Leader: "அந்தச் சூழலில்தான் லெஜெண்ட் சாருடனான பட வாய்ப்பு வந்தது!" - துரை செந்த...
எண்ணத்தின் வண்ணங்கள் - சிறுகதை
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
அந்தி சாயும் நேரம்,உழைத்து களைத்த அத்தனை உயிரினமும் கூடடையும் நேரமும் கூட..
"யோ.. ராசமுத்து இங்க என்னய்யா பண்ற? உன்னை எங்க எல்லாம் தேடுறது.மேக்காட்டில் இருந்து கீழவரைக்கும் தேடிட்டு வரேன்.பொழுது இறங்குன நேரத்தில் வீட்டை பூட்டிபோட்டுட்டு இங்க வந்து உட்கார்ந்து.. ஏதோ கோட்டையை பிடிக்கற மாதிரி யோசனை செய்துட்டு இருக்கியே என்ன விஷயம்.." என்று விசாரித்தவாறே ராசமுத்து அருகே அமர்ந்தார் சின்னய்யா..
சின்னய்யாவின் வார்த்தைகள் எல்லாம் ராசமுத்து காதில் விழுந்தாலும் ஏனோ பதில் சொல்ல முயலாமல் அசட்டையாகவே அமர்ந்து இருக்க..அவர் அமர்ந்து இருந்தது ஏரிக்கரை ஓரம்..காற்றுக்கு சிலு சிலுவென அலைபாய்ந்தபடி இருந்த நீரையும்.. அங்கே நீந்தி விளையாடியப்படி இருந்த இரண்டுடொரு இளைஞர்களையும் விழிகள் மட்டும் நோக்கினாலும்.. எண்ணத்தில் அது பதியவில்லை.

"ஏன்டா..!ராசா உன்னை தானே.." என்று சின்னய்யா நண்பனை பிடித்து உலுக்க..
"ஹாங்க்.. அது வந்து நீ.. நீ"என்றே பதறிய ராசமுத்து திரு திருவென விழிக்க..
"டேய் நான் உன் தோஸ்து சின்னய்யா தான்..ஏன் இப்படி பேயை கண்ட மாதிரி இந்த முழிக்கிற பயந்துட்டியா என்ன??..
"இல்ல.. அதுவந்து நீ.. நீ அவன் தானே.." என்று சின்னய்யாவை உன்னித்தவர் தலையை லேசாய் உதறிக் கொண்டார்..
"நான் நான்தான்;நீ நீதான் அதுக்கென்ன இப்போ..ஆமா.. பொழுது போச்சுன்னா பொடக்காளி பக்கமே தனியா போகாத ஆள் ஆச்சே நீ.. தனியா இங்க உட்கார்ந்து என்ன செய்துட்டு இருக்கே.. என்னவோ உன் நடவடிக்கை எல்லாம் சரி இல்லை யே.. "என்று சற்று கடுப்பாய் சின்னய்யா கூறவும்..
"இல்ல.. அதெல்லாம் ஒன்னும் இல்லையே நான் எப்பவும் போலத்தான் இருக்கேன்.. நான் இங்கே இருக்கேனுன்னு உனக்கெப்படி தெரியும்.." என்றார் ராசமுத்து சுரத்தில்லா குரலில்..
"நம்ம கேனையன்தான் சொன்னான் நீ இங்கே இருக்கன்னு:அது சரி அக்கா புருஷன் செத்து போச்சுன்னு போனியே.. காரியம்.. சடங்கு எல்லாம் சோட, சொணக்கம் இல்லமா முடிஞ்சுதா.. உன் மத்த ரெண்டு தம்பிகளும் பிகு பண்ணாம ஒத்துழைச்சாங்களா??என்னால தான் வர முடியாமல் போச்சு, கோவில் தெவம் சாட்டிட்டாங்க, பொங்கல், மறுபூசை எல்லாம் முடியறதுக்குள்ளே, அங்கவும் எல்லாம் முடிஞ்சு போச்சு என்னாத்த சொல்ல போ" என்றார் சின்னயாவும்..
