கன்னியாகுமரி: கடற்கரை வாக்கிங்; மீனவ மக்கள் சந்திப்பு; ஸ்டாலின் தேர்தல் பரப்புரை...
தாரை தப்பட்டை: "என் வரிகளைக் கேட்டு பாலா சார் தேம்பி தேம்பி அழுதார்" - மோகன் ராஜன் | வரித்துணையே 15
முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகள் குறித்தும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த 'வரித்துணையே..!'.

இன்றைய பகுதிக்கு 'தாரை தப்பட்டை' படத்தில் வரும் 'வதன வதன வடிவேலன்' பாடல் பற்றி பாடலாசிரியர் மோகன் ராஜனிடம் பேசினோம்.
இந்தத் துள்ளலான பாடலை எழுதியவருக்கு இந்த 'தாரை தப்பட்டை' திரைப்படம் இரண்டு கனவுகளை நிறைவேற்றி இருக்கிறது. பாலா மற்றும் இளையாராஜாவுடன் பணிபுரிய வேண்டும் என்கிற ஆசையை இந்தப் படம் மோகன் ராஜனுக்கு அமைத்துக் கொடுத்துவிட்டது.
பாடலாசிரியர் மோகன் ராஜன், "இந்தப் பாடலைப் பற்றி சொல்வதற்குப் பெரிய சம்பவமொன்று இருக்கிறது. இளையராஜா சாரின் 1000-வது படம் 'தாரை தப்பட்டை'. இந்தப் படத்தில் நானும் ஒரு பங்காக இருந்திருப்பதில் எனக்கு கர்வம்!
இப்படியானவொரு வாய்ப்பு எனக்கு இனி அமையுமா என எனக்குத் தெரியவில்லை. அதனால்தான் நான் கர்வம் கொள்கிறேன் என அன்பாகச் சொல்கிறேன். இளையராஜா சாரின் முதல் திரைப்படமான 'அன்னக்கிளி' படத்தை தேவராஜ் - மோகன் என இருவர் இயக்கினார்கள். அவருடைய முதல் திரைப்படத்திலும் மோகன் என்கிற பெயரைக் கொண்ட ஒருவர் இருந்திருக்கிறார்.
அவருடைய 1000-வது படத்தில் மோகன் ராஜ் என்கிற பெயரில் நானும் ஒரு பங்காக இருந்தேன். இப்படி நானாகவே ஒப்பிட்டு பார்த்துக் கொண்டேன். இந்தப் பாடலுக்கு முன்பு நான் வாய்ப்பு தேடி இளையராஜா சாரின் ஸ்டுடியோவுக்கு ஒரு முறை சென்றேன். அப்போது அவர் பிரசாத் ஸ்டுடியோவில் இருந்தார்.
அப்போது அங்கிருந்தவர்கள், இயக்குநரோடு வந்தால்தான் இளையராஜா சாருக்கு பாடல் எழுத முடியும் எனச் சொல்லிவிட்டார்கள். ஆனால், என்னை பாலா சார்தான் ராஜா சார் ஸ்டுடியோவுக்குள் கூட்டிச் செல்வார் என அந்த நேரத்தில் நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை" என்றார்.
"'தாரை தப்பட்டை' திரைப்படத்திலிருந்து முதன் முதலாக வெளிவந்த போஸ்டரில் என்னுடைய பெயர் இருக்காது. பாலா சார் தயாரித்திருந்த 'சண்டி வீரன்' படத்தின் மூலமாகத்தான் எனக்கு 'தாரை தப்பட்டை' வாய்ப்பு கிடைத்தது. 'சண்டி வீரன்' படத்திற்காக இயக்குநர் சற்குணமுடன் இணைந்துப் பழகிய நான், படம் முடிவதற்குள் அவருடன் ரொம்பவும் நெருக்கமாகிவிட்டேன்.
அந்தப் படத்திற்காக முதலில் ஒரேயொரு பாடல்தான் எழுதப் போனேன். பிறகு மூன்று பாடல்களை அந்தப் படத்திற்காக எழுதிவிட்டேன். அதில் ஒன்றுதான் தண்ணீர் பற்றிய பாடல். அந்தப் பாடலை இயக்குநர் சற்குணம், பாலா சாருக்குப் போட்டு காண்பித்திருக்கிறார்.

