விடுதலை : தத்துவமில்லாத தலைவர்கள்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 45
விடுதலை : தத்துவமில்லாத தலைவர்கள்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 45
வாழ்க்கையில் எந்தப் பிடிப்புமே இல்லாத ஒரு மலைவாழ் பெண்ணான தமிழரசிக்கு, குமரேசன் ஒரு சின்ன நம்பிக்கைக் கீற்றைக் கொடுக்கிறான். அதன் பலத்தில் அவள் அவனிடம் பேசுகிறாள். யாரும் கேட்காத, யாருக்கும் தேவையில்லாத அவளுடைய சொந்தக்கதை அது. காவல்துறையின் அத்துமீறலால் கொல்லப்பட்ட அவளது அப்பா, மனநலம் பாதிக்கப்பட்ட அவளது அம்மா, பெருமாளால் சில காவலர்கள் கொல்லப்பட்டமைக்கான காரணம் என்று கண்ணீரோடு அவனிடம் மனம் திறந்து பேசுகிறாள். அப்போது அவளது சித்தப்பா ’மக்கள் படை’யுடன் தொடர்பிலிருக்கும் ஒரு சின்னத் தகவலும் அவளையறியாமல் வெளியாகி விடுகிறது.
காதல் எனும் அற்புதமான உணர்வுக்கு நேர்மையாக இருப்பதா, அல்லது கான்ஸ்டபிள் எனும் தன் கடமைக்கு உண்மையாக இருப்பதா எனும் குழப்பத்துக்கு ஆளாகி, அந்த இடத்தில் அவளை விட்டு விலகிச் செல்கிறான் குமரேசன். அத்தனைக் களங்கமற்ற எளிய மனிதனாக இருக்கிறான் குமரேசன். அவனது பார்வையில்தான் இந்தக் கதை முழுதும் சொல்லப்படுகிறது.

மேற்கு வங்காளம், ஒடிசா, பீகார் போன்ற மாநிலங்களில், நக்சலைட்ஸ் எனப்படும் ஆயுதம் ஏந்திய போராட்ட குழுக்களுக்கு என்று ஒரு பெரிய வரலாறு உண்டு. பல்வேறு காரணங்களுக்காக 1960-கள் தொடங்கி, 2020-கள் வரை மிகத் தீவிரமாக இந்த குழுக்கள் செயல்பட்டுவந்தன. ஆனால், தமிழ்நாட்டில் அத்தகைய வீரியமான அமைப்புகள் குறிப்பிடத்தக்க அளவில் இல்லை எனினும், 1980களில் அதையொத்த சில அமைப்புகள் செயல்பட்டன.
கம்யூனிஸ்ட் இயக்கங்களில் இருந்து வெளியேறிய தோழர் து. தமிழரசன், புலவர் கு. கலியபெருமாள் போன்றோர் ஆயுதப் போராட்டங்களில் நம்பிக்கை கொண்டிருந்தனர். அப்படிச் சில ஆயுதமேந்திய அமைப்புகள் தனித் தமிழ்நாடு மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை போன்ற நோக்கங்களுக்காக வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு வந்தன. இந்த அமைப்புகள் மற்றும் இந்தக் கதாபாத்திரங்களின் சாயலில் ’விடுதலை’ எனும் இந்தப் படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது.
கனிம வளங்களைச் சுரண்டும் தனியார் அமைப்புகள், அவர்களுக்குத் துணை போகும் அரசு -இந்தப் பின்னணியில் இவற்றை எதிர்த்து பெருமாள் வாத்தியார் என்பவர் தலைமையில் ’மக்கள் படை’ எனும் பெயரில் ஒரு தீவிரவாத அமைப்பு இயங்கி வருகிறது. அந்தப் பெருமாளைப் பிடிக்கும் முயற்சியில் அரசுக் காவல் படைகள் மலைப்பகுதிகளில் முகாம் அமைத்துத் தங்கி தேடுதல் வேட்டைகளில் ஈடுபடுகிறார்கள். விடுதலை முதல் பாகத்தில், தேடுதல் எனும் பெயரில் காவல்துறை செய்யும் அட்டூழியங்களும், மக்களுக்கு அவர்கள் இழைக்கும் சொல்லவொண்ணாத கொடுமைகளையும், குமரேசன் எனும் ஒரு எளிய கான்ஸ்டபிளின் போராட்டமும் விவரிக்கப்படுகின்றன.
