''என்னுடைய நிலைப்பாட்டைத் தள்ளி வைக்கிறேன்; காட்டுமன்னார்கோவில் தொகுதியில் ஜோதிம...
"முதல்வர், திருமாவளவன் கொடுத்த அலெர்ட்! 15 மாசத்துல 38 கிலோ வெயிட் லாஸ் செஞ்சேன்" - டாக்டர் ஷர்மிளா
சின்னத்திரை பிரபலம் டாக்டர் ஷர்மிளா 15 மாதங்களில் எவ்வித குறுக்குவழிகளையும் முயற்சிக்காமல் இயற்கையாக 35 கிலோ எடையைக் குறைத்திருக்கிறார். அவருடைய கணவரும் எம்எல்ஏவுமான எஸ்.எஸ்.பாலாஜியும் இவருடன் இணைந்து வெயிட்ல லாஸ் செய்திருக்கிறார். தங்களுடைய வெயிட் லாஸ் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார் டாக்டர் ஷர்மிளா.
"ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி எங்க குடும்பத்துல ஒரு கல்யாணம் நடத்துச்சு. அந்தக் கல்யாணத்துக்கு ஆயிரக்கணக்கானவங்க வந்திருந்தாங்க. வந்தவங்கல்ல பலர் கேட்ட கேள்வி, 'ஏன் ஹெல்த்தைக் கவனிக்காம விட்டுட்டீங்க? ரொம்ப வெயிட் போட்டுட்டீங்க, ஒரு டாக்டரா இருந்துட்டு நீங்களே இப்படி இருக்கலாமா?' அப்படிங்கறதுதான்.

அந்தச் சமயத்துல தலைவர் தொல். திருமாவளவனைப் பார்க்க நானும் கணவரும் போயிருந்தோம். அவரும் ஹெல்த் விஷயத்துல ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருப்பாரு. அவரும் எங்களைப் பார்த்துட்டு, 'உடம்பை முதல்ல கவனிங்க'னு சொன்னாரு.
அதே மாதிரி சி.எம். ஸ்டாலின் சாரைப் பார்க்கப் போனப்பவும் அவரும் இதே அறிவுரையைச் சொன்னாரு. எல்லாரும் இதைக் கவனிக்கிறாங்க, நம்மதான் ரொம்ப அலட்சியமா இருக்கோம்னு தோணுச்சு.
அதுக்கு முன்னாலயும் வெயிட் குறைக்கணும்னு தோணும். ஆனா அதை சீரியஸா எடுத்துக்கமாட்டோம். ஷாப்பிங் போனா நம்ம சைஸுக்கு டிரஸ் கிடைக்காதப்போ ஒரு ஸ்ட்ரெஸ் வரும், அப்புறம் சரியாகிடும். இந்தச் சம்பவங்களுக்குப் பிறகு வெயிட் லாஸ் பண்ணணும்ன்றதை சீரியஸா எடுத்துக்கணும்னு நினைச்சோம்.
வெயிட் குறைக்க மாத்திரை, ஊசி, சர்ஜரினு எவ்வளவோ குறுக்குவழிகள் எல்லாம் சொன்னாங்க. எனக்கும் என் கணவருக்கும் அதுல உடன்பாடு இல்லை. அதனால அறிவியல்பூர்வமா, ரொம்ப மெதுவா, நிலையா வெயிட்டைக் குறைக்கணும்னு நினைச்சோம்.

அப்ப நான் 105 கிலோ, என் கணவர் 120 கிலோ வெயிட் இருந்தாரு. ஆரம்பத்துல ஒருநாளைக்கு வெறும் 15 நிமிஷம் வாக்கிங் போகத் தொடங்கினோம். இப்படித்தான் எங்களோட 'வெயிட் லாஸ் ஜர்னி' மெதுவா ஆனா உறுதியா ஆரம்பிச்சது. அப்புறம் வாக்கிங் போற நேரத்தைப் படிப்படியா அதிகப்படுத்தினோம்.
தொடர்ந்து ஜிம்ல ஒரு பர்சனல் டிரெயினர் வெச்சு வொர்க்அவுட் பண்ண ஆரம்பிச்சோம். டயட்னு வரும்போது நாங்க எதையும் திடீர்னு கட் பண்ணல. ஏழு நாள்ல 7 கிலோ குறையும்னு சொல்ற 'க்ராஷ் டயட்' எதையும் நாங்க நம்பல.
அதுமாதிரியான டயட்டுகள் எல்லாம் உடம்புல உள்ள தண்ணீரை மட்டும்தான் குறைக்கும். நமக்குத் தேவையானது 'ஃபேட் லாஸ்' (Fat loss). அதுக்கு நாம சாப்பிடுற கலோரியை விட, எரிக்கிற கலோரி அதிகமா இருக்கிற, 'நெகட்டிவ் கலோரி பேலன்ஸ்' தான் சரியானது.
அரிசி சோறு சாப்பிட்டு வளர்ந்தவங்க, திடீர்னு சப்பாத்தி, சாலட்னு போனா ரெண்டு நாள்ல சலிப்பு வந்திடும். அதனால வீட்ல எல்லாருக்கும் சமைக்கிற அதே சாப்பாட்டை, ஆனா அளவைக் குறைச்சு சாப்பிட ஆரம்பிச்சோம். நாலு இட்லி சாப்பிட்ட இடத்துல ரெண்டு இட்லி. சட்னிக்குப் பதில், நிறைய காய்கறிகள், பருப்பு சேர்த்த சாம்பார் சாப்பிட்டோம். இது உணவுல புரதச்சத்தை பேலன்ஸ் பண்ண ஹெல்ப் பண்ணிச்சு.

