``கருத்துரிமையின் மீது தொடுக்கப்படும் கோரத் தாக்குதல்; பாசிச வெறி" - தவெக அரசை ச...
திருச்சி, திருவெள்ளறை ஸ்ரீபுண்டரீகாட்ச பெருமாள் கோயில்: தாமரைக் குளம்... இரு வாசல்கள் கொண்ட கருவறை!
பெருமாள் கோயில்கொண்டிருக்கும் திவ்ய தேசத்தலங்களில் ஸ்ரீரங்கம் முதன்மையானது. ஸ்ரீரங்கம் கோயிலுக்கு இணையான பெருமையும் பழைமையும் உடைய திருத்தலம் திருச்சி மாவட்டத்திலேயே அமைந்துள்ளது. அந்தத் தலத்தை நினைத்தாலோ, தரிசித்தாலோ, பெயரைச் சொன்னாலோ முக்தி கிடைக்கும் என்கிறார்கள். அப்படிப்பட்ட அற்புதமான தலம் திருவெள்ளறை. இங்குள்ள பெருமாள் ஸ்ரீபுண்டரீகாட்ச பெருமாள் எனப்படுகிறார். ஆம், அழகிய தாமரைக் கண்களைக் கொண்டவர் இவர். வாருங்கள் அத்தல மகிமைகளை அறிந்துகொள்வோம்.
திருச்சியிலிருந்து துறையூர் செல்லும் பாதையில் 20 கி.மீ தொலைவில் மண்ணச்சநல்லூர்க்கு அருகில் திருவெள்ளறை திருத்தலம் உள்ளது. சோழ நாட்டு திவ்ய தேசங்களில் இது நான்காவது திருத்தலம். திருமகள் க்ஷேத்திரம், ஸ்வேதகிரி, நீலிகா வனம், வராகபுரி, உத்தம க்ஷேத்திரம், ஹித க்ஷேத்திரம் என்றெல்லாம் போற்றப்படுகிறது திருவெள்ளறை.

சிபிச் சக்கரவர்த்தி இங்கு வந்திருந்தபோது அவனுக்கு வராஹ மூர்த்தி அருட்காட்சி தந்து ஆட்கொண்டார். அப்போது மார்க்கண்டேய மகரிஷியின் ஆணைப்படி இங்கு திருமாலுக்கு பிரமாண்ட ஆலயம் எழுப்பி வழிபட்டான் மன்னன். திருமகள் தவமிருந்து பெருமாளை அடைந்த தலமும் இது.
இந்த ஆலயத்தின் கருவறையில் நின்ற திருக் கோலத்தில், கிழக்கு நோக்கிக் கோயில்கொண்டு அருள்கிறார் ஶ்ரீபுண்டரீகாட்சப் பெருமாள். பெருமாளுக்கு அருகே சூரிய, சந்திரா் சாமரம் வீச, கருடனும் ஆதிசேஷனும் நின்ற திருக்கோலத்தில் பெருமாளை வணங்கிக் கொண்டிருக்கின்றனா். பெருமாளின் திருவடியில் மாா்க்கண்டேயா் தவம் செய்யும் கோலத்தில் அமா்ந்துள்ளாா்.
திருவெள்ளறை தலத் தீர்த்தமான பூங்கிணற்றில் திருமகள் பங்கஜவல்லி (பங்கயச்செல்வி) தவமிருந்த வேளையில் திருமால் ஆலிலை துயின்ற ஆதிபிரான் கோலத்தில் காட்சி அளித்து திருமகளுக்கு அருள் செய்தார். எனவே ஸ்ரீபுண்டரீகாட்ச பெருமாள் கிருஷ்ணனின் அம்சமானவர் என்றும் கூறப்படுகிறது.
பங்கயச் செல்வி, பரிமளதேவி, செண்பகவல்லி என்றெல்லாம் போற்றப்படும் தாயாருக்கே இங்கு எல்லா முதல் மரியாதைகளும் என்பது விசேஷம். பெருமாள் வழங்கிய வரத்தின்படி இன்றும் எல்லா உற்சவத்திலும் தாயாரே முன்னே செல்வார். திருமால் அவரைப் பின்தொடர்ந்து செல்வார்.