இரண்டாவது பாகத்தில், பெருமாள் வாத்தியார் எப்படி மக்களுக்காக அறவழியில் போராடும் ஒரு கம்யூனிஸ்ட்டாக ஆனார், பிறகெப்படி ஒரு ஆயுதம் தாங்கிய போராளியாகவும், பின்னர் அதன் பாதிப்புகளை எப்படி உணர்ந்தார் எனும் அவரது முன்கதையும், தற்போது கைதாகி காவல்துறையிடம் சிக்கியிருக்கும் அவரது நிலை என்னவாயிற்று என்பதையும் விவரிக்கிறது.

பியூரோகிரஸி எனும் அரசு நிர்வாக அமைப்பில் உயரதிகாரிகள் இயங்கும் முறைமை, இந்தப் படத்தில் மிக நெருக்கமாகக் காண்பிக்கப்பட்டிருந்தது. படத்தில் தலைமைச் செயலர் சுப்ரமணியம் ஐஏஎஸ் என்றொரு பாத்திரம் வருகிறது. குழந்தைகள் கொல்லப்படுவதோ, பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்படுவதோ, மக்கள் படையின் தாக்குதலால் காவல்துறையினர் மரணிப்பதோ அவருக்கு ஒரு பொருட்டாகவே இல்லை. எல்லாவற்றையும் ஆளும் அரசுக்குச் சாதகமாக மாற்றுவது எப்படி என்றே சிந்திக்கிறார்.
பெருமாளின் கைதுக்காக அத்தனை ஏற்பாடுகளைச் செய்கிறார். ஆனால், கைது செய்யப்பட்டவுடன், ஒன்றிய அரசிலிருந்து மாநிலத்துக்கு வரவேண்டிய ஒரு நிதி தாமதமாகிவிடும் எனும் சிக்கல் ஏற்படுகிறது. அதைப் போக்க அந்தக் கைதையே மறைக்க திட்டமிடுகிறார். அமைச்சர் இளவரசு ஒரு கட்டத்தில் கொதித்துக் கொண்டு வருகையில், அவரை இடது கையால் கையாளுகிறார்.
அமைச்சர் இளவரசு போன்ற அரசியல்வாதிகளிடம் ஒரு திட்டமிருக்கிறது. தலைமைச் செயலாளர் சுப்ரமணியம் போன்ற அதிகாரிகளிடம் ஒரு திட்டமிருக்கிறது. இவர்களின் ஆணைகளைச் செயல்படுத்தும் டிஎஸ்பி சுனில் மேனன் போன்ற அதிகாரிகளிடம் ஒரு திட்டமிருக்கிறது. களத்தில் நிற்கும் அமுதன் போன்ற அதிகாரிகளிடம் ஒரு திட்டமிருக்கிறது. இவற்றுக்குள் பெரிய முரண்பாடுகள் இருக்கின்றன. ஆனால், இவையெதுவுமே மக்களுக்கான திட்டமாக இல்லை என்பதுதான் கவனிக்கப்பட வேண்டியது! இப்படியான சந்தர்ப்பவாத அரசியலைச் செய்வது அரசியல்வாதிகள் மட்டுமல்ல, அதன் பின்னணியில் இப்படியான அதிகார வர்க்கம்தான் எனும் உண்மையின் துளி வெளிப்படுகிறது.
அதனால்தான் ஓரிடத்தில் குமரேசன், ”நாம வாழும் இந்த சமூகத்துல நாம எதைக் கேட்கணும், எதைத் தெரிஞ்சுக்கணும், யாரை ஏத்துக்கணும், யாரை எதிர்க்கணும்ங்கிற வரைக்கும் எல்லாத்தையும் அவங்கதான் முடிவு பண்றாங்க” என்று அவனது புரிதலைச் சொல்கிறான்.