இட்லி, தோசைக்கு சிறுதானியங்களைப் பயன்படுத்தினோம். எண்ணெய்யைக் குறைக்க சட்னியை தாளிக்காமலேயே சாப்பிடப் பழகினோம். இப்படி சின்ன சின்ன மாற்றங்களை உணவுல கொண்டு வந்தோம். மூன்று வேளை சாப்பிடுறதுக்குப் பதிலா, ஆறு வேளையாப் பிரிச்சு சாப்பிட்டோம்.
இது ரத்தத்துல சர்க்கரை அளவைச் சீரா வைக்கவும், கிரேவிங்க்ஸை குறைக்கவும் ஹெல்ப் பண்ணிச்சு. பசிக்கும்போது கொய்யாப்பழம், வெள்ளரிக்காய், கேரட் அல்லது முளைகட்டிய பயறு சாப்பிட்டோம்.
உணவு ஒரு பக்கம் இருந்தாலும், உடற்பயிற்சிக்கு மாற்றே கிடையாது. No Pain, No Gain என்பதுதான் உண்மை. காலையில வெயிட் டிரைனிங் மற்றும் கோர் ஸ்டிரெந்தனிங் (Core Strengthening) பயிற்சிகள் செய்யுறேன்.
மாலையில 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை வாக்கிங் போறேன். 50 வயசுல நீச்சல் கத்துக்கிட்டேன். வாக்கிங் போரடிக்கும்போது நீச்சல் பயிற்சி, சைக்கிளிங் செய்யுறேன்.

வெளியில் சாப்பிடுறதை ரொம்ப குறைச்சிட்டோம். விசேஷங்களுக்குப் போகும்போது சாப்பிட இலை போட்டதும் அதுல வைக்கிற ஒரு பாட்டில் தண்ணியைக் குடிச்சிடுவேன். அதுவே பாதி வயித்தை நிரப்பிடும். அவியல், பொரியல், கூட்டு மாதிரியான காய்கறிகளை அதிகமா சாப்பிடுவேன்.
முதல் முறை வைக்கிற ஒரு கரண்டி சாதத்தோட நிறுத்திடுவேன். இரண்டாவது முறை சாதம் வாங்க மாட்டேன். விசேஷங்கள்ல மதியம் அதிகமா சாப்பிட்டுட்டா ராத்திரி ஒரு சூப்போடோ முடிச்சிருவேன்.
வாரத்துக்கு அரை கிலோ குறைக்கணும்ன்ற மாதிரியான எளிய டார்கெட்டை ஃபிக்ஸ் பண்ணினோம். அது 15 மாதங்கள்ல 30-35 கிலோவாக மாறிச்சு. எந்த மாற்றமும் ஒரே இரவில நடந்துடாது. நம்ம உடல் ஒரு புதிய பழக்கத்துக்கு அடாப்ட் ஆகவே குறைஞ்சது 45 நாள்கள் ஆகும்.
நானும் என் கணவரும் இணைந்து இந்தப் பயணத்தைத் தொடங்கினோம். ஒருவர் சோர்ந்து போகும்போது மற்றொருவர் ஊக்கப்படுத்தினோம். எங்களுக்குள்ள ஆரோக்கியமான போட்டியே உருவானது. நான் 105 கிலோல இருந்த நான் இப்ப 70 கிலோவா குறைஞ்சிட்டேன். 120 கிலோல இருந்த என் கணவர் 85 கிலோவுக்கு வந்துட்டாரு.

எனக்கு இப்போ 50 வயசு, மெனோபாஸ் ஏற்பட்டு, மூணு வருஷம் ஆகிடுச்சு. மெனோபாஸுக்குப் பிறகு உடல்ல உடலில் வளர்சிதை மாற்றம் (Metabolism) குறையும். அந்த நிலையிலயே என்னால எடையைக் குறைக்க முடியுதுன்னா, யார் நினைச்சாலும் எடையைக் குறைக்க முடியும். இதற்கு தேவை தெளிவான முயற்சியும், குடும்பத்தின் ஒத்துழைப்பும் மட்டுமே" என்று பாசிட்டிவிட்டு தந்து நிறைவு செய்தார் டாக்டர் ஷர்மிளா.


















