செய்திகள் :

`திமுக ஆதரவு; பாஜகவின் நிரந்தரப் பெரும்பான்மைவாத அரசுக்கு உதவியதாகவே பொருள்' - விளக்கும் ரவிக்குமார்

post image

விழுப்புரம் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளராகவும் உள்ள ரவிக்குமார் எம்.பி, தொகுதி மறுவரையறை குறித்து விளக்கமாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ரவிக்குமார் எம்.பி, ``நாடாளுமன்றத்தில் நவம்பர் 30 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படவுள்ள ‘தொகுதி மறுசீரமைப்பு ( இரண்டாவது) மசோதா 2026’ ஐ ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவின் கூட்டாட்சிக் கட்டமைப்பையே மாற்றியமைக்கும் முயற்சியாகத்தான் அந்த மசோதா முன்வைக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள 50 விழுக்காடு இட உயர்வு, ( பிரிவு 10) , ‘வடக்கு வாழவும் தெற்கு தேயவும்’ வழிவகுப்பதோடு அவர்களின் நீண்டநாள் கனவான பெரும்பான்மைவாத அரசை நிரந்தரமாக அமைப்பதற்கும் அடித்தளமிடும்.

கடந்த முறை மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக வாக்களித்து பாஜக அரசின் திட்டத்தைத் தோற்கடித்த திமுக, தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) உள்ளிட்ட சில கட்சிகள் இப்போது இந்த சட்ட மசோதாக்களை ஆதரிக்கப்போவதாகத் தெரிகிறது. 50% இட உயர்வை அதற்கு அவை காரணமாகக் காட்டுகின்றன. அந்தக் காரணம் சரிதானா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.

தொகுதி மறுவரையறை | Delimitation
தொகுதி மறுவரையறை | Delimitation

நாடாளுமன்றத்திலும் மாநிலச் சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதில் எவருக்கும் கருத்து வேறுபாடு இல்லை. அதனால்தான் 2023ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 106ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு அனைத்துக் கட்சிகளுமே ஆதரவளித்தன. ஆனால் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, அதைத் தொடர்ந்து தொகுதி மறுசீரமைப்பு ஆகியவற்றுக்குப் பிறகே இடஒதுக்கீடு நடைமுறைக்கு வரும் என்ற நிபந்தனை அந்த சட்டத்தில் உள்ளது.

மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்குத் தொகுதிகளின் எண்ணிக்கையை 50 விழுக்காடு உயர்த்த வேண்டிய அவசியமில்லை. தற்போதுள்ள தொகுதிகளிலேயே மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும் வகையில் அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 334A ஐத் திருத்தலாம். ஆனால், ஒன்றிய அரசு முன்வைத்துள்ள புதிய மசோதாவோ ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையையும், மாநிலச் சட்டமன்றங்களின் மொத்த இடங்களையும் 50 விழுக்காடு உயர்த்துகிறது.

இதன் மூலம் நாடாளுமன்றச் செயல்பாடுகளை நீர்த்துப்போகச் செய்து அதை வெறுமனே கும்பல் கூடும் இடமாக மாற்றுவதற்கு வழிவகுக்கிறது .

இந்த மசோதாவுடன் ‘அரசியலமைப்பு (நூற்று முப்பத்து இரண்டாவது திருத்த) மசோதா, 2026’ என்ற மசோதாவையும் ஒன்றிய அரசு எம்.பிக்களுக்கு சுற்றுக்கு அனுப்பியுள்ளது . தற்போதைய மாநிலவாரிப் பங்கீட்டு விகிதம் மாறாது என்றும் 2051 வரை அது பாதுகாக்கப்படும் என்றும் அந்த மசோதாவின் பிரிவு 4(2) கூறுகிறது.

எல்லா மாநிலங்களுக்கும் ஒரே விகிதத்தில் இடங்களை உயர்த்துவது, மாநிலங்களுக்கிடையிலான தற்போதைய விகிதாசாரத்தைப் பாதுகாப்பதாகத் தோன்றலாம். ஆனால் அது கூட்டாட்சியின் அடிப்படையான பிரச்சினையைத் தீர்க்கவில்லை. தற்போதைய விகிதத்தைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டே, வட இந்தியாவுக்கும் தென் இந்தியாவுக்கும் இடையே ஏற்கெனவே நிலவுகின்ற எண்ணிக்கை சார்ந்த ஏற்றத்தாழ்வுகளை இந்த மசோதா மேலும் பெரிதாக்குகிறது.

