ஈரான் துறைமுகம், விமான நிலையம் மீது அமெரிக்கா தாக்குதல்; 'ட்ரம்ப் உத்தரவின் பேரி...
திருவாரூர் மாவட்டம் எண்கண் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர்: கண் ஒளி அருளும் முருகன் திருத்தல கும்பாபிஷேகம்!
திருவாரூர் - தஞ்சாவூர் சாலையில், திருவாரூரில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது எண்கண் கிராமம். இந்த ஆலயம் மிகவும் பழைமையும் பெருமையும் வாய்ந்தது.
பிரம்மன் வணங்கிய ஈசன் இவர் என்பதால் இவருக்கு பிரம்மபுரீஸ்வரர் என்கிற திருநாமம் ஏற்பட்டது. இந்த அற்புதத் தலத்தில் இன்று (9.7.26) 16 ஆண்டுகளுக்குப் பிறகு சிறந்த முறையில் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இந்த அற்புதமான தருணத்தில் எண்கண் சிவாலயம் குறித்து அறிந்துகொள்வோம்.
ராஜராஜசோழன் முதலான எண்ணற்ற மன்னர்கள் திருப்பணி செய்த ஒப்பற்ற ஆலயம் இது. இங்கே... ஞானகுருவாக இருந்து தென்திசை நோக்கியபடி அருளுகிறார் ஸ்ரீமுருகப்பெருமான். கருவறையை 'ஞானசபை' என்பர்.
இங்கே... சிவனாரையும் முருகப் பெருமானையும் பிரம்மா வழிபட்டுப் படைப்புத் தொழிலைத் திரும்பப் பெற்றார். எனவே, இங்கேயுள்ள சிவனாருக்கு பிரம்மபுரீஸ்வரர் எனும் திருநாமம்; அம்பாளின் திருநாமம் - ஸ்ரீபிரஹன்நாயகி.

தம்பிக்குப் பலம் சேர்க்கும் வகையில், பிரமாண்டமான திருமேனியராக ஸ்ரீவிநாயகப்பெருமானும் இருக்கிறார். பிரம்மன் வழிபட்டதால் பிரம்ம க்ஷேத்திரம், சூரிய பகவான் வணங்கியதால் பாஸ்கர க்ஷேத்திரம் எனப் பெருமைகள் பல உண்டு. பிருகு முனிவர், சாபத்தில் இருந்து விமோசனம் பெற்ற தலமும் இதுதான். அருணகிரிநாதர் இங்கு வந்து, திருப்புகழ்பாடி முருகப்பெருமானை வழிபட்டுள்ளார்.
ஸ்ரீசுப்ரமணியரையும், ஸ்ரீபிரஹன்நாயகி சமேத ஸ்ரீபிரம்மபுரீஸ்வரரையும் தரிசித்து வணங்கினால், கண்களில் உள்ள குறைகள் யாவும் நீங்கும்; செவ்வாய் தோஷங்கள் விலகும். கல்வி- கேள்வியில் சிறந்து விளங்கலாம்.
பரவலாக எண்கண் பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தை முருகன் கோயில் என்றே குறிப்பிடுகிறார்கள். அதற்குக் காரணம் இங்கே முருகப்பெருமான் நிகழ்த்திய அற்புதம் ஒன்றே காரணம்.
முத்தரச் சோழன் எனும் சிற்றரசன் ஆணையிட சிக்கல் - பொறவச்சேரியில், முருகப்பெருமானின் திருவிக்கிரகத்தை வடித்துத் தந்தார் ஒரு சிற்பி. விக்கிரகத்தைக் கண்ட மன்னன், அசந்துபோனான்; இதுபோன்ற அதியற்புதமான விக்கிரகம் தன்னிடம் மட்டுமே இருக்கவேண்டும்; இந்தப் பெருமை, வேறு எவருக்கும் கிடைக்கக்கூடாது என எண்ணிய மன்னன்.
சிற்பியை அழைத்துக் கையை நீட்டச் சொன்னான். விலைமதிப்பற்ற விக்கிரகத்தைச் செய்ததற்குப் பொன்னும் பொருளும் தரப்போகிறான் என மகிழ்ச்சியோடு சிற்பி கையை நீட்ட... வாளை எடுத்து, ஓங்கி சிற்பியின் கட்டை விரலை வெட்டினான் மன்னன். துடித்துக் கதறினார் சிற்பி. 'இறைவனின் திருமேனியை இனி எப்படி வடிப்பேன்' என்று அழுதார்.

