கோவை தெற்கில் பிரசாரத்தைத் தொடங்கிய செந்தில் பாலாஜி | Campaign Clicks
`S-ஆ P-ஆ… உங்கள் மெசேஜ் தலைப்பில் என்ன ரகசியம்?' - இது தெரியாமப் போச்சே?! - 9
ஒரு மெசேஜின் மதிப்பை தீர்மானிப்பது, அதன் உள்ளடக்கம் அல்ல. அதன் கடைசி எழுத்து. சென்னையில் சில மாதங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவம். ஒரு இளைஞருக்கு, வங்கியில் இருந்து OTP வந்தது. வேலை பிஸியால், பிறகு பார்த்துக் கொள்ளலாம்' என்று அந்த மெசேஜை கவனிக்காமல் விட்டுவிட்டார். சில நிமிடங்களுக்குப் பிறகு, தொடர்ந்து அவருக்கு மெசேஜ்கள் வந்தன. கணக்கை பார்த்தபோது… ஆயிரக்கணக்கில் பணம் கழிக்கப்பட்டிருந்தது. அந்த ஒரு மெசேஜை அவர் அப்போது கவனித்திருந்தால், அந்த இழப்பை தவிர்த்திருக்கலாம்.

மொபைலில் நமக்கு வரும் மெசேஜ்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. “Offer”, “Sale”, “OTP”, “Amount debited”… இப்படிப் பல தகவல்கள் தினமும் நம்மை வந்து அடைகின்றன. அதனால பல மெசேஜ்களை நாம் ஓப்பன் கூட செய்வதில்லை. ஆனால், இது ஆபத்தானது. இந்தியாவில் நடக்கும் பல ஆன்லைன் மோசடிகள் ஒரு சாதாரண SMS-ல இருந்து தான் தொடங்குகிறது.
பெரும்பாலான நேரங்களில், நோட்டிஃபிகேஷன் வந்த உடனேயே தேவையில்லை என டெலிட் செய்துவிடுகிறோம். அப்படி அழிக்கும் போது சில முக்கியமான மெசேஜ்களையும் சேர்த்து அழித்து விடுவோம். இந்த குழப்பத்தில் இருந்து நம்மை காப்பாற்றக் ஈஸியான வழி ஒன்று இருக்கிறது. அதுதான் மெசேஜின் தலைப்பில் இருக்கும் கடைசி எழுத்து.

பொதுவாக நமக்கு “AD-AXISBK-S”, “VK-AMAZON-P” போன்ற மெசேஜ்கள் வரும். இவை எழுத்துக்கள் என்பதைத் தாண்டி, ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது. முதல் இரண்டு எழுத்துக்கள் அந்த மெசேஜ் எந்த தொலைத்தொடர்பு சேவை நிறுவனத்தில் வழியாக வந்தது என்பதை குறிக்கும். உதாரணமாக, AD அல்லது AX என்றால் அது Bharti Airtel-ஐ குறிக்கும். VK அல்லது VM என்றால் Vodafone Idea. JM என்றால் Reliance Jio. BZ அல்லது BP என்றால் BSNL என்பதைக் குறிக்கும். அதற்கு பிறகு வரும் AXISBK, AMAZON போன்றவை அந்த மெசேஜை அனுப்பிய நிறுவனத்தைக் குறிக்கும்.
மெசேஜின் இறுதியில் வரும் ஒரு எழுத்து தான் அதன் நிலையைத் தீர்மானிக்கிறது. “S” என்றால் வங்கி பரிவர்த்தனை தகவல்கள்
OTP, கணக்கு தொடர்பான முக்கிய அறிவிப்புகள் கொண்ட சர்வீஸ் மெசேஜ் (Service message). இவை உங்கள் நிதி பாதுகாப்புடன் நேரடியாக சம்பந்தப்பட்டவை. அதனால், இத்தகைய மெசேஜ்களை தவறாமல் கவனிக்க வேண்டும்.

“P” என்றால் புரோமோஷன் மெசேஜ்கள் (Promotional message)இதில் சலுகைகள், தள்ளுபடிகள் கடன் அழைப்புகள் போன்றவை சார்ந்தவை. இவை பெரும்பாலும் நமக்கு அவசியமில்லாத தகவல்களாக இருக்கும். அதனால், விருப்பம் இருந்தால் மட்டும் பார்க்கலாம்; இல்லையெனில் தவிர்க்கலாம்.
“T” அல்லது “G” இதில் T என்பது Transactional message. நீங்கள் ஏற்கனவே செய்த நிதி செயல்களின் அப்டேட். உதாரணமாக டிக்கெட் புக் செய்தது. பணம் மீண்டும் வரவு வைக்கப்பட்டது போன்ற மெசேஜ்கள் இந்த வகையைச் சார்ந்தது.
“G” என்றால் Government message. அரசு அறிவிப்புகள், ஆதார் தகவல்கள் போன்றவை இதில் அடங்கும்.

இவ்வாறு, ஒரு மெசேஜின் தலைப்பிலேயே அதன் முக்கியத்துவத்தை நாம் கண்டுபிடித்து விடமுடியும். அதை புரிந்துகொள்ள பெரிய தொழில்நுட்ப அறிவு தேவையில்லை. சில நிமிடங்கள் போதும். அடுத்த முறை உங்கள் கைபேசியில் ஒரு மெசேஜ் வந்தால், அதைத் திறக்கும் முன், அந்த மெசேஜின் கடைசி எழுத்தை கவனியுங்கள். சில நேரங்களில்… ஒரு எழுத்தை கவனிக்காதது, ஒரு பெரிய இழப்பாக மாறலாம்.
அலார்ட்டாக இருப்போம்.

