ராசமுத்துக்கும், சின்னய்யாக்கும் வயதில்,மெலிந்த தோற்றத்தில் மாறுபடில்லை. ஆனால் ராசமுத்துக்கு, குடும்பம் குட்டி என்று எதுவும் இல்லை.. மணமான மறுமாதமே அவரின் மனைவிக்கு இவரின் பொறுப்பற்ற செயல்கள் பிடித்தமற்று போக;எந்த பஞ்சாயத்தும், கோர்ட், கேஸ், ஜீவனாம்சம் என்று போகாமலே பிரிந்து அவரவர் சொச்ச வாழ்க்கை யை வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்..
சின்னய்யா பெரிய குடும்பத்தின் தலைவன்.இரு மனைவிகளோடு, நிறைய பிள்ளைகளோடு மல்லு கட்ட முடியாமல் பலசமயம் ராசமுத்து இல்லத்தில்தான் தஞ்சம் புகுவார்.. இருவரும் உள்ளூர் சாராயத்தை குடித்து விட்டு அவர்களின் இளமை கால கதைகளை பேசி பேசி மாய்வதும் அடிக்கடி நடக்கும் நிகழ்வு.. சின்னய்யா மட்டும் இல்லை இன்னும் நிறைய நண்பர்கள் இது போல் ராசமுத்து வீட்டுக்கு வந்து தங்களை சரி படுத்தி செல்வதும் உண்டு..
"ம்ம்.. முடிஞ்சது.. முடிஞ்சது "
"என்னாச்சு இவனுக்கு ஒருமாதி இருக்கான்.. எது விசாரித்தாலும் பட்டு படாம பதில் சொல்லுறான் என தனக்குள் நினைத்த சின்னய்யா, ஒரு வேளை அக்கா புருஷன் இறந்த துக்கத்தில் இருந்து இன்னும் வெளில வரல போல;இருக்காதா பின்ன? அவனின் மாமனுக்கு மத்த மச்சான் இரண்டு பேரை தவிர இவன் தானே நெருக்கம் அந்த வருத்தம் இருக்காதானே செய்யும் என்று தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டார்..

"சின்னய்யா வீட்டை நெருங்கவும், ராசமுத்து டேய் இன்னைக்கு ராவுக்கு தூங்க என் வீட்டுக்கு வரயா. " என்று தயக்கமாய் கேட்க..
யோசனையாய் நண்பனை பார்த்த சின்னய்யா "ஏன்டா..? மேலுக்கு ஏதும் சுகம் இல்லையா.. வவுத்துக்கு ஏதாவது தின்னியா..? இல்லனா வீட்டுக்கு வா.. வேலம்மா களி கிளறிக்கிட்டு இருந்தா..கானா பருப்பு துவையலும் வச்சு இருக்கா சூடா நாலுவாய் தின்னுட்டு பிறகு ஓன் வீட்டுக்கு போவோம்" என்க..
"இல்ல சின்னு மத்தியானமே சோறு பொங்கி, தடனிக்கொட்டை கடைஞ்சு வச்சுருக்கேன்.. நீ சீக்கிரமா வா" என்று விட்டு பதிலை எதிர்பாராமல் ராசமுத்து நடையை கட்ட..
ஹூம்.. என்று பெருமூச்சு ஒன்றை வெளியிட்ட சின்னைய்யா தன் வீடு நோக்கி திரும்பினார்..
இரவு பத்து மணியை நெருங்க..
சின்னு சாப்பிட்டு முடித்து. தன் நண்பன் வீட்டுக்கு கிளம்ப.. அவரின் மனைவி வேலம்மாள் ஆயிரம் நொடி நொடிக்க..
"அடியே..வேலம் பாவம் அவனுக்கு யாரு இருக்கா..? புள்ளையா குட்டியா.. என்னமோ தெரியல மனுஷன் இன்னைக்கு ரெம்ப வாடி போய் கிடக்கான்.. அக்கா புருஷன் இறந்த துக்கம் வேறு.. அதுக்கு தான் என்னனு போய் பாக்குறேன்.." என்று சின்னு தாஜா செய்ய..