மின் விளக்குகள் அணைக்கப்பட்ட அறையில் உட்கார்ந்து அந்தப் பாடலை பாலா சார் கேட்டிருக்கிறார். பாடல் முழுவதும் முடிந்த பிறகு மீண்டும் மின் விளக்குகள் ஆன் செய்கையில், பாலா சார் தேம்பி தேம்பி அழுதுக் கொண்டிருந்தாராம்! பிறகு மீண்டும் மீண்டும் இந்தப் பாடலை கேட்டவர் இந்தப் பாடலை எழுதியது யாரெனக் கேட்டிருக்கிறார்.
பிறகு என்னைப் பற்றி அவர் பாராட்டவும் செய்திருக்கிறார். இது போன்ற நினைவுகளை ஏற்படுத்தித் தந்த இந்தப் பாடல் எனக்கு அவ்வளவு நெருக்கமானது. தண்ணீர் பற்றிய பாடல் எழுதுவதற்கு இதுவரை தமிழ் பாடலாசிரியர்களுக்குச் சூழல் அமையவில்லை.
ஆனால், அப்படியொரு சூழல் எனக்கு அமைந்தது" என்றவர், "பிறகு பாலா சாரின் அலுவலகத்திலிருந்து அவரைச் சந்திப்பதற்கு என்னை அழைத்தார்கள். நானும் அங்கு கிளம்பிப் போனேன். அவருடைய அறையில் கண்கலங்கியவாறு அவர் அமர்ந்திருந்தார். என்னைப் பார்த்ததும் அவர் வேகமாக கண்களைத் துடைத்துக் கொண்டார்.
என்னிடம் 'உன்னுடைய பாடலைத்தான் கேட்டுக் கொண்டிருந்தேன். நன்றாக எழுதியிருக்கிறாய்' எனப் பாராட்டி கைகுலுக்கினார். பிறகு 'தாரை தப்பட்டை' திரைப்படத்தில் ஒரு பாடல் எழுதுவதற்கு எனக்கவர் வாய்ப்பளித்தார்.
அந்த வாய்ப்பைத் தந்த பிறகு அவர் 'இந்தப் பாடலை நீ எழுது. நன்றாக இருந்தால் வைத்துக் கொள்கிறேன். ஏனெனில், ஏற்கெனவே நான்கு பேர் இந்தப் பாடலை எழுதியிருக்கிறார்கள்' என்றார். அவருக்குப் பிடித்தமான பாடல் ஒன்றை எழுதிய பாடலாசிரியர் நான் என்றெல்லாம் அவர் யோசிக்கவில்லை.
அந்தப் பாடல் நன்றாக வரவேண்டும் என்பதில்தான் அவர் அப்போது கவனமாக இருந்தார். பாடலை இரண்டு நாட்களில் நான் எழுதி முடித்துவிட்டேன். பிறகு அவர் 'தாரை தப்பட்டை' திரைப்படத்திற்கு லொகேஷன் பார்க்கச் சென்றுவிட்டார்.
திரும்ப வந்தவர் என்னுடைய வரிகளைப் படித்துவிட்டு 'இது வேண்டும். மீண்டும் எழுதுவோம்' எனச் சொல்லிவிட்டார். அப்போதுதான் பாலா சாரின் பரீட்சை தொடங்கியது! பிறகு ஒரு வாரத்தில் பாலா சாருக்கு பாடல் எழுதிக் கொடுத்துவிட்டேன்.
அவரும் அதை ஓகே செய்துவிட்டார். பிறகு இந்தப் பாடலை இளையராஜா ஸ்டுடியோவுக்குச் சென்றது. பாடல்களில் பாடலாசிரியர்கள், 'இதயம் உள்ளிருந்து வெளிவந்து துடிக்கிறது' எனக் கவித்துமாக எழுதுவார்கள். அன்றைய தினம் நான் அப்படியானவொரு நிலையில்தான் இருந்தேன்.

ராஜா சார் ஸ்டுடியோவிலிருந்து வெளியே வந்த பாலா சார் 'அவர் எந்த மாற்றமும் சொல்லவில்லை' எனச் சொல்லிவிட்டார். அந்தத் தருணத்தில் நான் அனுபவித்த உற்சாகமான நொடிகளையெல்லாம் வார்த்தைகளால் விரித்துச் சொல்ல முடியாது.
எழுத்தாளர் இரா. முருகவேள் 'வலி கடத்தி' எனப் பாலா சாரை குறிப்பிடுவார். நான் பாலா சாரை 'அகப்பயணம்' எனக் குறிப்பிடுவேன். உங்களுக்குள் இருக்கும் உங்களை அவர் தேட வைப்பார். அதுதான் பாலா சார்!" என்றார் மெல்லிய புன்முறுவலோடு.



