ரவிக்குமார் எம்.பி
ரவிக்குமார் எம்.பி

50 விழுக்காடு உயர்வு என்பது வெறும் கணித ரீதியான மாற்றமல்ல; அது அரசியல் அதிகாரத்தின் அளவையும் நாடாளுமன்றத்தின் அமைப்பையும் மாற்றும் நடவடிக்கை. பெரிய மாநிலங்களுக்கு ஏற்கெனவே அதிகமான தொகுதிகள் உள்ளன. அவற்றின் இடங்களும் அதே விகிதத்தில் உயரும்போது, அவற்றுக்கும் சிறிய மாநிலங்களுக்கும் இடையிலான எண்ணிக்கை வேறுபாடு மேலும் அதிகரிக்கிறது. இது கூட்டாட்சியின் மீதான தாக்குதல் தவிர வேறல்ல.

1955ஆம் ஆண்டு மாநில மறுசீரமைப்பு ஆணையத்தின் அறிக்கையை விமர்சித்து அம்பேத்கர் எழுதிய ‘மொழிவாரி மாநிலங்கள் குறித்த சிந்தனைகள்’ (Thoughts on Linguistic States) என்ற நூலில், பெரிய மாநிலங்கள் இந்திய ஜனநாயகத்திற்கும் கூட்டாட்சிக்கும் ஏற்படுத்தக்கூடிய ஆபத்துகளைத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார். உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம் ஆகிய பெரிய மாநிலங்களைச் சிறிய மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என்று அவர் முன்மொழிந்தார்.

உத்தரப் பிரதேசத்தை மூன்றாகவும் பீகாரை இரண்டாகவும் பிரிப்பதற்கான திட்டங்களையும் முன்வைத்தார். ஒரு பெரிய மாநிலத்தில் எண்ணிக்கையில் பெரும்பான்மையாக உள்ள சமூகங்கள், அதிகாரத்தையும் நிர்வாகத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் குவித்துக்கொள்ளும் ஆபத்து இருப்பதாக அவர் கருதினார். சிறுபான்மையினரின் உரிமைகளையும் ஜனநாயகப் பங்கேற்பையும் பாதுகாக்க, அதிகாரம் ஒரே இடத்தில் குவியாமல் தடுக்கப்பட வேண்டும் என்பதே அவரது கவலையின் அடிப்படை. பெரிய மாநிலங்களின் அதிகாரக் குவிப்பைக் குறைப்பதற்குப் பதிலாக, அவற்றின் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கையை ஒன்றிய அரசு மேலும் உயர்த்துகிறது. இது உத்தரப் பிரதேசத்தை இந்தியாவிலேயே மிக அதிகமாக 120 எம்.பி தொகுதிகள் கொண்ட ‘சூப்பர் மாநிலம்’ என ஆக்குகிறது.

Delimitation அமித் ஷா, மோடி

மாநிலங்களைப் புறக்கணிக்கும் மறுசீரமைப்பு ஆணையம் :

தொகுதி மறுசீரமைப்புச் சட்ட மசோதாவின் பிரிவு 5 இன் படி, அந்த ஆணையத்தில் மூன்று அதிகாரப்பூர்வ உறுப்பினர்கள் இடம்பெறுவர். அவர்கள்:

1. உச்சநீதிமன்றத்தின் தற்போதைய அல்லது ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் – ஆணையத்தின் தலைவராக இருப்பார்.

2. தலைமைத் தேர்தல் ஆணையர் அல்லது அவர் நியமிக்கும் தேர்தல் ஆணையர் ஒருவர்.

3. சம்பந்தப்பட்ட மாநிலத்தின் மாநிலத் தேர்தல் ஆணையர்.

