மேஷம் - புத்தாண்டு பலன்கள் 2026 | Mesham Rasi New Year Rasi Palan | நினைத்தது ந...
திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயில் : 5 ம் படை வீடு... ஆங்கிலப் புத்தாண்டு அன்று களைகட்டும் படிபூஜை!
முருகப்பெருமான் வள்ளலாகத் தன்னை நாடிவரும் அடியவர்க்கு நல்லருளை வாரிவாரி வழங்கும் ஆறு தலங்களே அறுபடைவீடுகள் என்று போற்றப்ப்டுகின்றன. அவற்றுள் திருத்தணி 5 - ம் படை வீடு. சூரபத்மனை போரில் வென்றபின் இங்கு வந்து அமர சினம் தணிந்தது என்பதால் இதனைத் திருத்தணி என்று அழைக்கின்றன ஞான நூல்கள். சினம் தணிந்து வள்ளியோடு இங்கு வந்து அமர்ந்ததால் திருத்தணிகையில் சூரசம்ஹார விழா நடப்பதில்லை என்பது கூடுதல் தகவல். அன்றைய தினம் இத்தல முருகப்பெருமானுக்கு புஷ்பாஞ்சலி மட்டுமே நடைபெறுகிறது. இங்கு மூலவராகத் திகழும் சுப்ரமணிய சுவாமியின் திருமார்பில் ஒரு பள்ளம் காணப்படுகிறது. இது சூரபத்மனோடு போர் செய்தபோது ஏற்பட்டது என்கிறார்கள்.
ஆறுபடை வீடுகளில் திருத்தணியில்தான் உயரமான கருவறை கோபுரம் உள்ளது. முருகப்பெருமானின் வாகனம் மயில் என்பதை அறிவோம். அதேவேளை சுவாமிமலையிலும் திருத்தணியிலும் யானைதான் முருகப்பெருமானின் வாகனமாக உள்ளது. இந்த யானை வாகனம் சந்நிதியின் வெளிப்புறத்தைப் பார்த்தவாறு உள்ளது.

இந்திரன், தெய்வானையை முருகனுக்கு திருமணம் முடித்து தந்தபோது, ஐராவதத்தை சீதனமாக கொடுத்தார். இந்திரலோக ஐஸ்வர்யங்களில் ஒன்று ஐராவதம். இதனால், தேவலோகத்தின் ஐஸ்வர்யம் குறைந்தது. ஆகவே, ஐராவதத்தின் பார்வையை தேவலோகம் நோக்கி திருப்ப அனுமதிக்கும்படி முருகனிடம் வேண்டினார். முருகனும் சம்மதித்தார். எனவே ஐராவதம், தேவலோகத்து திசையான கிழக்கு நோக்கி இருக்கிறது.
மேலும் திருத்தணி கோயிலில் முருகனுக்கு வேல் கிடையாது என்பது இந்தத் தலத்துக்கே உரிய சிறப்பாகும். மாறாக சக்தி ஹஸ்தம் 9 (இதை வஜ்ரவேல் என்றும் சொல்வார்கள்) எனப்படும் இடி போன்ற ஓர் ஆயுதம் ஒன்றை ஏந்தியிருக்கிறார்.
நோய் தீர்க்கும் சந்தன பிரசாதம்
இந்தத் தலத்தில்தான் சூரபத்மனின் சகோதரனான தாரகாசுரனிடம் இருந்து சக்கராயுதத்தை மகாவிஷ்ணு முருகப்பெருமானின் துணையோடுமீட்டார் என்கிறது தலபுராணம். இங்குள்ள தீர்த்தம் ஒன்றுக்கு விஷ்ணு தீர்த்தம் என்றே பெயர். பகவான் விஷ்ணுவே இதை உருவாக்கினார் என்பது ஐதிகம். இந்தப் புனித தீர்த்தத்தில் நீராடி முருகப்பெருமானி வழிபட்டால் நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருத்தணியில் முருகனுக்கு இந்திரனே காணிக்கையாகக் கொடுத்ததாகச் சொல்லப்படும் சந்தனக்கல்லில், அரைக்கப்படும் சந்தனம் மட்டுமே சாத்தப்படுகிறது. இந்த சந்தனத்தை பக்தர்கள் நெற்றியில் இட்டுக்கொள்ளாமல், நீரில் கரைத்து குடித்து விடுகிறார்கள். இதனால் பல நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை. எல்லா நாள்களும் இந்த சந்தனப் பிரசாதம் கிடைப்பதில்லை. மாறாக விழாக்காலங்களில் மட்டுமே கிடைக்கும்.