"யாரு நீங்க எல்லாம் பொண்டாட்டி செத்தாவே கவலை படமாட்டிங்க.. அக்கா புருஷன் செத்ததுக்கு கவலை பட போறீங்க.. குடிச்சுட்டு கூத்தடிக்க ஏதோ காரணம்" என்று வேலம் சூடாய் பதிலிருக்க..
"ச்சே.. ச்சே அதெல்லாம் ஏதும் இல்ல வேலம் உன் சத்தியமா..? என்றார் சின்னைய்யா..
"எங்கேயே தொலையும்.. அதுக்கு என் மேல பொய் சத்தியம் வேண்டாம்" என்றுவிட்டு வேலம்மாள் தன் பணியை தொடர..
பத்து வீடு தள்ளி இருந்த நண்பன் வீட்டுக்கு கிளம்பினார் சின்னையா..
ராசமுத்து வீட்டை நெருங்க நெருங்க.. அவர் வீட்டின் முன்பு உள்ள தாழ்வாரத்தில் உள்ள திண்ணையிலே காத்திருப்பது தெரிந்தது.வீட்டில் உள்ள அத்தனை விளக்குகளும் எரிந்ததை ஆச்சர்யமாய் நோக்கினார்..அமாவாசை இருட்டாய் இருந்தாலும் வெளியில் ஒரு லைட்டை மட்டும் தான் ஒளிர விட்டு இருப்பார்.. மற்ற படி வீட்டினுள் செல்லும் போது மட்டும் தான் லைட்டை போட்டு உடனே அணைத்தும் விடுவது வழக்கம்..
"என்ன ராசா இன்னைக்கு அம்புட்டு லைட்டும் போட்டு இருக்கே..உலக மகா அதிசயமா இருக்கே" என்றவாறே சின்னையா திண்ணையில் வந்து அமர..
"மாரியும், காஞ்சானும் இவ்ளோ நேரம் இங்க தான் பேசிட்டு போனாங்க என்ற ராசமுத்து.. ஆமாம் நீ என்ன இவ்ளோ நேரம் கழிச்சு வந்துருக்க "என்று வினவ..
"ஏன்யா ராசா..?? உன்னை மாதிரியா எம் பொழப்பு..? நோகாமல் சோத்துக்கு வந்துடுது..உன் அக்கா புள்ளைங்க வாங்கி போட்டுடுது; பண்டம் பாடிக்கு எல்லாம் தட்டு நறுக்கி போட்டு, தண்ணி காட்டி அது அது இடத்தில் கட்டிட்டு வரலைனா வேலம் என்னை சும்மா விடுவாளா.. இல்ல கஞ்சி தான் ஊத்துவாளா நீ அறியாததா சொல்லு பாப்போம்"??என்று கேள்விகளை அடுக்க..
முடியாது என சிரித்து ஆமோதித்த ராசமுத்து.. "ஆமா சின்னு பேயை பத்தி எந்த அளவுக்கு நம்புற நீ.."என்று திடீரென கேட்க..
நண்பன் நாபியில் இருந்து சட்டென வந்து குதித்த இந்த வினாவை சற்றும் எதிர் பாரத சின்னையா, "அடேய் அதுங்க எல்லாம் ஊர்வலம் போற நேரத்துல அதை பத்தி ஏன்டா பேசுற.. நம்மை பத்தி ஏதோ பேசுறாங்கன்னு பாசத்துல வந்து நம்மை பத்திக்க போகுது டா "விளையாட்டாய் பதில் சொல்ல..
"ப்பச்.. கேலி பண்ணாம கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுடா "சற்று எரிச்சலாய் ராசமுத்து மீண்டும் கேக்க..
"டேய் நீ அறியாததா..!நம்மூர் நம்பிக்கை உனக்கும் தெரியும் பேய் இருக்குது என்பதும்.. செத்தவங்க தமக்கு பிடித்தவங்களை தன்னின் நிறைவேறா ஆசைகளை நிறைவேத்தி கொள்ள பீடிப்பதும், நாம அதை ஓட்டுறதும் வழக்கம் தானே.." பதில் தந்தார் சின்னையா.
"அப்படினா..! இப்போ நான் சொல்லுறதை நீ நம்புவ தானே.."
