"உனக்கு என்ன நஷ்டம்? அவர் என் கணவர்" - நடிகர் கோவிந்தா குறித்த கேள்விக்கு மனைவி ...
மதுரை மாவட்டம், விராதனூர் அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன்: கவலைகள் தீரும்... கடன் சுமை குறையும்!
மதுரை கோயில்களின் நகரம். இந்தத் தலத்தைச் சுற்றிலும் ஈசனின் திருவிளையாடல் பெற்ற தலங்கள் அநேகம் உள்ளன. இத்தலங்களைத் தரிசித்தாலே வாழ்வில் உண்மையான சந்தோஷம் என்ன என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடியும்.
அப்படிப்பட்ட ஓர் அற்புதமான திருத்தலமாகத் திகழ்கிறது விராதனூர் அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் திருக்கோயில். சுவாமியின் திருநாமமே இந்த ஈசனின் தன்மையையும் தலபுராணத்தின் சுருக்கத்தையும் சொல்லிவிடும். வாருங்கள், கருணாமூர்த்தியான அந்த ஈசனின் திருக்கோயில் குறித்து அறிந்துகொள்வோம்.
மதுரை யிலிருந்து சிந்தாமணி செல்லும் மார்க்கத்தில், நெடுங்குளம் செல்லும் சாலையில், வயல் வெளிகளைத் தாண்டி அமைந்திருக்கிறது விராதனூர். இவ்வூரில், கோயிலும் அது அமைந்திருக்கும் சூழலும் தெய்வச் சாந்நித்தியத்துடன் திகழ்கின்றன.

பழைமையான இந்த ஆலயத்தின் கோயிலின் அர்த்தமண்டபத்தில் விநாயகர் மற்றும் முருகனைத் தரிசிக்கலாம். நந்திதேவர் தனி மண்டபத்தில் அமர்ந்திருக்கிறார். இந்தக் கோயிலில் பத்ரகாளி, வீரபத்திரர், முத்துக் கருப்பண்ணசாமி, ராக்காயி, சப்பாணி, காவல் கருப்பு, முனியாண்டி ஆகிய காவல் தெய்வங் களும் அருள்பாலிக்கிறார்கள்.
பெரும்பாலான சிவாலயங்களில் மூலவரின் கருவறை, மையமாக அமைந்திருக்கும். ஆனால் இங்கே, ஆலயத்தின் வடமேற்கு மூலையில் மூலவர் சந்நிதி அமைந்துள்ளது தனித்துவமானது. மூலஸ்தானத்தில் விஷ்ணுவே இடப வாகனமாக அருள்வதாக ஐதிகம். ஆக... சிவன், சக்தி, பெருமாள் ஆகிய மூவரின் திருவருளையும் ஒருங்கே பெற்றுத் தருவதாகத் திகழ்கிறது இந்தக்கோயில்.
அதேபோல், எல்லா கோயில்களிலும் ரிஷபாரூட மூர்த்தி உபமூர்த்தியாக அருள்பாலிப்பார். இங்கே, அவர்தான் மூலவராக அருள்கிறார். எனவே பிரதோஷ நாள்களில் இந்த ஈசனுக்கு வழிபாடுகள் மிகவும் விசேஷமாக நடைபெறுகின்றன.
சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு, அழகர்கோயில் பெருமாளுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக இரண்டு குடும்பங்கள் வந்தன. அவர்கள், ராமநாதபுரம் அருகிலுள்ள உத்தர கோசமங்கை எனும் ஊரைச் சேர்ந்தவர்கள். வண்டிமாடு கட்டிக்கொண்டு புறப்பட்டு விட்டார்கள்.