எட்டுக்குடி என்னும் தலத்தில் முருகப்பெருமானின் திருமேனி ஒன்றைச் செய்ய வேண்டும் என்கிற அழைப்பு சிற்பிக்கு வந்தது. சிற்பி முருகனைத் தியானித்து அந்தப் பணியை ஏற்றார். இந்த முறையும் அழகுற உருவானது கந்தனின் விக்கிரகம். கட்டை விரல் இல்லாத நிலையிலும், அளவு பார்த்து, உளியைப் பிடித்து, சுத்தியலால் அடித்து, கல்லைப் பக்குவமாகச் செதுக்கி விக்கிரகம் செய்த சிற்பியைக் கண்டு ஊரே வியந்தது; பாராட்டியது. இதைக் கண்டு அதிர்ந்தான் மன்னன். தனது ஏவலாட்களிடம் சிற்பியைத் தூக்கி வரப் பணித்தான்.
''பார்த்துப் பார்த்து, ரசித்து ரசித்துச் சிற்பம் வடிக்க உனக்கு இந்தக் கண்கள்தானே துணை நின்றன?! இனி உன்னால் எதையும் பார்க்க முடியாது!'' என்று சொல்லி, சிற்பியின் கண்கள் இரண்டையும் பிடுங்கினான் மன்னன். சிற்பி கதறினார். மகளின் கைப்பிடித்து நடந்தார்.
இந்நிலையில், திருவாரூர் அருகே இருந்த சதுர்வேதி மங்கலம் என்னும் ஊரில் இருந்து ஒரு விண்ணப்பம் வந்தது. முருகப்பெருமான் திருமேனி ஒன்று செய்ய வேண்டும். அதற்கு வழிகாட்டுங்கள் என்று கேட்டனர். சிற்பிக்குள் இருந்து முருகன் நம்பிக்கை தர, சிற்பி அந்தப் பணியை ஏற்றார். அவர் விரல்களே கண்கள் ஆகின. தொட்டுத் தொட்டு சிற்பத்தை வடித்தார்.
சிற்பங்களுக்கு கண் திறப்பதுதான் முக்கியமான வைபவம். கண் திறந்ததும் சிலையில் உயிரோட்டம் நிகழும் என்பது ஐதிகம். அப்படிக் கண் திறக்கும் முன் சிற்பி மனம் உருக வேண்டினான்.
''முருகா, என் கண்ணே! கண்ணில்லாதவன் உன்னுடைய கண்ணைத் திறக்கப் போகிறேனப்பா! இந்தத் தலத்தில் குடியேற வா, முருகா! என் உளியிலும் சுத்தியலிலும் வந்து இறங்கி, உன் கண்ணை நீயே திறந்துகொள் அழகப்பா... என் கண்ணே, வா!'' என்று பிரார்த்தித்தபடியே உளி கொண்டு கண் திறந்தார்.

அடுத்த கணம், அங்கே பேரொளி ஒன்று பரவிச் சூழ்ந்தது; சிற்பியின் முகத்தில் ஒளிப்பந்து ஒன்று வந்து மோதியது. கைகளால் முகத்தை மூடியவர், மெள்ளக் கைகளை எடுத்தார். என்ன ஆச்சரியம்! தரை தெரிந்தது; அண்ணாந்து பார்த்தார்; வானம் தெரிந்தது; அருகில், அருமை மகள் தெரிந்தாள்; எதிரே முருகப் பெருமான் புன்னகைத்தார்.
நெகிழ்ந்து, நெக்குருகி இரண்டு கைகளையும் குவித்து வணங்கினார் சிற்பி. கண் ஒளி தோன்றியதுபோலவே கட்டைவிரல்களும் தோன்றிவிட்டன. ஊரார் வியந்துபோயினர்.
சிற்பிக்கு முருகப்பெருமான் அருளியதை அறிந்த மன்னனும் தன் தவற்றை உணர்ந்து மன்னிப்புக் கேட்டான். பொன்னும் பொருளும் வாரிக் கொடுத்தான். அதுவரை பவித்திர மாணிக்க சதுர்வேதி மங்கலம் என அழைக்கப்பட்ட அந்த ஊர், எண்ணத்தைக் கண்ணாகக் கொண்டு செயல்பட்ட சிற்பியைப் போற்றும்விதமாக 'எண்கண்' என அழைக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது எண்கண் திருத்தலம். சிற்பிக்கு அருளிய தலம் என்பதால், இங்கு வந்து வணங்க கலை, அறிவு முதலானவற்றில் விற்பன்னராகலாம். புத்திர பாக்கியம், திருமண பாக்கியங்கள் மட்டுமின்றி சகல ஐஸ்வரியங்களையும் அள்ளித் தந்து அருள்பாலிக்கிறார் முருகப்பன். இப்படிப்பட்ட சிறப்புகளை உடைய இந்த ஆலயத்தில்
இதற்கு முன்பு இந்த ஆலயத்தில், 25.4.10 அன்று கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. தற்போது திருப்பணிகள் நடைபெற்றது சிறப்புற கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. வாய்ப்பிருப்பவர்கள் ஒருமுறை எண்கண் முருகனைக் கண்குளிரத் தரிசியுங்கள்; உங்கள் எண்ணமெல்லாம் ஈடேறும்!




