இவர்களுடன் சம்பந்தப்பட்ட மாநிலத்தைச் சேர்ந்த ஐந்து மக்களவை உறுப்பினர்களும், ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களும் இணை உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர். ஆனால், இவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடையாது. ஆணையத்தின் முடிவுகளைத் தீர்மானிப்பதிலும் அவர்களுக்கு அதிகாரம் இல்லை. அதாவது, ஒரு மாநிலத்தின் தொகுதிகளை எவ்வாறு பிரிப்பது, அவற்றின் எல்லைகளை எவ்வாறு வரையறுப்பது, எந்தெந்த பகுதிகளை எந்தத் தொகுதியில் இணைப்பது போன்ற முக்கியமான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் மூன்று அதிகாரபூர்வ உறுப்பினர்களிடமே இருக்கும். மறுசீரமைப்பு ஆணையத்தின் உத்தரவுகளை நீதிமன்றத்தில் கேள்விக்குட்படுத்த முடியாது என்று மசோதாவின் பிரிவு 11 (2) கூறுகிறது.

இந்த வானளாவிய அதிகாரம் எவருக்கும் நல்லதல்ல.

கட்டற்ற தனது அதிகாரத்தைப் பயன்படுத்தித்தான் அஸ்ஸாமிலும் ஜம்மு காஷ்மீரிலும் பாஜகவுக்கு ஆதரவான முறையில் தொகுதிகளின் எல்லைகளை மறுசீரமைப்பு ஆணையம் மாற்றியமைத்தது.

ஜம்மு-காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்பில் 7 புதிய தொகுதிகள் உருவாக்கப்பட்டன — இதில் 6 தொகுதிகள் ஜம்முவிற்கும், காஷ்மீருக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டன. தங்களுக்குச் சாதகமாக எல்லைகளை மாற்றியமைக்கும் ஒரு வெளிப்படையான சூழ்ச்சி (gerrymandering) என்று எதிர்க்கட்சிகள் இதை விமர்சித்தன.

2023 ஆம் ஆண்டு அஸ்ஸாமில் மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்பும் அப்படித்தான். 2001-ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி எல்லைகளை மறுவரையறை செய்தது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் துப்ரி (Dhubri) பார்பேட்டா (Barpeta) முதலான தொகுதிகள் தாறுமாறாகப் பிரிக்கப்பட்டன; அதன் மூலம் எதிர்க்கட்சிகளின் வாக்கு வங்கிகளும் சிதறடிக்கப்பட்டன. அதேபோல இந்தியா முழுவதும் தொகுதி எல்லைகள் மாற்றியமைக்கப்பட்டால் இந்தியாவை அதன் பின்னர் பாஜகவின் பிடியிலிருந்து ஒருபோதும் மீட்க முடியாது.

தொகுதி மறுசீரமைப்பைப் பயன்படுத்திக்கொண்டு தாம் கனவுகண்ட பெரும்பான்மைவாத அரசை சட்டப்பூர்வமாக அமைப்பதற்கு பாஜக திட்டமிடுகிறது. அதைத் தடுத்து நிறுத்த வேண்டிய கடமை சமயச் சார்பற்ற, சமூகநீதிக் கட்சிகளுக்கு உள்ளது.

ஸ்டாலின் - திமுக
ஸ்டாலின் - திமுக

மாநில உரிமைகளைப் பாதுகாப்பதில் திமுக உண்மையிலேயே அக்கறையோடு இருக்குமானால் அது தனது ஆட்சியின்போது அமைத்த குரியன் ஜோசப் கமிஷனின் பின்வரும் பரிந்துரைகளை வலியுறுத்த வேண்டும்:

“ தொகுதி மறுவரையறை ஆணையங்கள் நாடாளுமன்ற, மாநிலச் சட்டமன்றங்களின் குறித்த காலத்திற்குள்ளான ஆய்விற்குப் பிறகே நடைமுறைக்கு வர வேண்டும் என்றும், தேர்தல் அறிவிப்பிற்கு முன்னதாக அரசமைப்புச் சட்ட, அதிகார வரம்பு குறித்த காரணங்களுக்காக நீதித்துறையின் சீராய்வை அனுமதிக்க வேண்டும் என்றும் அரசமைப்பின் அரசமைப்புச் சட்டப் பிரிவுகள் 82, 170, 329(a) ஆகியவற்றைத் திருத்த வேண்டும்.

