏன்? திரைப்பட மானியம் வழங்கியதில் முறைகேடா? கவனிப...
சென்னை: பணம் வாங்கிக் கொண்டு போக்சோ வழக்கு பதிவு - பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் சுரேஷ் கண்ணா (40). இவர் திருமண இணையதளம் மூலம் வரன் தேடி வந்தார். அப்போது கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியை சேர்ந்த பெண்ணின் விவரங்களைப் பார்த்ததும் சுரேஷ் கண்ணாவுக்கு பிடித்துப் போனது. அதைத் தொடர்ந்து இரண்டு குடும்பத்தினரும் திருமணம் குறித்து பேசினர். இந்தநிலையில் சுரேஷ் கண்ணாவின் நடவடிக்கை பிடிக்காததால் திருமணம் நடக்கவில்லை. ஆனால் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள சுரேஷ் கண்ணா விரும்பினார். அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்து வந்தார். அதனால் அந்தப் பெண்ணை சுரேஷ்கண்ணா வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவலை அந்தப் பெண் தன்னுடைய சகோதரர் ஸ்ரீராமிடம் தெரிவித்து சுரேஷ் கண்ணாவை கண்டித்திருக்கிறார். அதன்பிறகும் சுரேஷ் கண்ணா அந்தப் பெண்ணுக்கு டார்ச்சர் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து சுரேஷ் கண்ணா மீது அந்தப் பெண், நெய்வேலி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். அதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் கண்ணா, அந்தப் பெண்ணை திருமணம் செய்ய அவரின் சகோதரர் ஸ்ரீராம் தடையாக இருப்பதாக கருதி, அவரை பழிவாங்க திட்டமிட்டார். இதற்காக இரண்டு சிறுமிகளை இன்ஸ்டாகிராம் மூலம் ஸ்ரீராமிடம் பழக ஏற்பாடு செய்திருக்கிறார் சுரேஷ் கண்ணா. அதன்படி ஸ்ரீராமும் அந்த இரண்டு சிறுமிகளுடன் இன்ஸ்டாகிராமில் பழகி வந்திருக்கிறார். இந்தநிலையில், இரண்டு சிறுமிகளில் ஒருவரை ஸ்ரீராம், சென்னையில் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது இருவரும் செல்ஃபி எடுத்திருக்கிறார்கள். அதன்பிறகு அந்தச் சிறுமி, ஸ்ரீராம் மீது திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, ஸ்ரீராம் மீது போக்சோ வழக்கை பதிவு செய்தார்.
இந்தச் சூழலில் நெய்வேலி போலீஸார், சுரேஷ் கண்ணாவை கைது செய்தனர். அப்போது அவரிடம் விசாரித்தபோது ஸ்ரீராம் மீது பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கின் பின்னணி தகவல் தெரியவந்தது. அதுகுறித்து நெய்வேலி போலீஸார், கடலூர் எஸ்.பி-க்கு தகவல் தெரிவித்தனர். அவர்மூலம் டி.ஜி.பி மகேஷ்குமார் அகர்வாலின் கவனத்துக்கு போக்சோ வழக்கு பதிவு செய்ய இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமியும் காவலர் வசந்த் ராஜாவும் 5 லட்சத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக வாங்கிய தகவல் தெரியவந்தது. இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி மகேஷ்குமார் அகர்வால், சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட போக்சோ வழக்கின் பின்னணி குறித்து விரிவாக விசாரிக்கப்பட்டது. அந்த விசாரணையில் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, காவலர் வசந்த் ராஜா ஆகியோர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் உறுதியானது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, காவலர் வசந்த்ராஜா ஆகியோரை கமிஷனர் அமல்ராஜ் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இதுகுறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸாரிடம் விசாரித்தபோது,
``திருமணத்துக்கு தடையாக இருந்த ஸ்ரீராமை பழிவாங்கும் நோக்கத்தில் அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்ய சுரேஷ் கண்ணா பிளான் போட்டியிருக்கிறார். அதைத் தொடர்ந்து காவலர் வசந்த்ராஜாவைச் சந்தித்த சுரேஷ் கண்ணா, ஸ்ரீராம் மீது போக்சோ வழக்கு பதிவு செய்ய 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை கொடுத்திருத்திருக்கிறார். அதன்பிறகுதான் ஸ்ரீராம் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. புகார் கொடுத்த சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் சில தகவல்கள் தெரியவந்திருக்கிறது. சட்ட நிபுணர்களிடம் ஆலோசித்து விட்டு போக்சோ வழக்கில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றனர்.


