"என்ன பெரிசா பீடிகை போடுற என்ன விஷயம் சொல்லு.."
"அது வந்து..என சற்று நிதானித்து பெருருமூச்சு விட்டவர் அக்கா வீட்டுக்காரர் குழி மேட்டுக்கு பூஜை போட போயிருந்த அன்னைக்கு சமாதியை சுத்தி வந்து கும்பிட்ட போது என்னை யாரோ அந்த குழி மீது இழுத்து தள்ளிட்டாங்கடா.. எனக்கு உடம்பு எல்லாம் கட கடனு ஆடி போச்சு.. எழுந்திரிக்க முடியாத மாதிரி யாரோ வச்சு அழுத்த வேற செஞ்சாங்க."
"ஹாங்க் அப்புறம் "வாயைபிளந்தப்படி கேட்டார் சின்னையா..
"அப்புறம் என்ன அங்க இருந்தவங்க தூக்கி விட்ட பிறகுதான் எழும்ப முடிஞ்சது. "
"அவ்ளோ தானே.. உடம்புல அடி கிடி படலையே தவறி விழுவது சகஜம் தானே விடுடா..இதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல.. ஆமா இதுக்கும் நீ கேட்ட பேய்க்கும் என்ன சம்பந்தம் "சின்னு குழப்பமாய் கேட்க..
"ஏன்டா.. இவ்ளோ நேரம் காரணம் இல்லாமையா இந்த விஷயத்தை சொன்னேன்னு நினைக்கிற.. "ராசமுத்து நண்பனை முறைந்தவாறே கேட்க..
"இல்ல.. சரி சொச்சத்தையும் சொல்லி முடி "
"விழுந்து எழுந்த மறுநாளில் இருந்து காதுக்குள் ஒரு குரல் நீ எப்போ மச்சான் இங்க வர போறனு.இரண்டு நாள் முன்பு கனவில் கூட உங்கிட்ட தானே மச்சான் எப்போவும் பேசுவேன்,இங்க நான் தனியா இருக்கேன் நீ வா சீக்கிரம்னு கையை பிடிச்சு இழுத்தாருடா "என்று சற்று பயம் நிறைந்த குரலில் ராசா சொல்ல..
"என்னடா சொல்லுற "விதிர் விதித்து போனார் சின்னையா பயத்தில்.

"ஆமாம் டா.. அது மட்டும் இல்ல என்னை மாமா பின் தொடர்ந்து வந்துகிட்டே இருக்காரு.. சில சமயம் இந்த திண்ணையில் உட்கார்ந்து பாத்து கிட்டே இருக்காரு டா.."
"அய்யோ என்னடா சொல்லுற" வெடுக்கென்று எழுந்தார் சின்னையா..
"பாத்தியா சொல்லும் போதே பயந்து எந்திரிகிற நீயே.. அடிக்கடி தெரியறது இல்ல. எப்பவாச்சும் தான் மாமன் உருவம் தெரியுது.."
"அப்புறம் ஏன் நீ இங்க தனியா வந்த அங்க உன் அக்கா வீட்லயே இருக்க வேண்டியது தானே "சுற்றிலும் விழிகளை சுழல விட்டவாறே சின்னு கேட்க..
"இல்ல அங்க இருக்க முடியல.. திரும்பின பக்கம் எல்லாம் மாமா இருக்க மாதிரியே இருக்கு.அதுக்கூட பரவாயில்ல என்னோட மன கிலோசம்னு சொல்லலாம்.. ஆனா நான் விழுந்ததை பத்தி பின்னாடி பேசினது தான் எனக்கு பயமா இருக்கு.. அதான்.." என்று ராசமுத்து இழுக்க..
அவரே தொடர்ந்து..
"மச்சானை விட்டு மாமனுக்கு தனியா போக விருப்பம் இல்லை போல.. வம்பாடியா கூப்பிடுறார் என்று பேசிக்கிட்டாங்க டா.. அநேகமா கூடிய சீக்கிரம் நானும் செத்துடுவேன்னு நினைக்கிறன்.."இதுமாதிரி தானே கொழந்தையப்பனுக்கு நடந்து கை கால் இழுத்துகிச்சு.. அப்போ எனக்கும் ஏதாவது நடக்கும் தானே.."
