'கோயம்பேடு டு கமலாலயம்... இல்லையா அறிவாலயம்?' - பிரேமலதாவின் 'சஸ்பென்ஸ்' பாலிடிக...
"திமுகவின் பி டீம் அதிமுக; தினகரன் தவெகவில் இணைய விரும்பினார்" - என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?
தவெக நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவை விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். பல முனைகளில் இருந்து தாக்குதல் வந்தால் ஒருவர் மாபெரும் வெற்றியைப் பெறப் போகிறார் என்று அர்த்தம்.

தவெக தங்களின் கூட்டணியில் இணைவார்கள் என்று நினைத்தார்கள். நாமக்கல்லில் நடந்த நிகழ்ச்சியில், தவெக கொடி பறப்பதை பிள்ளையார் சுழி போட்டாச்சு எனச் சொன்னது எல்லாம் அவர்கள்தான்.
திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. அதை விமர்சிக்காமல் அதிமுக ஐடி விங் திமுகவிற்கு பி டீமாக இருக்கிறது. புதிதாக உருவான கட்சி மீது குற்றம்சாட்டுவது எதிர்க்கட்சி நடைமுறையில் இல்லாத ஒன்று. எம்ஜிஆர், ஜெயலலிதாவுடன் பயணம் செய்தவன் நான். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது ஊழல் வழக்கு தொடர்ந்தார்கள்.

நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. என் மீது தவறான கருத்துக்கள் சொல்வோர் மீது வழக்கு தொடரப்படும். தவெக கூட்டணியில் இணைய டிடிவி தினகரன் விரும்பினார். தினகரன் வரவில்லை என்பது ஏமாற்றம் இல்லை.
அவருக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அவர் எங்கு சென்றாலும் வாழ்க. தவெகவுடன் டாக்டர் ராமதாஸ் தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்தியில் பார்த்தேன். நல்லது நடக்கட்டும். திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் அண்ணாவை மறந்துவிட்டார்கள்.

அதன் காரணமாகத்தான் நான் வெளியேறி தவெகவில் இணைந்தேன். என் சட்டைப் பையில் இப்போதும் படம் உள்ளது. அவர்கள்தான் ஜெயலலிதா, அண்ணா படங்களைப் போடாமல் நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். நாம் யாரால் வளர்க்கப்பட்டோம் என்பதை மறந்து விடக்கூடாது” என்றார்.
