அப்போதெல்லாம் இப்படிப் பயணம் வருபவர்கள். ஊர் ஊராகத் தங்கி ஓய்வெடுப்பது வழக்கம். அந்த இரண்டு குடும்பத்தாரும் விராதனூரில் இந்த இடத்தில் ஆலமரத்தடியில் தங்கினார்கள். மரக் கிளைகளில் தொட்டில் கட்டி, குழந்தைகளை இட்டுத் தூங்கவைத்தனர். பின்னர் அருகில் ஓடிய கிருதமால் நதியில் குளித்துவிட்டுச் சமைத்துச் சாப்பிட்டனர். பின்னர் அசதியில் உறங்கிப்போனார்கள்.
சிறிது நேரத்தில் கண்விழித்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தொட்டிலில் இடப் பட்டிருந்த ஒரு குழந்தையைக் காணோம். பதறியடித்துக்கொண்டு அக்கம்பக்கம் தேடினார்கள். அப்போது, ஆலமரத்துக்கு மேல் அந்தரத்தில் குழந்தை மிதப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள்.
அவர்களுக்கு என்னசெய்வதென்றே தெரிய வில்லை. அவர்களுக்கு உதவ, அக்கம்பக்கத்திலும் வேறு எவரும் இல்லை. அப்போது மரத்தின் உச்சியிலிருந்து ஓர் அசரீரி ஒலித்தது.
‘கட்டியிருக்கும் தொட்டிலுக்குக் கீழே அழுத கண்ணீரை அகற்றும் வல்லமைப் படைத்த சிவன் திருமேனி ஒன்று மண்ணுள் மறைந்திருக்கிறது. இறைவனின் திருவுருவச் சிலையை வெளியே எடுத்து வழிபடுவதாக வாக்குக் கொடுத்தால், அந்தரத்தில் மிதக்கும் குழந்தை சிறிது நேரத்தில் தொட்டிலில் இருக்கும்’ என்றது அசரீரி வாக்கு.
அந்தக் குடும்பத்தவர்களும் அசரீரி சொன்னபடியே செய்வதாக சத்தியம் செய்து கொடுத்தனர். அடுத்த சில கணங்களில், அந்தக் குழந்தை சிரித்தபடி தொட்டிலில் புரண்டு கொண்டிருந்தது. இரண்டு குடும்பங்களும் மகிழ்ந்தன. ‘அழுத கண்ணீரைத் துடைத்த ஈஸ்வரா... எங்கள் ஈஸ்வரா...’ என்று எல்லோரும் கரம் கூப்பி மகிழ்ச்சியுடன் வழிபட்டனர்.

பின்னர் அழகர்கோயில் நேர்த்திக்கடனைச் செலுத்திவிட்டுச் சொந்த ஊர் திரும்பியவர்கள், அங்கு அவர்களின் குலசாமியான அழகுமுத்துக் கருப்பண சுவாமி கோயிலின் பிடிமண்ணை எடுத்து வந்தார்கள். இங்கே இந்தப் பகுதியில் படர்ந்திருந்த நெருஞ்சி முள்களையெல்லாம் அப்புறப்படுத்தினார்கள். அசரீரி குறிப்பிட்ட இடத்தில், கீழே புதைந்திருந்த... ரிஷப வாகனத்தில் அம்மை-அப்பன் இருக்கும் சிலையை மேலே எடுத்து, ஆலயம் அமைத்தனர் என்கிறது தலவரலாறு.
இந்த இறைவன் `அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன்' என்ற திருநாமமும் நிலைத்தது. அன்று முதல் இன்றுவரை இந்தச் சுவாமியை நம்பிவந்து தம் கஷ்டங்களைச் சொல்லி முறையிட்டால் உடனே அவர்களின் குறைகளை நீக்க அருள்செய்வார் என்பது கண்கூடு என்கிறார்கள் பக்தர்கள்.
நாள்தோறும் யாரேனும் ஒருவர் வந்து ஈசன் தமக்குச் செய்த அற்புதத்தைச் சொல்லி வழிபட்டுச் செல்கிறார்கள்.
மேலும் சகல தரப்பு மக்களுக்கும் கண்கண்ட தெய்வமாகத் திகழ்கிறார் இந்த ஈஸ்வரன். புராணங்களிலும்கூட இக்கோயில் பற்றிய தகவல் உள்ளது என்கிறார்கள். திருமணத்தடை உள்ளவர்கள், வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டவர்கள், குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள், உடல் நலம் குன்றியவர்கள், வாழ்க்கையில் நிம்மதியை இழந்தவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்யலாம். விரைவில் அவர்களின் கவலைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.
மகா சிவராத்திரி இங்கே மிகவும் விசேஷமாக நடைபெறுகிறது. பிரதோஷம், நவராத்திரி, பெரிய கார்த்திகை போன்ற விசேஷ நாள்களிலும் மக்கள் அதிகம் வருகிறார்கள்.
மதுரை செல்பவர்கள் எப்படி அழகர்கோயிலையும் மீனாட்சி அம்மன் கோயிலையும் தரிசிக்கிறார்களோ அதேபோன்று விராதனூர் அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரனையும் ஒருமுறை தரிசிக்க வேண்டும். அப்படி தரிசிப்பவர்களுக்கு ஈசன் எப்போதும் துணையிருந்து அருள்வான். வாழ்க்கை வளமாகும்; நலமாகும்.

