"அட சீ..!இதென்ன பேச்சு.. அவனுங்க என்னமோ ஏகடியத்துக்கு பேசி இருக்காங்க அதை போய் பெரிசா எடுத்துக்கிட்டு.. விடு காலையில் மொத வேலையா நம்ம முனியப்பன் கோவிலில வச்சு பரிகார கயிறு கட்டிக்கலாம்.. பிறகு எப்பேர்ப்பட்ட பேயும் உன்னை நெருங்காது.சரி இதைப் பத்தி பேசுனா பேசிட்டே தான் இருக்கணும்னு.. நம்ம குலசாமி மேல பாரத்தை போட்டு தூங்கு.. எல்லாம் நல்லதே நடக்கும் "என்றவர் திண்ணையிலேயே சரிய..
"நீ இங்க வந்து கட்டிலில் படுடா.. நான் திண்ணையிலே படுத்துகிறேன்" என்று நண்பன் சொல்லவும் சின்னுவும் மறுக்காது வந்து படுத்து கொள்ள..
"ஏன்டா..!சின்னு நீ எல்லாம் நோய் நொடின்னு படுத்துட்டா, திட்டிகிட்டாவது வைத்தியம் பார்க்க, உன்னை பாராமறிக்க, சம்சாரம்,குழந்தை குட்டிங்க இருக்கு.நான் ராவுல செத்தா கூட அனாதையாத்தான் கிடக்கணும்.. நீ எதுக்கும் காலையில் என்னை காணலனா ஒரு எட்டு வந்து பாத்துட்டு போடா "என்று கலங்கிய குரலில் நண்பன் சொல்ல..
பதறி எழுந்த சின்னு "டேய் என்ன பேச்சு ஒருமாதிரி இருக்கு.. நாட்டுக்கு ராசாவா இருந்தா கூட சாவுக்கு நாம என்ன வரம் வாங்கி வந்தோமோ அதுதான் நடக்கும்.உன்னை யாரும் கை விட்டுட மாட்டாங்க. உன் அக்கா புள்ளைங்களும் தங்கமாத்தானே உன்னை பாத்துக்குதுங்க.. கண்டதையும் யோசிச்சு குழம்பாம ஒழுங்கா படு.. தூங்கி எந்திரிச்சா மனசு சரியாயிடும்.." என்று நண்பனுக்கு சமாதானம் சொல்லி படுக்க வைத்தவர்.. நாளைக்கு அவன் அக்கா பிள்ளையிடம் இவனை பத்தி பேசிட வேண்டும் என முடிவெடுத்தார்..
மனிதன் நினைப்பதை எல்லாம்.. நம்மை படைத்தவன் நடத்திடுவானா என்ன??
நடுநீசியை தாண்டிய பொழுது..
சின்னு உழைத்த களைப்பில் அசந்து தூங்க..
திடீரென..
ஏதோ சத்தம் கேக்க.. படக்கென விழிப்பு தட்டியது சின்னுவுக்கு.. நண்பன் படுத்து இருந்த இடத்தை திரும்பி பார்க்க அவ்விடம் காலியாக இருந்தது.. சரி இயற்கை உபாதைக்காய் போய் இருப்பான் வந்து விடுவான் என்று தன்னை சமாதானம் செய்து கொண்டு திரும்பி படுத்தவர் மீண்டும் கண் அசர..
ஹக்.. ஹக்.. ஸ்ஸ்ஸ்ஸ்.. என்று வினோத சப்தங்கள் மீண்டும் இவரை உசுப்பி எழுப்ப.
ச்சே என்னடா இது என்று அலுப்போடு எழுந்து ராசமுத்துவை நோக்க.. அந்த இடம் இன்னும் காலியாகவே இருந்தது.எங்க தான் போய் இருப்பான் என்று குழப்பத்தோடு சுற்றிலும் பார்த்தவர் எங்கேயும் தெம்படாம போக.பயத்தோடு எழுந்து வாசல் வரை சென்று "ராசமுத்து..டேய் ராசமுத்து" என்று கூவி பார்க்க..
