கரூர்: விறுவிறுப்பான ஏற்பாடுகள், பலத்த பாதுகாப்பு; முதல்வர் விஜய்யின் வருகையால் ...
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஆட்சிபுரீஸ்வரர்: பதவி யோகம் வேண்டுமா? இந்த ஈசனைத் தரிசியுங்கள்!
புராணங்களோடு தொடர்புடைய பழைமையான தலங்களைத் தரிசிப்பதே பெரும் மகிழ்ச்சியானது. பெரும்பாலும் அத்தலங்களின் பெயர்கள் அவற்றின் தலவரலாற்றோடு தொடர்புகொண்டே திகழும்.
கால ஓட்டத்தில் அவை திரிந்து மருவி அழைக்கப்படுவதால் தற்காலத்தில் அந்த அந்தத்தலத்தில் வாழ்பவர்கள் பலருக்கும்கூட அத்தலம் பற்றிய புராண வரலாறு தெரிவதில்லை. அப்படி ஒரு தலம்தான் அச்சிறுபாக்கம். இன்றைக்கு அச்சரப்பாக்கம் என்று அழைக்கப்படும் இந்தத்தலம் மிகவும் புராணிகமானது.
சென்னை-விழுப்புரம் நெடுஞ்சாலையில் உள்ளது அச்சிறுப்பாக்கம். இங்குதான் ஆட்சி செய்யும் அதிகார யோகத்தை அருளும் தெய்வமாக ஆட்சிபுரீஸ்வரர் எனும் திருப்பெயரோடு கோயில்கொண்டிருக்கிறார் சிவபெருமான். இக்கோயிலின் மகிமையை அறியுமுன் ஒரு திருக்கதையை அறிவது அவசியம்.

திரிபுரம் எரிக்கப் புறப்பட்டார் சிவபெருமான். அவருக்காக ரதம் ஒன்று தயாரானது. உலகையே ரதமாக்கி, சூரியனையும் சந்திரனையும் தேர்ச் சக்கரங்களாக்கி, ஐம்பூதங்களைத் தேர்த்தட்டாக்கி, அஷ்டகுல பர்வதங்களை விதானமாக்கி, அண்ட முகட்டைக் கொடிஞ்சியாக்கி, வேதங்களைக் குதிரைகளாகப் பூட்டி உருவானது ரதம்.
மேருமலை வில்லானது; வாசுகிப்பாம்பு வில்லின் நாணானது; பிரம்மா தேர்ப்பாகன் ஆனார். வேகமாகப் புறப்பட்ட ரதம், சிறிது தூரம் போனதும் தேரின் அச்சு முறிந்துபோனது. முழுமுதல் கடவுளாம் விநாயகரை நினைக்காமல் வணங்காமல் புறப்பட்டதால் இப்படித் தடை ஏற்பட்டது என்பதை உணர்ந்தனர்.
பின்னர் ஆனைமுகனை அனைவரும் வழிபட்டபிறகு மீண்டும் புறப்பட்டார் சிவபெருமான். திரிபுர கோட்டைகளையும் அசுரர்களையும் எரித்தார். அதனால், 'திரிபுராரி' என்று திருப்பெயர் கொண்டார். திரிபுரம் எரித்த தலம் திருவதிகை. அச்சு முறிந்த தலம் அச்சிறுப்பாக்கம்.
அழகான ஊர். அதன் நடுவே ஐந்து நிலை கோபுரத்துடன் அமைந்துள்ளது ஆட்சிபுரீஸ்வரர் ஆலயம். கோயிலின் பிரதான வாயிலுக்கு எதிரில், சற்று முன்பாகவே, அச்சுமுறி விநாயகர் சிறியதொரு கோயிலில் அருள்கிறார். அவரை வணங்கிவிட்டு ஆட்சிபுரீஸ்வரரை தரிசிக்கச் செல்லலாம்.
கோயிலின் வெளிப் பிராகாரத்தில் கொன்றை மரத்தடியில் ஒரு லிங்க மூர்த்தம் உள்ளது. அருகிலேயே அம்பாளும், வணங்கிய நிலையில் இருக்கும் முனிவரையும் தரிசிக்கலாம். இந்த லிங்கபிரானை `அடி ஈஸ்வரர்’ என்கிறார்கள். இவரைத் தவிர இன்னும் இரண்டு ஈஸ்வரர்கள் பிரதான கருவறைகளில் அருள் பாலிக்கிறார்கள்.