அதே வேளையில், தேர்தல் செயல்முறை தொடங்கிய பிறகு, நீதிமன்றத் தலையீட்டிற்கான தடை தொடர வேண்டும். இத்தகைய திருத்தங்கள் செய்யப்படும் வரை, நாடாளுமன்றம் இயற்றும் எந்தவொரு தொகுதி மறுவரையறைச் சட்டமும் கட்டாயமான சட்டமன்ற ஆய்விற்கு வழிவகை செய்ய வேண்டும்.”

“ ஒன்றிய, மாநிலத் தொகுதி மறுவரையறை ஆணையங்களைத் தனித்தனியாக அரசமைப்புச் சட்டத்தில் உறுதிப்படுத்த அரசமைப்புச் சட்டப் பிரிவுகள் 82, 170, 327, ஏழாவது அட்டவணையின் ஒன்றியப் பட்டியலின் 72வது இனம், மாநிலப் பட்டியலின் 37வது இனம் ஆகியவற்றைத் திருத்த வேண்டும். மக்களவையின் தொகுதி மறுவரையறை ஆணைய அதிகாரத்தை ஒன்றிய ஆணையத்திடமும், மாநிலச் சட்டமன்றத் தொகுதி மறுவரையறை ஆணைய அதிகாரத்தைத் தனியான மாநில ஆணையங்களிடமும் வழங்க வேண்டும். இந்த ஆணையங்கள் பல கட்சிப் பிரதிநிதித்துவம், தேர்தல் குழு அடிப்படையிலான நியமனங்களைக் கொண்டிருப்பதை அரசமைப்புச் சட்ட அளவில் உறுதி செய்ய வேண்டும்.”

என நீதிபதி குரியன் ஜோசப் கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. இவற்றைத் திமுக வலியுறுத்துமா?

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தாமல் மறுசீரமைப்பு மசோதாவுக்கு திமுக ஆதரவளித்தால் அது பாஜகவின் பெரும்பான்மைவாத அரசை நிரந்தரமாக அமைப்பதற்கான திட்டத்துக்கு உதவி செய்வதாகவே பொருள்படும் . ‘காங்கிரஸ் எங்களுக்குத் துரோகம் செய்துவிட்டது எனவேதான் இந்த முடிவை எடுக்கிறோம்’ என திமுக இதை நியாயப்படுத்துவது சரியல்ல. இந்த மசோதாவை ஆதரிப்பது இதுவரை திமுக முன்வைத்துவந்த மாநில சுயாட்சி அரசியலை அதுவே குழிதோண்டிப் புதைப்பது தவிர வேறல்ல." என விளக்கியுள்ளார்.

திருப்பரங்குன்றம் தூணில் வைக்கபட்ட கொப்பரை; 5 மணிக்கு ஏற்றபட போகும் தீபம்... வெளியேறிய காவல்துறை!

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கல்தூணில் தீபமேற்ற வேண்டும், மலை முழுவதும் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என நேற்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனடிப்படையில் இன்... மேலும் பார்க்க

Delimitation: ``திமுகவின் இந்த இரட்டை துரோகத்தை வரலாறு மன்னிக்கவே மன்னிக்காது" - அமைச்சர் வன்னி அரசு

மத்திய அரசு கொண்டுவரும் தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு தெரிவித்திருக்கிறது. இதற்கு திமுக-வின் முன்னாள் கூட்டணிக் கட்சியான விசிக கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக விசிக-வின் தலைவர் தி... மேலும் பார்க்க

தொகுதி மறுவரையறை: `` தேன் கலந்த விஷ உருண்டை; பாஜக பொறியில் திமுக சிக்கிவிடக் கூடாது" - கி.வீரமணி

நவம்பர் 30 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டுவரவுள்ள திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக ஆதரவு தெரிவித்திருக்கிறது. திமுகவின் இந்த ஆதரவிற்கு திராவ... மேலும் பார்க்க

"என் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருந்தால் கொடுங்கள்" - கேட்கிறார் அமைச்சர் விஜய் பாலாஜி

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் கைத்தறித்துறை அமைச்சர் விஜய் பாலாஜி ஆகியோர் தலைமையில் அரசு திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்த... மேலும் பார்க்க

தொகுதி மறுவரையறை:``உச்ச நீதிமன்றத் தீர்ப்பை விட திமுக-வின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது" - திருமாவளவன்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து இடதுசாரி கட்சிகள் அமைதிப் பேரணி நடத்தியது. இதில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்... மேலும் பார்க்க