பதில் எதிர்த்த வீட்டு காத்தமுத்துவிடம் இருந்து வந்தது.. "எலோய் யாருடா இன்னேரத்துல என் பங்காளிய கூப்புட்டுட்டு இருக்கிறது" என்றே..
"ஹூம்.. நானும் உன் பங்காளி சின்னு தான்.. இவனை எங்கே காணும்.. அதான் கூப்பிட்டு பார்த்தேன்.."
"அட எங்க போயிருக்க போறான்.. அந்தாண்ட இந்தாண்ட எதுக்காவது ஒதுங்க போய் இருப்பான்பா.. இதுக்கு ஏன் சமக்கோழியாட்டம் கூவிட்டு இருக்க..போ போய் படு.."
"இல்ல டா ரெம்ப நேரமா காணோம் அதான்.." சின்னு இழுக்க..
"அப்படியா..!பொம்பள சகவாசம் கூட ரெம்ப நாளா இல்லையே.அதெல்லாம் விட்டுட்டுதா சொன்னானே.அதே போலவும் நடந்தும் கிட்டானே.. மறுபடியும் மாறிட்டனா.? என்று வினவியவாறே சின்னு இருக்கும் இடத்துக்கு வர..
அப்போது..
"யேய்.. மாமா என்னை விடு.. விடு கழுத்தை வலிக்குது.. மூச்சு முட்டுது "என்று வீட்டின் பக்கவாட்டில் இருந்து சத்தம் கேட்க..
"அச்சோ.. ராசமுத்து தான் கத்துறான் வாடா போய் பாப்போம்" என்று சத்தம் வந்த திசை நோக்கி ஓட..
அங்கே.. மின்சார விளக்கு வெளிச்சத்தில் கண்ட காட்சியில் திகைத்து போய் நின்றனர் இருவரும்..
ராசமுத்து தானே கையை கழுத்தில் வைத்து அழுத்தி கொண்டே சப்தமிட்டு கொண்டிருந்தார்..
"என்னாடா இவன் பைத்தியக்காரன் மாதிரி பண்ணிட்டு இருக்கான் என்று சொன்ன காத்தமுத்து ஓடிப்போய்,, டேய் ராசா கழுத்தில் இருந்து கையை எடுடா "என்று நண்பனின் கையை தொட முயல..
டேய் என்னை தடுக்க நீ யாருடா..! இது எனக்கும் மாமனுக்கும் உள்ள பிரச்சனை.. இன்னைக்கு அடிச்சுக்குவோம் நாளைக்கி கூடிக்குவோம் நீ இதில தலையிடாத போ.." என்று இவர்கள் முகம் நோக்கமலே வாய்மட்டும் வார்த்தைகளை துப்ப..
"டேய் சின்னு வா. இவனை பிடி. திண்ணைக்கு கொண்டு போவோம்" என்று காத்த முத்து கூவ..
"என்னடா ஆச்சு இவனுக்கு ராத்திரி கூட நல்லாதானே பேசிகிட்டு இருந்தான்.." சின்னுவும் போய் ராசமுத்துவின் கை பிடிக்க.. அசுரபலத்தில் இருவரையும் புறாங்கையால் இடித்து தள்ள..
இவர்கள் பேச்சு சத்தத்தில் காத்த முத்துவின் வீட்டில் இருந்து அவரின் தம்பியும் எழுந்து வர.. விஷயம் அறிந்து மூவரும் சேர்ந்து ராசமுத்துவை கழுத்தில் இருந்து கைகளை பிரித்து திமிர திமிர தூக்கி வந்து திண்ணையில் அமர வைக்க..
நிலை குத்திய பார்வை யோடு.. அமைதியாய் அமர்ந்து இருந்தார் ராசமுத்து.. எதுவும் பேசவில்லை, நண்பர்களை அறிந்ததாகவும் தெரியவில்லை..
"இன்னும் செத்த நேரத்தில் கோழி கூவிடும்னு நினைக்கிறேன்.. இப்போ நாம என்னடா செய்யறது.."சின்னு கேட்க..