பாண்டிய மன்னன் ஒருவர், உடும்பு ஒன்று வழிகாட்ட இங்கு வந்து இறைவனைக் கண்டு ஆலயம் அமைத்ததாகக் கூறுகிறது தலபுராணம். திரிநேத்ரதாரி முனிவர் என்பவர் முன்னின்று ஆலயத்தைக் கட்டுவித்தாராம்.
பாண்டிய மன்னனுக்கு அருளிய ஈசன் உமையாட்சீஸ்வரர். இவருக்கான அம்பாள், 'அருள்மிகு மெல்லியலாள்.' உமையாட்சீஸ்வரர் சந்நிதியில், கம்பீரமான சிவலிங்கத்தின் பின்னால் சுவரில் உமாதேவி சமேத சிவனார் அமர்ந்த கோலத்தில் அருள்கிறார்.
திரிநேத்ரதாரி முனிவரை ஆட்கொண்டவர் அருள்மிகு ஆட்சீஸ்வரர்; சுயம்புவாக எழுந்தருளியவர். கருவறையில் சதுரபீட ஆவுடையாருடன் காட்சி தருகிறார். சிவலிங்கத் திருமேனி சற்றே சொரசொரப்பானது.
கண்வ முனிவரும், கௌதம ரிஷியும் வணங்கி வழிபட்ட ஈசன் இந்த ஆட்சீஸ்வரர். பார்க்கபுரீஸ்வரர், ஸ்திரவாசபுரீஸ்வரர், ஆட்சி கொண்டநாதர் ஆகிய திருப்பெயர்களும் இவருக்கு உண்டு. திரிபுரம் எரித்து அசுரர்களை அழித்து, தேவர்களுக்கு அவர்கள் இழந்த பெருமையையும் பதவியையும் அளித்தவர் என்பதாலோ என்னவோ, ஆட்சி அதிகாரப் பதவிகளை வழங்கும் ஈசனாகக் கருதி இவரை வழிபடுகிறார்கள் பக்தர்கள்.
இந்தக் கோயிலுக்குச் சென்று வழிபடுபவர்களுக்கு ஆட்சி பலத்தையும், ஆட்சியில் ஸ்திரத் தன்மையையும் தரக்கூடிய பெருமான் இவர் என்பது ஆன்றோர் வாக்கு. மட்டுமன்றி நல்ல உத்தியோகம், செய்யும் பணியில் உயர்பதவி, வாழ்வில் உயர்நிலை அடையவும் அருள்கிடைக்கும்; பிள்ளைகள் கல்விகேள்விகளில் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை.

ஈசன் திரிபுராதிகளை அடக்கினார் என்று பார்த்தோம் அல்லவா. அவர்களில் தாரகனும், வித்யுன்மாலியும் இறைவனின் துவாரபாலகர் ஆகும் பேறு பெற்றார்களாம். இந்தக் கோயிலிலும் அவர்களே துவார பாலகர்களாக அருள்கிறார்கள். மூன்றாவது அசுரனான கமலாட்சன் ‘குடமுழா’ எனப்படும் பஞ்சமுக வாத்தியம் இசைக்கும் பேறு பெற்றான் என்கிறது புராணம்.
கருவறை கோஷ்டமூர்த்தங்களாக சோமாஸ்கந்தர், விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்கை ஆகியோரைத் தரிசிக்கலாம். தனிச் சந்நிதியில் சண்டிகேஸ் வரர் அருள்கிறார்.
இந்தப் பெருமானுக்கான நாயகி அருள்மிகு இளங்கிளி அம்மன். வெளிப் பிராகாரத்தில் தெற்கு நோக்கி சந்நிதி கொண்டுள்ளாள். சுந்தரநாயகி, பாலசுகாம்பிகை, அதிசுந்தர மின்னாள் ஆகிய திருப் பெயர்களும் உண்டு. அபய வரதம் தாங்கி, நான்கு திருக் கரங்களுடன் அருளும் இந்த அம்பாளை வணங்கி வேண்டிக்கொண்டால், நினைத்த காரியம் நினைத்தபடி நடக்கும் என்பது நம்பிக்கை.
பிரதோஷ தினங்கள், சோமவார நாள்கள் அல்லது அவரவர் ஜன்ம நட்சத்திர தினங்களில் குடும்பத்துடன் இந்தக் கோயிலுக்குச் சென்று வழிபடுங்கள். வில்வம் சமர்ப்பித்து ஆட்சிபுரீஸ்வரரை மனதார வணங்கி வேண்டிக்கொள்ளுங்கள் அம்பாள் இருவருக்கும் நறுமணப் பூக்களைச் சமர்ப்பித்து, ஆலயத்தில் நெய்தீபம் ஏற்றிவைத்து வழிபடுங்கள்.
ஆட்சீஸ்வரரின் திருவருளால் நல்ல கல்வியும் ஆட்சி அதிகாரம் மிகுந்த உத்தியோக வாய்ப்பும் வளமான வாழ்க்கையும் அமையும்.



















