செய்திகள் :

கட்சித் தாவும் தலைவர்கள்... அதிருப்தி அலையால் அல்லாடும் காங்., பாஜக - `அதகள' அஸ்ஸாம் தேர்தல் களம் !

post image

இந்திய அரசியலில் வடகிழக்கு மாநிலங்களின் நுழைவுவாயிலாகக் கருதப்படும் மாநிலம், அஸ்ஸாம். இந்தியாவில் இன்னும் சில வாரங்களில் சட்டமன்றத் தேர்தலை எதிர்க்கொள்ளவிருக்கும் ஐந்து மாநிலங்களில் அஸ்ஸாமும் ஒன்று. இந்த நிலையில், சமீபகாலமாக அங்கு அரங்கேறி வரும் அரசியல் நகர்வுகள், தேசிய அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

அஸ்ஸாம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் பூபன் போரா, கடந்த 32 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் தூணாக விளங்கியவர். மார்ச் 17-ம் தேதி காங்கிரஸ் உடனான உறவை முறித்துக்கொண்டு, அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா முன்னிலையில் தன்னை பா.ஜ.க-வில் இணைத்துக்கொண்டார்.

ஹிமந்தா பிஸ்வா சர்மா - பூபன் போரா
ஹிமந்தா பிஸ்வா சர்மா - பூபன் போரா

இந்தச் சம்பவம் நடந்த மறுநாள் அஸ்ஸாமின் நாகோன் தொகுதியின் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பிரத்யுத் போர்டோலாய் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் மாநில பா.ஜ.க தலைவர் திலீப் சைக்கியா முன்னிலையில் பா.ஜ.க-வில் இணைந்தார்.

இவர் நாகான் தொகுதியில் இரண்டு முறை காங்கிரஸ் எம்.பி-யாக இருந்தவர் மட்டுமல்ல, அதற்கு முன்பு மார்கெரிட்டா தொகுதியில் நான்கு முறை எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

இப்படி அஸ்ஸாம் சட்டமன்றத் தேர்தலையொட்டி நடந்த இந்த இரு அரசியல் நகர்வுகளுக்குப் பின்னணியில், அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் அரசியல் தந்திரம் இருக்கிறது என்ற செய்திகள் தேசிய அளவில் பேசுபொருளானது.

இந்தச் செய்திகளுடன் பிரத்யுத் போர்டோலாய், அஸ்ஸாம் மாநிலத்தின் அதிகார மையமாக விளங்கும் திஸ்பூர் சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராகக் களம் இறக்கப்படுவார் என்ற மற்றொரு தகவலும் பரவத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து பிரத்யுத் போர்டோலாய் பா.ஜ.க-வுக்கு வந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் முன்பே பா.ஜ.க-வின் மூத்த நிர்வாகிகளிடம் அதிருப்தி வெளிப்படத் தொடங்கியது.

பிரத்யுத் போர்டோலாய்
பிரத்யுத் போர்டோலாய்

மார்ச் 19 அன்று பிரத்யுத் போர்டோலோயின் வேட்புமனு அறிவிக்கப்பட்டதும், அது பா.ஜ.க-வுக்குள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தற்போதைய பாஜக எம்.எல்.ஏ-வான அதுல் போரா, ``இந்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியாதது. நான் இந்தச் சட்டமன்றத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடுவது குறித்தோ அல்லது ஒரு படி மேலே போய், காங்கிரஸ் வேட்பாளர் மீரா போர்தாகூர் கோஸ்வாமிக்கு ஆதரவு அளிப்பது குறித்தோ பரிசீலித்து வருகிறேன்" என ஆவேசமாகத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அவர் மீரா போர்தாகூரைச் சந்தித்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அதுல் போராவை நேரில் சந்தித்து, `2029 மக்களவைத் தேர்தலில் கௌஹாத்தி தொகுதியில் போட்டியிடுவதில் கவனம் செலுத்த வேண்டும்' எனச் சமாதானப்படுத்தினார். அதன் பிறகுதான் அதுல் போரா அமைதியானார்.