"ஒன்னும் செய்ய இயலாது;அதான் அமைதியாயிட்டானே உள்ளூர்ல தானே இவன் தம்பி இருக்கான்.. போன் பண்ணி சொல்லிடுவோம் அவங்க வரட்டும்.. அவங்களே முடிவு செய்துக்குவாங்க என்ற காத்தமுத்து தன் தம்பியை நோக்கி சின்னவனே இவன் தம்பிக்கு போன் செய்யுடா என்றுவிட்டு கதவை திறந்து உள்ளே சென்றவர்.. சாமி படம் முன்பு இருந்த திருநீறை அள்ளிவந்து அவரின் இஷ்ட தெய்வத்தை நினைத்து ஏதோ முனுமுனுத்தவர் தலையில் ஒரு துளியை தெளித்து விட்டு ராசமுத்து நெற்றி நிறைய பூசினார்.. எதிர்ப்பு முற்றிலும் தொலைத்தவராய் அமைதியாய் அமர்ந்து இருந்தவரை படுக்க சொல்லி லேசாய் சாய்க்க.. அமைதியாய் குறுகி படுத்து கொண்டார்..நண்பர்களின் தூக்கத்தை தொலைத்தவர் கண் அயர்ந்தார்.
சற்று நேரத்தில்..
அவரின் தம்பியும் வந்திட.. பாழாய் போன சொத்து பிரச்சனை தான் எத்தனை உறவுகளை பிரித்து வைத்து விடுகிறது..
"என்னாச்சு அண்ணனுக்கு" என்று பதட்டமாய் கேட்ட தம்பியிடம் சின்னு, ராசமுத்துவிடம் பேசிய அத்தனையும் சொல்ல..
"அய்யோ..!எங்க அண்ணனை என் மாமாவே பேயாய் வந்து பிடிச்சுகிட்டரா.. இந்த மனுஷன் எப்போவுமே அக்கா வீட்தானே ஒட்டுதலாய் இருந்தாரு; எங்களை எல்லாம் மனுசனா மதிக்கவே இல்லையே.. அதுக்கு பலனா இது"? என்று புலம்ப..
"இந்தா கோவிந்தா.. அதெல்லாம் இப்போ பேச்சுற பேச்சா.. என்னதான் இருந்தாலும் உன் அண்ணன். ரெம்ப பயந்து போய் கிடக்கான். நம்ம அணைக்கட்டு முனியப்பன் கோவிலுக்கு கூட கூட்டிட்டு போய் மந்திரிச்சு தாயத்து கட்டிட்டு வாங்க. எல்லாம் அணைக்கட்டு அய்யன் பாத்துக்குவான்" என்று சின்னு அனைத்து விவரமும் தெரிந்தவராய் மிரட்ட..
"ஹூம்.!என்ன செய்ய பாத்து தானே ஆகணும்.. எப்படியும் பசங்க வரமாட்டாங்க, சின்னவனை தான் துணைக்கு கூப்பிடனும்
அவனும் வருவானோ.. வர மாட்டானோ தெரியல" என்றார் கோவிந்தன் கவலையோடு..
"டேய் யாரும் வரலைன்னா சொல்லு நான் வரேன் என்று சின்னு சமாதானம் சொல்லிவிட்டு சரிடா..!நீ பாரு பால் கறக்க வேணும், வீட்டுக்கு போயிட்டு பிறகு வரேன் சின்னு விடைபெற..
பொழுது பள பள வென விடிய.. இரவின் செய்த ஆர்ப்பாட்டம் ஏதும் உணராதவராய் எழுந்த ராசமுத்து தம்பியை பார்த்து வியந்து "என்னடா கோவிந்து காலையிலே இங்க இருக்க.. மறுபடியும் பசங்களோடு சண்டை போட்டுட்டு வந்துட்டியா..?" என வினவ..இது அடிக்கடி நடக்கும் நிகழ்வு என்பதும் சொல்லாமலே புரிந்தது.