இத்தலத்து பெருமாளை பெரியாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் 24 பாசுரங்களில் பாடி பெருமை சேர்த்துள்ளார்கள். நிகமாந்த மகாதேசிகரும் மணவாள மாமுனிகளும் மங்களாசாசனம் செய்த தலம் இது. ஸ்ரீராமாநுஜரின் சீடரான எங்களாழ்வாா் பிறந்த தலமும் திருவெள்ளறையே. ராமாநுஜர் இங்கு வந்தபோது தாயாருக்கு நைவேத்தியம் செய்த பிரசாதத்தை அவருக்கு அளித்து பசி போக்கினாராம் பெருமாள். அதனால் இன்றும் தாயாருக்கு அமுது செய்யப்பட்ட பிரசாதமே ராமாநுஜருக்குப் படைக்கப்படுகிறது.
இங்குள்ள ஸ்வஸ்திக் வடிவ திருக்குளமும் உத்தராயன - தட்சிணாயன வாசல்களும் சிறப்பானவை. பெருமாள் சந்நிதிக்கு இரு வாசல்கள் படியேறிச் செல்லும் வகையில் உள்ளன. ஆன்மாக்கள் உய்வு பெற, தை முதல் ஆனி மாதம் வரை உத்தராயன வாசல் வழியாகவும், ஆடி முதல் மாா்கழி மாதம் வரை தட்சிணாயன வாசல் வழியாகவும் சென்று வழிபடும் முறை இன்றும் உள்ளது.
இங்குள்ள புகழ்பெற்ற 'ஸ்வஸ்திக் குளம்’ என்ற சக்கரக்குளத்தின் சிறப்பு, ஒரு துறையில் குளிப்பவா்களை எதிர் துறையில் குளிப்பவா்கள் பார்க்க முடியாது என்பதே. ஸ்வஸ்திக் வடிவ நான்கு புறத்திலும் 52 படிகள்உள்ளன. இக்குளத்தினை `நாலு மூலைக்கேணி, மாற்பிடுகு பெருங் கிணறு' என்றும் அழைப்பர்.
ஶ்ரீதேவி, பூதேவி, சூரியன், சந்திரன், ஆதிசேஷன், குபேரன் ஆகியோர் இன்றும் அன்றாடம் இங்குள்ள சுவாமியை வழிபடுவதாக ஐதீகம். திருமகள் தங்கி இருந்த பூங்கிணறு, திவ்ய தீா்த்தம், வராஹ தீா்த்தம், குசஹஸ்தி தீா்த்தம், சந்திர புஷ்கரணி தீா்த்தம், பத்ம தீா்த்தம், புஷ்கல தீா்த்தம், மணிகா்ணிகா என 8 தீர்த்தங்கள் இங்கு உள்ளன.

ஈராயிரம் ஆண்டுகளைக் கடந்த ஆலயத்தில் பல்லவமன்னன் தந்திவா்மன் காலத்து (805-ம் ஆண்டு) கல்வெட்டு தொடங்கி விஜயநகர அரசர்கள் காலத்து கல்வெட்டுகள் வரை இந்த ஆலயத்தின் பெருமைகளைக் கூறுகின்றன. வரலாற்றுப் பெருமைகளும் புராண மகிமைகளை கொண்ட இந்த திருவெள்ளரைத் திருத்தலம் திருமகளின் பரிபூரண கடாட்சத்தைக் கொண்டுள்ளது.
வாய்ப்புக் கிடைப்பவர்கள் திருவெள்ளரைத் திருத்தலத்துக்கு சென்று வாருங்கள். செய்த வினைகள் யாவும் அழிந்து எளிதில் பெருமானின் கருணைக்கு ஆளாகலாம் என்பது ஆன்றோர் வாக்கு.



















