திருச்சி: `முறையற்ற தொடர்பு' - கண்டித்த தொழிலதிபர் அடித்துக் கொலை... 5 வாலிபர்கள் கைது
திருச்சி, அரியமங்கலம் பெரியாா் தெரு, அம்மாகுளம் பகுதியைச் சோ்ந்தவா் பொன்ராஜ் (வயது: 64). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவா், கடந்த திங்கள்கிழமை இரவு காட்டூா் கைலாஷ்நகா் பகுதியில் உடலில் காயங்களுடன் விழுந்து கிடந்தாா். அவா் சாலை விபத்தில் காயமடைந்திருக்கலாம் என நினைத்து அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அங்கிருந்த மருத்துவர்கள் பொன்ராஜ் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து, பொன்ராஜ் உடலில் இருந்த காயங்களை வைத்து, அவா் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேக புகாரின் அடிப்படையில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், அவர் இறந்துகிடந்த பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, அதில் பொன்ராஜை சிலா் தாக்குவது பதிவாகியிருந்தது. இதுதொடா்பாக, இருவரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா்.

இதில், அரியமங்கலம், முத்துநகரை சோ்ந்த பாலசுப்பிரமணியன் மகன் நிஷாந்த் (வயது: 27) என்பவா் தனது நண்பா்களான திருநெடுங்களம், வடக்குத் தெருவைச் சோ்ந்த நாராயணசாமி மகன் பாரதிராஜா (வயது: 24), அரியமங்கலம் அம்மா குளத்தைச் சோ்ந்த நல்ல முத்து மகன் சந்தோஷ்குமாா் (வயது: 18) உள்ளிட்ட சிலருடன் சோ்ந்து பொன்ராஜை அடித்து கொலை செய்தது தெரியவந்தது.
பொன்ராஜின் உறவுப்பெண் ஒருவருக்கும், நிஷாந்துக்கும் முறையற்ற தொடா்பு இருந்ததாகவும், அதை பொன்ராஜ் கண்டித்ததால் அவரை கொலை செய்ததாகவும் நிஷாந்த் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளாா்.
இதற்கிடையில், இந்த வழக்கை போலீஸாா் கொலை வழக்காக மாற்றி விசாரிக்க முயன்றபோது, ஸ்ரீரங்கம் அடைய வளைஞ்சான் வீதியைச் சோ்ந்த மகேந்திரன் மகன் பிரசன்னா (வயது: 20), ஸ்ரீரங்கம், வடக்கு வாசலை சோ்ந்த ரங்கராஜ் மகன் குணசேகா் (வயது: 21) ஆகிய இருவரும் ஏற்கெனவே திருச்சி 6-ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தனர். முறையற்ற தொடர்பை கண்டித்ததால், முதியவர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், திருச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