"இல்லண்ணா..!மாமா செத்த நேரம் ஏதோ சரியில்லைன்னு சொன்னாங்க.அதான் அணைக்கட்டு முனியப்பன் கோவிலுக்கு போலாம்னு.. அதான் நீயும் வந்தா பரவாயில்ல கூட்டிட்டு போக வந்தேன்.." கோவிந்து சொல்லி சமாளிக்க. இவரும் எதையும் தற்போது நம்பும் நிலையில் தானே உள்ளார்.
"ஓகோ.. எனக்கும் போனா பரவாயில்லன்னுதான் தோணுது.. சரி எட்டுமணி பஸ்க்கு போவோம்.." போயிட்டு நேரமா வந்திடுவோம் என்றார்..
"சரிண்ணா.. நான் வீட்டுக்கு போயிட்டு சின்னவனையும் கேட்டுட்டு வரேன்.. நீ அதுக்குள்ள ரெடியாகு" என்று விட்டு தன் வீடு நோக்கி கிளம்ப..
தம்பி சென்றதும் வெளியே சென்று எட்டி பார்த்தவரை.. "என்ன பங்காளி நேத்து எங்களை எல்லாம் பாடா படுத்தி, பயமுறுத்திட்டியே.. "காத்தான் தம்பி கேட்க..
"நானா..! என்ன செய்தேன் உன்னை இப்போ தானே பார்க்கிறேன்" என்று ராசமுத்து குழம்பி போக..என்னாச்சு எனக்கு, உடம்பு என்னவோ அடித்து போட்ட மாதிரி வலிக்குது.. ஒருவேளை மாமா நேத்தும் வந்து இருப்பாரோ..!என்னை அவரோடு கூட்டிட்டு போகும் வரை ஒய மாட்டார் போலவே என நினைக்க.. அந்த நினைவின் பயத்திலேயே உடம்பு பட படக்க லேசாய் வியர்த்தது..
யோசித்தாவாறே வீட்டுக்குள் திரும்பியவரின் காதில் "டேய் என்னை துரத்த நீ கோவிலுக்கு போவியா..!உன்னை அவ்ளோ சீக்கிரம் விட்டுடுவேனா நானும்" குரல் ஒன்று காதுக்குள் கர்ண கடூரமாய் ஒலிக்க.. பயத்தோடு திரும்பி காத்தமுத்து வின் தம்பியை கை நீட்டி அழைக்க..
"ஏன் அண்ணா என்றவாறே வந்தவன் இவரின் முகத்தை உன்னித்து விட்டு.. அய்யோ அண்ணா ஓடிவா.. இவருக்கு என்னமோ ஆயிடுச்சு" என்று வெளி நோக்கி கத்த..
"தம்பி.. என் அக்காக்கு போ.. போன் போட்டு த தரியா பேச.. பேச.. ன்னும் என்று குழறியவர்.. தா... தண்ணி" என்று இழுக்க..
காத்த முத்துவும்.. அவர் பிள்ளைகள் என்று ஓடி வந்து கும்பல் கூடி விட..அவனின் தம்பியோ ராசமுத்துவின் அக்காவுக்கு போனில் முயற்சி செய்து கொண்டிருக்க..
தண்ணீரை வாயில் ஊற்றுவதற்குள் அமைதியாய் காத்தமுத்து வை பார்த்த ராசமுத்துவின் நெஞ்சை பாறாங்கல்லாய் யாரோ அழுத்துவதை போல தோன்ற.. " தோ மாமா.. நா.. நான் வந்துட்டேன் "என்று முனுமுனுத்தவர் உடம்பு முழுவதும் அவஸ்தையாய் இரு புறமும் புரண்டு அடங்கியது..
ராசமுத்துவின் மரணத்துக்கு ஊர் மக்களால் அவரின் இறந்த அக்கா கணவரே பழி ஏற்க..
எனக்கு என்னவோ.. அவரின் யாருமாற்ற தனிமையின் முதுமையும், தன் மாமா தன்னை பிடித்து கொண்டார்.. தன்னை விடமாட்டார் என்கிற ஆழ் மன எண்ணமுமே அவரின் மரணத்தின் காரணமாய் தோன்றுகிறது...
தீர்வு உங்கள் எண்ணத்தில்..
சுசீலா.,
மேட்டூர் அணை..

















