செய்திகள் :

திருச்சி: பாழடைந்த கிணற்றில் இரு வாலிபர்களின் உடல்; தனியாக கிடந்த தலை; சந்தேகம் கிளப்பும் உறவினர்கள்

post image

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள கீழ ஆதிகுடி கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் 7 அடி அகலம் 15 அடி ஆழம் கொண்ட பாழடைந்த கிணற்றில் இருந்து கடந்த சில தினங்களாக கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது.

இதனால், சந்தேகமடைந்த அப்பகுதி பொதுமக்கள், உடனடியாக லால்குடி காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் லால்குடி டி.எஸ்.பி ராஜ்மோகன், காவல் ஆய்வாளர் கருணாகரன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றைப் பார்வையிட்டனர்.

​அப்போது, கிணற்றுக்குள் அழுகிய நிலையில் இரண்டு வாலிபர்களின் சடலங்கள் குப்புறக் கிடப்பது தெரியவந்தது. மேலும், கிணற்றின் அருகே கிடந்த லுங்கி, டீசர்ட், இரண்டு ஜோடி காலணிகள், செல்போன், அரிவாள் மற்றும் கடப்பாரை ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றினர்.

மேலும், சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு முக்கிய தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, லால்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரபு தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி, கயிற்றில் கட்டி இரண்டு சடலங்களையும் மீட்டனர்.

அப்போது, மீட்கப்பட்ட சடலங்களில் ஒரு சடலத்தின் தலை இல்லாமல் இருந்ததைக் கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். ​இதையடுத்து, தீயணைப்புத் துறையினரும், போலீஸாரும் கிணற்றுக்குள் தலையைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். எனினும், இரவு நேரமாகிவிட்டதாலும், கிணற்றில் 5 அடி ஆழத்திற்குத் தண்ணீர் இருந்ததாலும் துர்நாற்றம் அதிகமாக வீசியதாலும் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

இதையடுத்து, மீட்கப்பட்ட உடல்கள் மட்டும் பிரேதப் பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட செல்போன் மற்றும் ஆடைகளை வைத்து போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், கடந்த மே 9-ம் தேதி லால்குடி காவல் நிலையத்தில் இரண்டு நபர்கள் காணாமல் போனதாகப் பதிவான வழக்குடன் இது ஒத்துப்போனது. ​

லால்குடி
லால்குடி

அதன் அடிப்படையில், காணாமல் போனவர்களின் உறவினர்களை வரவழைத்துக் காட்டியபோது, இறந்தவர்கள் ​கடலூர் மாவட்டம், கார் மாள்குடி, புளியந்தோப்பு தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் வெற்றிமணி (45) மற்றும் ஈரோடு மாவட்டம் குளூர் பள்ளிக்காடு தோட்டம் பகுதியைச் சேர்ந்த ராஜா மகன் ​வீரமணி (28) என்பது உறுதி செய்யப்பட்டது.

அதோடு, போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. பச்சம்பேட்டையில் உள்ள ஆசைத்தம்பி என்பவருக்குச் சொந்தமான செங்கல் சூளையில் கடந்த 20 வருடங்களாக எழிலரசன் என்பவர் வேலை செய்து வந்துள்ளார். அவர் தனது மாமா முறையான வீரமணியை இங்கு ஓட்டுநர் வேலைக்கு அழைத்துள்ளார்.

