செய்திகள் :

தஞ்சை மாவட்டம், சேங்கனூர் சத்தியகிரீஸ்வரர் கோயில்: பதவி யோகம் கிடைக்கும்... குரு தோஷம் நீங்கும்!

post image

முருகப்பெருமான் ஈசனை வழிபட்ட தலங்கள் அநேகம். அவை மகிமையும் பழைமையும் பெருமையும் வாய்ந்த தலங்கள். அத்தகைய தலங்களுக்குச் சென்று வழிபட்டாலே நம் வினைகள் தீரும். வேண்டும் வரம் கிடைக்கும் என்கின்றன ஞானநூல்கள். அப்படி ஒரு தலம் தான் சேங்கனூர்.

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகில் மண்ணியாற்றின் தென்கரையில் அமைந்துள்ள சிவத்தலம் சேய்ஞலூர். திருஞானசம்பந்தர் பாடிய தலம் இது.

சேய் ஆகிய முருகப் பெருமான், சிவபெருமானை வழிபட்ட நல்ல ஊர் என்பதால்... சேய்+நல்+ஊர் என்பது சேய்ஞலூர் என்றானது. தற்போது, சேங்கனூர் என்றழைக்கப்படுகிறது.

சேங்கனூர் சத்தியகிரீஸ்வரர் கோயில்
சேங்கனூர் சத்தியகிரீஸ்வரர் கோயில்

இந்தத் தலத்தில்தான் விசார சர்மருக்கு சண்டீடப் பதவி அளித்து அருள்புரிந்தார் ஈசன் என்கிறது தலபுராணம். ஆதலால், இங்கு கோயில் கொண்டிருக்கும் இறைவனை, `பதவி தரும் பரமன்’ என்றே போற்றுகிறார்கள் பக்தர்கள். இவரை வழிபட்டால் பதவி யோகம் அருள்வார் என்பது நம்பிக்கை.

இங்கே ஈசன் அருள்மிகு சத்தியகிரீஸ்வரராக அருள்பாலிக்கிறார். அம்பிகையின் திருநாமம் ஸ்ரீசகிதேவி.

முருகன் இந்த ஊரில் தங்கியிருந்து ஈசனுக்கு பூஜை செய்தாராம். அதற்காக அவர் அமைத்த தீர்த்தம் குமார தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. அதேபோல் அவர் நீராடிய நதியை சுப்ரமணியா நதி எனப் போற்றுகின்றன புராணங்கள். தற்போதும் உள்ள மண்ணியாறுதான் அந்த நதி என்கிறார்கள்.

தன்னை பூஜித்த முருகப்பெருமானுக்கு ஒரு தைப் பூச தினத்தன்று சிவபெருமான் காட்சி கொடுத்தார். இந்த இடத்தில் முருகப்பெருமானுக்காக தேவ தச்சன் ஒரு நகரை நிர்மாணித்துத் தந்தாராம். அது குமாரபுரி என வழங்கப்பட்டது என்ற தகவலும் உண்டு. இங்கே தனிச் சந்நிதியில் அழகு மிளிர அருள்பாலிக்கிறார் முருகப்பெருமான். அருணகிரியார் இவரைப் போற்றிப் பாடியுள்ளார்.

சேங்கனூர் சத்தியகிரீஸ்வரர் கோயில்
சேங்கனூர் சத்தியகிரீஸ்வரர் கோயில்

இந்த ஆலயம், கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில்களில் ஒன்றாகும். காலத்தால் சிதைவுபடத் தொடங்கிய நிலையில் புனர்நிர்மாணம் செய்தார்களாம். கட்டுமலை போன்ற அமைப்பில் திகழ்கிறது கருவறை. உள்ளே சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்கிறார் சத்தியகிரீஸ்வரர்.

சுவாமி சந்நிதிக்கு இடப்புறத்தில் வடக்கு நோக்கி அருள்கிறாள் அம்பிகை சகிதேவி. தம்மை வழிபடும் அன்பர்களுக்குக் கருணையோடு வரங்களை வாரி வழங்கும் கற்பகமாய் அருள்கிறாள் இந்த அன்னை.

இந்தத் தலத்துக்கு வந்து புண்ணிய நீராடி வழிபடும் அடியவர்களுக்கு, குரு தோஷத்தை நீக்கி தர்மார்த்த காம மோக்ஷத்தை வழங்குகிறாராம் இறைவன். அவருக்குச் சகியாய் உடன் நின்று அம்மையும் அருள்கிறாள். அம்மையும் அப்பனும் இங்ஙனம் அனுக்கிரகம் செய்வது, இந்தத் தலத்துக்கே உரிய சிறப்பம்சம்.

முன்னொரு காலத்தில் இந்தப் பகுதியை சிபிச் சக்ரவர்த்தி அரசாண்டபோது நிகழ்ந்த ஓர் அற்புதம் இத்தலத்தின் மகிமையைச் சொல்லும். ஒருமுறை சிபிச் சக்ரவர்த்தி, தம்முடைய கிரக தோஷத்தைப் போக்கிக்கொள்ள 360 வீடுகளைக் கட்டி, பசுக்களுடன் பூதானம் செய்தாராம். அப்போது, தானம் பெறுவோரில் எண்ணிக்கையில் ஒருவர் குறைந்தார். அதனால் மன்னன் மனம் கலங்கி இறைவனை வேண்டினார்.