அந்தக் கான்ஸ்டபிள் குமரேசனாக சூரி நடித்திருந்தார்!
கூட்டத்தில் ஒருவராக சினிமாவில் அறிமுகமான சூரி, பல்லாண்டுகள் கடும் முயற்சிகளுக்குப் பின்னர் பிரபலமான நகைச்சுவை நடிகராக வளர்ந்து சினிமாவில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர். அவருக்குள் இருந்த ஆளுமையை, திறமையை அடையாளம் கண்டுகொண்டு, அவருக்கு இப்படியொரு பலமான நாயக வாய்ப்பைக் கொடுத்த இந்தப்படம், அவரது திரைப்பயணத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. அதிகாரத்தின் கடைசிப் படியில் கிடந்து அல்லலுறும் ஒரு கான்ஸ்டபிளாகவும், அதிகாரவர்க்கத்தின் அராஜகமான செயல்பாடுகளையும், அதற்கெதிரான போராட்டக்குழு நடவடிக்கைகளின் சாட்சியாகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

தமிழரசியாக பவானிஸ்ரீ நடித்திருந்தார். ’பாட்டி சொல்ற சொந்தக்கார பையனைக் கட்டிக்கிட்டு சந்தோசமா இருங்க’ என்று தொடக்கத்தில் ஓரிடத்தில் குமரேசன் தமிழரசியிடம் சொல்லுகிறான். அதற்கு அவள், ’ஆரைச் சொந்தம்னு சொல்றது? இப்படி வாழுற நிலைமை தெரிஞ்சும் சீரு கேட்டு கல்யாணத்த நிறுத்திட்டாங்க. ரத்த உறவுங்குறதால அவங்களை சொந்தம்னு சொல்றதா? இல்ல, யாருன்னே தெரியாத ஒருத்தர் எங்களுக்கு உதவப்போயி கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்காரு, ஆனாலும் அதைச் சொல்லிக்காட்டாம கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோசமா இருங்குறாரு... அவரைச் சொந்தம்னு சொல்றதா?’ என்று சொல்லித் தவிக்கிறாள். நமக்கே அவரது கையைப் பிடித்து ஆறுதல் சொல்ல வேண்டும் எனும் உணர்வை ஏற்படுத்தி விடுகிறார் பவானிஸ்ரீ.
மக்கள் படை இயக்கத்தின் தலைவரான பெருமாள் வாத்தியாராக, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், கனிமவளப் பாதுகாப்புக்காகவும் அரசை எதிர்த்து ஆயுதம் ஏந்திய போராளியாக, ஒரு தத்துவார்த்தக் குறியீடாக வரும் பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். அவருக்கு அப்படி ஒன்றும் சிறப்பு மேக்கப் போட்டது மாதிரியெல்லாம் தெரியவில்லை. ஆனாலும், இது வேறு யாரோ ஓர் ஆள் என்பது போன்ற உணர்வை ஏற்படுத்திவிடுகிறார். அந்தக் குட்டி பிளாஷ்பேக் காட்சியைக் குறிப்பாகச் சொல்லலாம். விஜய் சேதுபதியின் கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது இது. அவரது இணை மகாலட்சுமியாக மஞ்சு வாரியர் நடித்திருந்தார்.
இ-கம்பெனி படைப்பிரிவு பொறுப்பாளர் ராகவேந்தராக சேத்தன் மிரட்டியிருந்தார். பார்த்தாலே வெறுப்படைய வைக்கும் அளவுக்கான கீழ்த்தரமான இந்தப் பாத்திரம் சேத்தனுக்கு அவரது மிக நீண்ட நடிப்புப்பயணத்தில் மிகவும் அதிகம் பெயரை வாங்கிக் கொடுத்த படமாக அமைந்தது. ராகவேந்தரே பரவாயில்லை எனுமளவுக்கு பெருமாளைத் தேடுகிறேன் பேர்வழி என்று மலைவாழ் மக்களைச் சித்திரவதை செய்யும் டிஎஸ்பியாக கௌதம் வாசுதேவ் நடித்திருந்தார். இன்னும் ராஜீவ் மேனன், கிஷோர், தமிழ், கென் கருணாஸ், போஸ் வெங்கட், இளவரசு, அருள்தாஸ், பாலாஜி சக்திவேல் போன்ற பலரும் நடித்திருந்தார்கள்.