ஆனால், இந்தக் கொந்தளிப்பு அதுல் போராவுடன் நிற்கவில்லை. அது மற்றொரு மூத்த பா.ஜ.க தலைவரும், இந்த தேர்தலில் சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்தவருமான ஜெயந்த குமார் தாஸையும் சூடேற்றியது. இதனால், 35 ஆண்டுகளாக தீவிர பா.ஜ.க ஆதரவாளராக இருந்த ஜெயந்த குமார் தாஸ், பா.ஜ.க-விலிருந்து விலகி தற்போது சுயேச்சையாகப் போட்டியிடுகிறார்.

ஜெயந்த குமார் தாஸ்
ஜெயந்த குமார் தாஸ்

இது குறித்து ஜெயந்த குமார் தாஸ் தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசியபோது, ``கடந்த 15 ஆண்டுகளாக நான் திஸ்பூர் தொகுதிக்காகக் காத்திருக்கிறேன். மீண்டும் அதுல் போராவிற்கே சீட் வழங்கப்பட்டிருந்தால்கூட நான் கட்சியில் தொடர்ந்து பயணித்திருப்பேன். ஆனால், பா.ஜ.க-வில் சேருவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு வரை 'எனக்கு எப்போதும் காங்கிரஸ் DNA தான் இருக்கிறது' எனக் கூறிக்கொண்ட ஒருவருக்கு சீட் வழங்கப்படுவதைத் தாங்கிக்கொள்ள முடியாது.

எல்லாவற்றுக்கும் ஓர் எல்லை உண்டு. பா.ஜ.க-விற்கு யாரும் சந்தாகூட தராத காலத்திலிருந்து, 35 ஆண்டுகள் நான் உழைத்து தியாகம் செய்தது, காங்கிரஸ் ஆட்களை அமைச்சர்களாகவும் எம்.எல்.ஏ-க்களாகவும் ஆக்குவதற்கு அல்ல." எனக் காட்டமாகப் பேசியிருக்கிறார்.

இந்த நிலையில்,நேற்று (30-ம் தேதி) கௌஹாத்தியின் பெல்டோலாவில் நடைபெற்ற கட்சித் தொண்டர்கள் கூட்டத்தில் பேசிய பிரத்யுத் போர்டோலோய், ``நான் மிகச் சிறிய வயதிலிருந்தே கட்சி அமைப்புகளில் பணியாற்றி வருகிறேன். ஒரு வேட்பாளரிடமிருந்து அடிமட்டத் தொண்டர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். தயவுசெய்து என்னை உங்கள் குடும்பத்தில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்.

பிரத்யுத் போர்டோலோய்
பிரத்யுத் போர்டோலோய்

உங்கள் இன்ப துன்பங்களில் பங்கெடுத்து உங்களோடு பயணிக்க விரும்புகிறேன். ஒரு வேட்பாளராக என் மீது உங்களுக்குக் அதிருப்தி இருக்கலாம். அது இயல்பானதுதான். திஸ்பூர் எனக்குப் புதிய தொகுதியாக இருக்கலாம், ஆனால் நான் எப்போதும் ஒரு நல்ல மாணவனாகவே என்னைக் கருதுகிறேன். நான் பல்வேறு வார்டுகளுக்குச் சென்று மக்களின் பிரசனைகளைப் புரிந்துகொள்ள முயற்சி செய்து வருகிறேன்." என தனது வருகையால் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள சலசலப்பை உணர்ந்தே பேசினார்.

2016 முதல் கௌஹாத்தியின் நான்கு முக்கியத் தொகுதிகளும் என்.டி.ஏ கூட்டணியின் கோட்டையாக இருந்து வருகின்றன. 2021-ல் அதுல் போரா காங்கிரஸ் வேட்பாளரை 1.2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இப்போது அதே தொண்டர்கள், பிரத்யுத் போர்டோலோய்க்கு ஆதரவாகத் திரண்டுள்ளனர்.

இது தொடர்பாக செய்தி நிறுவனத்திடம் பா.ஜ.க தொண்டர்கள் சிலர் பேசியபோது, ``ஆரம்பத்தில் தொண்டர்களிடையே கோபம் இருந்தது. ஆனால் அதுல் போராவே அவரை ஆதரிக்கச் சொன்ன பிறகு, நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். வேட்பாளர் புதியவராக இருக்கலாம், ஆனால் பணிகள் பழையபடியே தொடரும் என்று மக்களிடம் விளக்கி வருகிறோம்." என்றார்.

அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா
அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா

அதே நேரம், ஜெயந்த குமார் தாஸ் மக்களைச் சந்தித்து, ``சின்னத்தைப் பார்த்து வாக்களிக்காதீர்கள், சின்னம் வேலை செய்யாது, மனிதர்கள்தான் வேலை செய்வார்கள். தகுதியான வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்பதை இந்தத் தேர்தல் கட்சிகளுக்கு உணர்த்தட்டும்" என்று வேண்டுகோள் விடுத்து வருகிறார்.

இரண்டு ஆளுமைகளை காங்கிரஸ் இழந்திருப்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை பா.ஜ.க ஜெயந்த குமார் தாஸ் போன்ற பல விசுவாசிகளை இழந்திருக்கிறது என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்னொருபக்கம், ஹிமந்தா பிஸ்வா சர்மா காங்கிரஸிலிருந்து பா.ஜ.க-வுக்கு தாவியவர். அதனால் அவர், காங்கிரஸ் கட்சியிலிருந்து வருபவர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து கவனிக்கிறார். அதனால், ஆரம்பத்திலிருந்து கட்சிக்காக உழைத்த பா.ஜ.க-வினருக்கான அங்கீகாரம் மறுக்கப்படுகிறது என்ற விமர்சனமும் மறுப்பதற்கில்லை.

அதிமுக-வின் 2வது உறுப்பினர் குடும்பத்துக்கு சீட் இல்லை! - ஆயிரம் விளக்கு வளர்மதிக்கு வந்தது ஏன்?

மூன்று முறை மு.க.ஸ்டாலின் நின்று வென்ற தொகுதி என்பதால், சென்னை ஆயிரம் விளக்கு ஒரு நேரத்தில் விஐபி தொகுதியாகாப் பார்க்கப்பட்டது.என்ன காரணத்தினாலோ தெரியவில்லை, பிறகு ஸ்டாலின் கொளத்தூருக்கு மாறி விட்டார்... மேலும் பார்க்க

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 : வேட்புமனு முதல் வேட்பாளர்கள் வரை.! key Details | Full schedule

தேர்தல் அறிவிப்பு :தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கும் தேர்தல் தேதியை அறிவித்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். அதன்படி, ஒரே கட்டமா... மேலும் பார்க்க

தமிழ்குமரன் காங்கிரஸில் சேர்ந்தது முதல் பாமக-விலிருந்து நீக்கப்பட்டது வரை! - நடந்தது என்ன?

குடும்பத்திற்குள் ஏற்பட்ட பிரச்னையால் இரண்டாகப் பிளவுபட்ட பாமக-வில் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான அணி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்திக்கிறது. அன்புமணி, ராமதாஸ், ஜி.கே.மணிஅதே நேரம், ட... மேலும் பார்க்க

`ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதெல்லாம் இருக்கட்டும்; அதை விட...'- ஈரான் போரில் ட்ரம்ப்-ன் அடுத்த பிளான்?

ஈரான் போர் ஐந்தாவது வாரமாக நடந்து கொண்டிருக்கிறது. இது இந்தப் போரில் சம்பந்தப்பட்டுள்ள ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளை மட்டும் பாதிக்கவில்லை. இந்தப் போரினால் கச்சா எண்ணெய் விலை உயர்வு, கச்சா எண... மேலும் பார்க்க

பாஜக-வில் இணைந்த பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயாஸ் - மே.வங்க தேர்தலில் போட்டியா?!

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலோடு சேர்ந்து மொத்தம் 5 மாநிலச் சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது. மேற்கு வங்கத்தில் நடக்க இருக்கும் இத்தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதில் பா.ஜ.க தீவிரமாக இ... மேலும் பார்க்க

ஈரான் போருக்கு ஆகும் செலவுகள்; அரபு நாடுகளின் தலையில் கட்டப்போகிறாரா ட்ரம்ப்?

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி, அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரானைத் தாக்கத் தொடங்கின. முதல் நாளிலேயே, ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார். இந்தப் போர் இன்னும் முடிந்தபாடில்லை… தொடர்ந்துகொண்டே இர... மேலும் பார்க்க