அதன் பின்னர், தனது அண்ணன் முறையான வெற்றிமணியையும் செங்கல் அறுக்கும் தொழிலுக்காகக் குடும்பத்துடன் அழைத்து வந்துள்ளார். இந்நிலையில், ​இங்கு வேலை பார்த்து வந்த வெற்றிமணி மற்றும் வீரமணி ஆகிய இருவரும் கடந்த 03.05.2026 அன்று வீட்டிலிருந்து வெளியே சென்றவர்கள் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இருவரையும் பல இடங்களின் தேடி கிடைக்காததால் இதுகுறித்து வெற்றிமணியின் மனைவி மாரியம்மாள் லால்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்த நிலையில் தற்போது சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

கொலை
கொலை

இந்நிலையில், இன்று காலை 11 மணியளவில் தீயணைப்புத் துறையினரின் உதவியுடன், லால்குடி போலீஸார் மின் மோட்டார் மூலம் கிணற்றில் இருந்த தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது. அதன் பின்னர், ஏணியின் உதவியோடு கிணற்றுக்குள் கிடந்த துண்டிக்கப்பட்ட தலை மீட்கப்பட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

உடற்கூறு ஆய்வு முடிவடைந்ததைத் தொடர்ந்து, இருவரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. எனினும், லால்குடி அரசு மருத்துவமனையில் திரண்டிருந்த வீரமணி மற்றும் வெற்றிமணியின் உறவினர்கள், இருவரின் இறப்பிலும் சந்தேகம் இருப்பதாகக் கூறி போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ​

அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய லால்குடி டி.எஸ்.பி ராஜ்மோகன், உடற்கூறு ஆய்வு முடிவுகள் முழுமையாக வந்த பின்னரே இறப்பிற்கான காரணம் தெரியவரும். அப்படி கொலையாக இருக்கும் பட்சத்தில் கொலையாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

இச்சம்பவம் குறித்து, லால்குடி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து, இது இரட்டைக் கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொள்ளாச்சி: ரூ.70,000 லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ கைது - அதிர்ச்சி பின்னணி!

திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ருஜைனா பாத்திமா. இவரது கணவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரிடம், இரு சக்கர வாகனத்தை அடமானமாக வைத்து பணம் பெற்றுள்ளார். இத... மேலும் பார்க்க

அமைச்சர்கள் வழங்கிய உதவியை பெற மறுத்த சபரிவர்மன் குடும்பத்தினர்; மரண சந்தேகங்களை தீர்க்க கோரிக்கை!

கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈத்தன்காடு, நாராயணன்புதூரை சேர்ந்த சபரிவர்மன் (35) சிறையில் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. மாற்றுத்திற... மேலும் பார்க்க

Lockup Death: ரூ.192 மதிப்புள்ள குட்காவுக்காக நடந்த கைது; சிறையில் நடந்த கொடூரம் - FIR விவரம்!

கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈத்தன்காடு பகுதியைச் சேர்ந்த சபரிவர்மன்(35) வீட்டுக்கு அருகே பெட்டிக்கடையில் குட்கா விற்பனை செய்ததாக கடந்த 9-ம் தேதி தென் தாமரைக்குள... மேலும் பார்க்க

சென்னை: ரூ.11 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல் - டிராவல்ஸ் அதிபர் சிக்கிய பின்னணி!

சென்னை திருவல்லிக்கேணி போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அதன்படி 15.7.2026-ம் தேதி திருவல்லிக்கேணி, தசூதீன்கான் தெருவில் உள்ள லாட்ஜிக்கு தனிப்படை போலீஸா... மேலும் பார்க்க

சென்னை: குட்கா வழக்கில் கைதானவர் சிறையில் உயிரிழப்பு - காவல் நிலையம் முற்றுகை

சென்னை சேலையூர், ஜானகிராமன் தெருவை சேர்ந்தவர் பாலாஜி (44). இவர் மீது சேலையூர் போலீஸார் குட்கா வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் பாலாஜியின் கூட்டாளியான ராமநாதன் என்பவரும் கைது செய்ய... மேலும் பார்க்க

சென்னை: ரயில் நிலையத்தில் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த மின்வாரிய ஊழியர் - சிக்கியது எப்படி?

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 32 வயதான பெண் ஒருவர், குடும்பத்துடன் கேரளாவில் வசித்து வருகிறார். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு மேற்கு வங்காளத்துக்குச் சென்றார். பின்னர், ரயில் மூலம் கேரளாவுக்குச் ச... மேலும் பார்க்க