“திருமா எடுத்த முடிவு; கேள்வி கேட்ட முதல்வர்.!” - திக்..திக்.. மூடில் தி.மு.க! |...
கோவை தெற்கு: `50,000 வாக்கு வித்தியாசம் டார்கெட்; இது நம்முடைய மானப் பிரச்னை' - எஸ்.பி.வேலுமணி
கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் அறிமுக கூட்டம், சுங்கம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தே.ஜ.,கூட்டணிக் கட்சியினர் இதில் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ``கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி ஒரு VIP தொகுதியாக மாறிவிட்டது. ஆனால் அம்மன் அர்ஜுனன் எப்போதும் போல இருக்கின்றார். அற்புதமான கூட்டணி நமக்கு அமைந்து இருக்கிறது, இங்கு யார் வந்தாலும் கவலையில்லை. அம்மன் அர்ஜுனன் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. கோவையில் திமுக எந்த திட்டமும் செய்யவில்லை... நமது திட்டங்களை ரிப்பன் வெட்டி திறந்துவைத்திருக்கிறார்கள். எதுவுமே செய்யாமல் 5 ஆண்டுகளை முடித்து விட்டனர். சொத்துவரி, பால் விலை, மின் கட்டணம் போன்றவை உயர்த்தப்பட்டதுடன், பெண்களுக்குப் பாதுகாப்பில்லை... கஞ்சா நடமாட்டம் அதிகரித்துள்ளது.
கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் 21 தொகுதிகளுக்கு நான் பொறுப்பாளர். இந்த தொகுதிகளில் நாம் வெல்வோம். எதற்கெடுத்தாலும் பா.ஜ.க-வைச் சொல்கின்றனர். `பா.ஜ.க-வை உள்ளே விட மாட்டோம்... டெல்லிக்கும் தமிழ்நாட்டிற்கும் போட்டி' என்கின்றனர். மத்திய அரசு தமிழகத்திற்கு அதிகமான திட்டங்களைக் கொடுத்து இருக்கிறது. எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்கின்றனர், மத்திய அரசிடம் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் அதிகமான திட்டங்களைக் கேட்டுப் பெறுவோம். கோவைக்கு ஏதாவது செய்ததாக செந்தில் பாலாஜியால் சொல்ல முடியுமா?

இன்னும் 20 நாள்கள் சுழன்று பாடுபட வேண்டும். கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்ல வேண்டும். இதேபோல கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளருக்கு கேட்பதை செய்து கொடுக்க வேண்டும், குடும்பமாகச் செயல்பட வேண்டும்.
இது நம்முடைய மானப் பிரச்னை, 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கோவை தெற்கு தொகுதியில் அம்மன் அர்ஜுனன் வெற்றி பெறுவார். கவுன்ட்டவுன் ஸ்டார்ட் ஆகி விட்டது.
பெண்கள் வீடு வீடாகப் போய் உட்கார்ந்து பிரசாரம் செய்ய வேண்டும், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 400 வாக்குகள் பெற வேண்டும். குழுவாகப் பிரிந்து வக்குகளைச் சேகரிக்க வேண்டும், நோட்டீஸ் மூலம் பிரசாரம் செய்ய வேண்டும், மக்களின் வேதனைகளைச் சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும். திமுக-வின் பொய் வக்குறுதிகளை மக்களிடம் சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும்.
புதிதாக கட்சி ஆரம்பித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த 10 நாள்களாக வெளியே வரவில்லை... இப்போது வந்திருக்கிறார். மக்கள் இதை ஒரு பொருட்டாக நினைக்க மாட்டார்கள்.
ஒரு ஓட்டுகூட மற்ற கட்சிக்குப் போகக் கூடாது. அதிமுக-வின் வாக்குகள் அனைத்தும் பதிவாக வேண்டும். கட்சி வேறு, சினிமா வேறு எனவும் கேமரா முன்பு நடிப்பது வேறு என்பதையும் விஜய் உணர வேண்டும். கரூரில் 41பேர் உயிரிழந்த நிலையில், அவர் கரூருக்குக்கூட போகவில்லை.

உயிருக்குப் போராடியவர்களைப் பார்க்க மருத்துவமனைக்குக்கூட செல்லவில்லை. சொந்தக் கட்சியினரையே காப்பாற்ற முடியாதவர், மக்களை எப்படிக் காப்பாற்ற முடியும். எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது. அவர்கள் எந்த தொகுதியிலும் வெற்றி பெற போவதில்லை, திமுக எதிர்ப்பு ஓட்டுகளை பிரித்து திமுக-விற்கு சப்போர்ட் செய்யப் பார்க்கிறார்கள். எனவே அத்தனை ஓட்டுகளும் இரட்டை இலை சின்னத்துக்கு வர வேண்டும்.
திமுக-வினர் கோவையில் உள்ளாட்சித் தேர்தலில் கொலுசைக் காட்டி ஏமாற்றினார்கள், இப்போது கேவலமான மாநகராட்சியாக கோவை மாநகராட்சி இருக்கின்றது. நாங்கள் ஜெயித்தவுடன் திமுக-வினர் காணாமல் போய் விடுவார்கள்" என்றார்.