படத்தின் ஒளிப்பதிவை மேற்கொண்டவர் ஆர். வேல்ராஜ். தொடக்கத்தில் விபத்துக்குள்ளான ரயில் ஒன்றைக் காட்சிப்படுத்தும் மிக நீண்ட ஷாட் ஒன்று வருகிறது. சுமார் 6 நிமிடங்களுக்கு நீளும் இந்த ஷாட் ரசிகர்களை வியக்க வைத்தது. காவல்துறை சித்திரவதை முகாம்களின் சிறுமையையும், பகலில் பிரமிப்பூட்டும் காட்டுப் பகுதிகளின் அச்சுறுத்தும் இரவுகளையும், தனிமையையும் அதன் தன்மை மாறாது படமாக்கியிருந்தார் வேல்ராஜ். போலவே தமிழரசி, குமரேசன் உள்ளிட்ட கதாபாத்திரங்களின் நுணுக்கமான தவிப்பையும் சிறப்பாக பதிவு செய்திருந்தார்.
இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசையும், பாடல்களும் படத்தின் உயிராகவே மாறியிருந்தது. கடுமையான ஒடுக்குமுறைச் சூழலில் உணவுக்கும், மானத்துக்குமே போராட்டமான ஒரு வாழ்வில் இருக்கும் தமிழரசிக்கும் குமரேசனுக்கும் இடையே காதல் எனும் ஒரு நம்பிக்கை மலர்கிறது. ’வழி நெடுக காட்டுமல்லி’ எனும் பாடல் அவர்களுக்கிடையே முகிழ்த்த அந்தச் சிறு மலராக அமைந்தது. இளையராஜா எழுதிப் பாடிய இந்தப் பாடலை அவரோடு இணைந்து பாடியிருந்தது அனன்யா பட். ’ஒன்னோட நடந்தா’ எனும் இன்னொரு பாடலை சுகா எழுதிட, தனுஷும் அனன்யா பட்டும் பாடியிருந்தார்கள்.
ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மெண்ட் நிறுவனம் சார்பாக விடுதலையைத் தயாரித்திருந்தவர் எல்ரெட் குமார். ஜெயமோகன் எழுதிய ஒரு கதையிலிருந்தும், தங்கம் எழுதிய வேங்கைச்சாமி எனும் கதையிலிருந்தும் விடுதலையின் மூலக்கதை எடுத்தாளப்பட்டுள்ளது. இந்தக் கதைக்குத் தேவையான வரலாற்று ஆய்வுகள் மற்றும் தரவுகளில் பாலமுரளிவர்மன் பங்களித்திருக்கிறார். இதன் திரைக்கதையை மணிமாறன், வெற்றிமாறன், துரை செந்தில்குமார் மற்றும் மதிமாறன் ஆகிய நால்வர் குழு எழுதியிருக்கிறது. படத்தின் வசனத்தை மணிமாறன், தய்.கந்தசாமி மற்றும் வெற்றிமாறன் எழுதியிருக்கிறார்கள். படத்தை இயக்கியிருப்பவர் வெற்றிமாறன்.
ஒரு சினிமாவின் உயிர்நாடியான கதை, திரைக்கதை அமைப்பதில் இப்படிப் பல திறமையாளர்கள் ஒன்றிணையும் போதுதான் விடுதலை போன்ற ஒரு தரமான சினிமா உருவாக முடிகிறது. இந்த அடிப்படை உண்மையை விளங்கிக்கொள்ளாமல், இன்றைக்கும் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்று தம் பெயரைப் போட்டுக்கொள்ள வேண்டும் எனும் தன்முனைப்பை தமிழ் திரைத்துறையில் அதிகமாகக் காண முடிகிறது.