மூலஸ்தானத்திற்கு பின்புறமுள்ள சுவரில் ஆதி பாலசுப்பிரமணியர் அருள்கிறார். கைகளில் அட்சர மாலை, கமண்டலத்துடன் இருக்கும் இந்த முருகனே, வள்ளி திருமணத்திற்கு முன்பு இங்கு எழுந்தருளிய மூர்த்தி என்கிறார்கள். மார்கழி திருவாதிரையில் இவருக்கு வெந்நீரால் அபிஷேகிக்கின்றனர். குளிர்காலம் என்பதால், குழந்தையான குமரனுக்கு வெந்நீர் அபிஷேகம் செய்யப்படுகிறது என்கிறார்கள்.
இந்தத் தலத்தில் ஆங்கிலப்புத்தாண்டை மிகவும் சிறப்புடன் கொண்டாடுகிறார்கள். தமிழ்க்கடவுளான முருகப்பெருமானின் திருக்கோயிலில் ஆங்கிலப்புத்தாண்டு சிறப்பாகக் கொண்டாடப்படுவது ஏன் என்பதற்கு விடையாக அமைகிறது ஒரு வரலாற்று நிகழ்வு.
ஆண்டின் முதல் நாளில் படிபூஜை
வள்ளிமலை சுவாமிகள் திருத்தணி முருகனின் தீவிர பக்தர். திருப்புகழை பரப்புவதையே தன் வாழ்வாகக் கொண்டு செயல்பட்ட அவர் ஒருமுறை ஆங்கிலப்புத்தாண்டு தினத்தன்று திருத்தணி முருகன் கோயிலுக்கு வந்தபோது அங்கே பக்தர் யாரும் இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்தது.
அப்போது அங்குள்ளவர்களிடம் வள்ளிமலை சுவாமிகள் காரணம் கேட்டார். அதற்கு, 'இன்று ஆங்கிலப் புத்தாண்டு தினம். எனவே மக்கள் எல்லோரும் துரைமார்களுக்கு சலாம் வைத்து அவர்களின் காலில் விழுந்து ஆசி பெறுவார்கள். அதனால் புத்தாண்டு அன்று தமிழர்கள் யாரும் இங்கு வருவது இல்லை' என்று கூறியிருக்கிறார்கள்.
இதைக் கேட்ட வள்ளிமலை சுவாமிகள் வருத்தமடைந்தார். 'துரைகளுக்கெல்லாம் பெரிய துரையான முருகன் இருக்கும் இடத்துக்கு வராமல் யாரோ ஒரு மனிதரைத் துதித்து வழிபடுவதா' என்று வருந்தினார். மக்களை முருகனிடம் வரவேற்க ஒரு திருவிழா நடத்தலாம் என்று முடிவு செய்தார். அதுவும் ஆங்கிலப் புத்தாண்டு அன்று அதை நிகழ்த்த முடிவு செய்தார்.

சுவாமி மலையில் அமைந்துள்ள 60 படிகளுக்கும் ஆண்டுதோறும் தமிழ் வருடப்பிறப்பன்று படிபூஜை நடைபெறுகிறது. 60 தமிழ் வருடங்களின் பெயர்களாக இந்தப் படிகள் விளங்குவதாய் ஐதிகம். எனவே, அவற்றுக்கு ஆண்டுதோறும் சித்திரை முதல் நாளில் பூஜைகள் நடைபெறுகின்றன. அதைப்போலவே 365 படிகளைக் கொண்டிருக்கிற திருத்தணிகை முருகன் கோயில் படிபூஜை செய்தால் என்ன என்று யோசித்து அதையே விழாவாகக் கொண்டாட முடிவு செய்தார். மக்களிடம் முருகனே துரைகளுக்கெல்லாம் துரை. எனவே துரை முருகனைக் கொண்டாடுவோம் என்று அழைப்பு விடுத்தார். அவரின் அழைப்பை ஏற்ற மக்கள் திருத்தணியில் குவிந்தனர்.
முதல் படிபூஜை 1917-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி அன்று ஆரம்பமானது. அன்று முதல் இன்றுவரை இந்த உற்சவம் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு படிக்கும் வெற்றிலை, பழம், சூடம் வைத்து இரண்டு நாள்களும் பூஜை செய்யப்படும். டிசம்பர் 31-ம் தேதி காலையில் தொடங்கி மறுநாள் விடிய விடிய நடைபெறுகின்ற இந்தப் படிபூஜை புத்தாண்டு தினமான ஜனவரி 1-ம் தேதியன்று இரவு 10 மணிவரையிலும் நடைபெறும். பக்தர்களும் இதில் திரளாகக் கலந்துகொள்வார்கள். இந்த நாளில் திருத்தணியில் அன்னதானங்களும் பக்தர்களின் கூட்டமும் களைகட்டும். திருத்தணி தலத்தின் மகிமையும் பழைமையும் பெரியது. வாய்ப்பிருப்பவர்கள் ஒருமுறை சென்று சினம் தணிந்த அந்த சுப்ரமணிய சுவாமியை தரிசித்து வாருங்கள். வாழ்வில் சுகங்கள் அனைத்தும் தேடிவரும்.




