சேங்கனூர் சத்தியகிரீஸ்வரர் கோயில்
சேங்கனூர் சத்தியகிரீஸ்வரர் கோயில்

இந்தச் சூழலில், சேய்ஞலூரின் இறைவனும் இறைவியுமே அந்தணத் தம்பதியாக வந்து மாமன்னரின் தானத்தை ஏற்று அவரின் மனக்குறையைத் தீர்த்து அருள்பாலித்தார்களாம். இன்றைக்கும் அந்த வீடு `சுவாமி வீடு’ என்ற பெயரில் திகழ்கிறது. அங்கே அம்மையும் அப்பனும் முறையே சிவலோகநாயகி - கயிலாயநாதர் எனும் திருப்பெயர்களில் குடிக்கொண்டுள்ளதாகப் போற்றுகின்றனர்.

நாரத மகரிஷி மூலம் இத்தலத்தின் மேன்மையை அறிந்த அரிச் சந்திர மகாராஜாவும் இந்தத் தலத்துக்கு வந்து தங்கியிருந்து வழிபட்டு, தைப்பூச தீர்த்தோத்சவம் நடத்திவைத்தார் என்கின்றன ஞானநூல்கள்.

அற்புதமான இந்தத் தலத்துக்கு நீங்களும் ஒருமுறை குடும்பத்துடன் சென்று வாருங்கள். சகிதேவியின் திருவருளால் சகல கவலைகளும் தீரும்; ஐயன் சத்தியகிரீஸ்வரரின் பேரருள் உங்களுக்கு அரணாகும்.

எப்படிச் செல்வது?: கும்பகோணம் - திருப்பனந்தாள் சாலையில், திருப்பனந்தாள் நகரிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் சேங்கனூர் ஆலயம் உள்ளது.

சேலம்: காவடி பழநியாண்டவர் கோயிலில் சக்திவிகடன் நடத்தும் திருமண வரம்தரும் ஶ்ரீசுயம்வர பார்வதி ஹோமம்!

இருமணம் இணையும் திருமணம் என்பது ஒவ்வொருவர் வாழ்விலும் மிகவும் முக்கியமான தருணம். காரணம் இல்லறத்தில் ஈடுபடுபவர்களே சகல அறங்களையும் செய்யத் தகுதியானவர்கள் என்கின்றன ஞான நூல்கள். அப்படிப்பட்ட திருமணம் சி... மேலும் பார்க்க

திருவாரூர் மாவட்டம், பூந்தோட்டம் ஸ்ரீ அகத்தீஸ்வரர்: கும்பராசிக்காரர்களுக்கு வளம் தரும் திருத்தலம்!

சிவபெருமானின் 64 திருவடிவங்களில் முக்கியமானது ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சொரூபம். குருவாக அமர்ந்து மௌன உபதேசம் செய்யும் ஆலமர் செல்வனை வணங்கினால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். சிவாலயங்களில் தட்சிணாமூர்த்த... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மாவட்டம் இஞ்சிமேடு ஸ்ரீவரதராஜபெருமாள்: திருமண வரம் தரும் மஞ்சள்மாலை பிரார்த்தனை!

வேள்விகள் செய்வதன் மூலம் நம் வாழ்வுக்குத் தேவையான சகலத்தையும் அதேவேளையின் பெருமாளின் அனுக்கிரகத்தையும் பெறமுடியும் என்பது நம்பிக்கை. தேவர்கள் முதல் ரிஷிகள் மன்னர்கள்வரை அனைவரும் வேள்வி செய்து இறைவனை வ... மேலும் பார்க்க

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஆட்சிபுரீஸ்வரர்: பதவி யோகம் வேண்டுமா? இந்த ஈசனைத் தரிசியுங்கள்!

புராணங்களோடு தொடர்புடைய பழைமையான தலங்களைத் தரிசிப்பதே பெரும் மகிழ்ச்சியானது. பெரும்பாலும் அத்தலங்களின் பெயர்கள் அவற்றின் தலவரலாற்றோடு தொடர்புகொண்டே திகழும். கால ஓட்டத்தில் அவை திரிந்து மருவி அழைக்கப்ப... மேலும் பார்க்க

திருமண வரம் தரும் திருத்தலத்தில் சக்திவிகடன் நடத்தும் விளக்குப்பூஜை... நீங்களும் கலந்துகொள்ளலாம்!

சக்தி விகடன் மாதம்தோறும் அற்புதமான திருக்கோயில்களில் திருவிளக்குபூஜை நடத்துவது வழக்கம். விளக்கேற்றி வழிபட்டால் சகல தெய்வங்களையும் ஆராதனை செய்த பலன் கிடைக்கும். அதுவும் வெள்ளிக்கிழமை மாலைவேளையில் விளக்... மேலும் பார்க்க

எண்கண் ஸ்ரீபிரஹன்நாயகி சமேத பிரம்மபுரீஸ்வரர்... ஸ்ரீமுருகப்பெருமான் திருக்கோயில் கும்பாபிஷேகம் LIVE

எண்கண் பிரஹன்நாயகி சமேத பிரம்மபுரீஸ்வரர், ஸ்ரீசுப்பிரமண்யசுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் லைவ். Watch the LIVE telecast of the sacred Maha Kumbabishekam of Enkan Sri Brahmapureeswarar Temple and Sri ... மேலும் பார்க்க