வெற்றிமாறனின் கதைத் தேர்வுகள் சுவாரசியமானவை. வெகுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சமூகப் பிரச்சினைகளையும், மனித உணர்வுகள் பற்றிய ஆழமான கதைகளையுமே எப்போதும் தேர்வு செய்கிறார். ஆனால், அவற்றில் கமர்ஷியல் அம்சங்களும் இயல்பாகவே பிணைந்திருக்கின்றன. ஆடுகளம் படத்தில் ஓர் இயல்பான மனிதர், அவருடைய ஈகோ காயப்படும் போது எப்படிப்பட்ட வன்மம் நிறைந்த மனிதனாக அவர் மாறுகிறார் என்பது கதை. அதில் காதல், உறவுகளுக்கிடையேயான உரசல்கள், சண்டைக் காட்சிகள் என பரபரப்பான நிகழ்வுகள் அதன் இயல்பிலேயே எல்லாம் இருந்தன. அசுரன், வடசென்னை, விடுதலையையும் நாம் அந்தப் பட்டியலில் சேர்க்க முடியும்.
படம் பேசும் அரசியலைப் புரிந்துகொள்ளவும், அது தொடக்கி வைத்த விசயங்களைத் விரிவாகத் தெரிந்து கொள்ளவும் நிறைய படிக்க வேண்டியது அவசியம். வர்க்க வேறுபாடு என்பது எத்தனைக் கொடூரமானது, அதைத் தொடர்ந்து இன வேறுபாடு, பால் வேறுபாடு, மொழி வேறுபாடு, சாதி வேறுபாடு என ஒன்றோடு ஒன்று பிணைந்தும், தனித்தும் என்னவெல்லாம் செய்தன, அதைச் சார்ந்து நமது முற்போக்கு சக்திகள் எப்படி இயங்கின, அவற்றுக்குள் என்னென்ன சிக்கல்கள், அவை ஒன்று பட வேண்டியதன் அவசியம் என்ன, அதன் போராட்ட வழிமுறைகளில் இருந்த கருத்து வேறுபாடுகள், அவை களையப்பட வேண்டியதன் அவசியம், ஆயுதமில்லா அறிவுப்புரட்சியின், இயக்க அரசியலின் அவசியம் ஆகியவற்றின் மீதான புரிதலை இன்னும் விளங்கிக்கொள்ளவும் இப்போதைக்குப் புத்தகங்கள்தான் ஒரே வழி.
ஆனால், புத்தகங்கள் வெகுமக்களைச் சென்று சேர்வதில்லை. நாம் இன்று அனுபவிக்கும் உரிமைகளுக்குப் பின்னால் கருப்புச்சட்டைகளும், சிவப்புச்சட்டைகளும் சிந்திய ரத்தம் இன்னும் காயாமல் இருக்கிறது. அதன் ஒரு பகுதியைத்தான் விடுதலை நமக்குக் காண்பிக்கிறது. அதனால் விடுதலையைத் தொடர்ந்து இம்மாதிரியான படங்கள் இன்னும் நிறைய வரவேண்டும் என்பது நமது ஆவல்.

இந்த இரு படங்களின் தொடக்கத்திலும் டிஸ்கிளைமர் போடப்படுகிறது. இது முழுக்க முழுக்க கற்பனைப் படைப்பே என்று ஒன்றுக்கு இரண்டு முறை அழுத்திச் சொல்கிறார் வெற்றிமாறன். அதைக் கேட்கும் போது யாரும் இதைக் கற்பனை மட்டுமே என்று எடுத்துக்கொண்டு விடாதீர்கள் என்று சொல்வதைப் போலவே நமக்குத் தோன்றுகிறது.
”சரியான தத்துவம் வலுவான தலைவர்களை உருவாக்கும். தத்துவம் இல்லாத தலைவர்கள் எப்போதும் ரசிகர்களை மட்டும்தான் உருவாக்குவாங்க. அது எப்பவும் முன்னேற்றத்துக்கு வழிவகுக்காது” என்கிறார் பெருமாள் வாத்தியார். நல்ல சமூகத்தைக் கட்டமைக்க விரும்பும் ஒவ்வொருவரும் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டிய வரிகள் இவை.!


















