செய்திகள் :

திருமணமான 5 வருடங்களுக்கு பெற்றோரை உடன் வைத்துக்கொள்ளாதீர்கள்; உறவுச்சிக்கலுக்கு இதுதான் தீர்வா?

post image

புதிதாகத் திருமணமான தம்பதிகள் ஆரம்பத்திலேயே பெற்றோருடன் வசிப்பது, அவர்கள் தங்களுக்குள் ஒரு வலுவான பிணைப்பை உருவாக்கிக்கொள்வதைத் தடுக்கும் என்றும், குடும்பப் பெரியவர்களின் தலையீடு தம்பதிகளின் தனிப்பட்ட வளர்ச்சியையும் முடிவெடுக்கும் திறனையும் பாதிக்கும் என்றும் சொல்கிறார், பிரபல ரிலேஷன்ஷிப் எக்ஸ்பெர்ட் அஜய் கே பாண்டே.

தம்பதிகள் தங்களை தனித்தனி குடும்பமாக (Unit) உணர்வதற்கும், பொறுப்புகளைச் சுயமாகக் கற்றுக்கொள்வதற்கும் முதல் ஐந்து ஆண்டுகள் தனியாக வசிப்பதே ஆரோக்கியமானது என்பதும் அவர் வலியுறுத்தும் கருத்து. 

பெற்றோருடன் இருக்கும்போது, தம்பதிகள் எடுக்கும் முடிவுகளில் பெரியவர்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். தனியாக இருக்கும்போது மட்டுமே தங்களுக்குள் எதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்கிற தெளிவு கிடைக்கும் என்றும் அவர் காரணங்களை அடுக்குகிறார். 

 உளவியல் ஆலோசகர் லட்சுமிபாய்
உளவியல் ஆலோசகர் லட்சுமிபாய்

இது எந்த அளவுக்குச் சரி... புதிதாகத் திருமணமானவர்கள், பெரியவர்களைத் தங்களுடன் வைத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டுமா... அது அவர்களது அந்நியோன்யத்தைப் பலப்படுத்துமா...? சென்னையைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் லட்சுமிபாயிடம் பேசினோம்.

அவர் முன்வைக்கும் கருத்துகள், ரிலேஷன்ஷிப் எக்ஸ்பெர்ட் அஜய் கே பாண்டே சொல்வதற்கு முற்றிலும் மாறாக இருக்கின்றன. 


சந்தோஷமான வாழ்க்கைக்கு பெற்றோரின் சப்போர்ட் அவசியம்!

''புதிதாக ஒரு வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் அந்தத் தம்பதியருக்கு அடிப்படைத் தேவை பொருளாதாரம். எத்தனை புதுமண தம்பதியருக்கு, அது போதுமானதாக இருக்கிறது என்பது கேள்விக்குறியே. வேலையில்லாமலோ, வேலையிருந்தும் போதுமான சம்பளம் இல்லாமலோ திருமணம் செய்கிறவர்களுக்கு, முதலில் பெற்றோரிடமிருந்துதான் உதவிக்கரங்கள் நீளும். அந்த சப்போர்ட் இருந்தால்தான் புதுமண தம்பதியரால் சந்தோஷமாக வாழ்க்கையை ஆரம்பிக்கவே முடியும்.

Family
Family

'ஆசை 60 நாள், மோகம் 30 நாள்' என்று சொல்லப்பட்டதெல்லாம் மாறி, இன்று அதெல்லாம் ஒரு வாரம் தாக்குப்பிடித்தாலே பெரிது என்ற நிலைதான் இருக்கிறது. அதனால் பெற்றோர் உடனிருந்தால் தம்பதியரின் நெருக்கம் பாதிக்கப்படும் என்று சொல்வதெல்லாம் ஏற்புடையதல்ல.

திருமணம் என்பது ஒரு நீண்ட நெடும் பயணம். அது ஒருநாள் அனுபவத்தோடு முடிந்துபோவதல்ல. வாழ்க்கை முழுக்க தொடர வேண்டியது. இருவருக்குள்ளும் அட்ஜஸ்ட் செய்து வாழ்வது, மன்னிப்பது, மன்னிப்பு கேட்பது- இவையெல்லாம் இருக்க வேண்டும். ஆனால், ஈகோ என்ற ஒரு விஷயத்தால் இன்று பெரும்பாலான திருமண வாழ்க்கை ஆரம்பத்திலேயே முடிவுக்கு வந்துவிடுகிறது. படித்த கணவன்-மனைவிக்குக்கூட ஒருவர் மேல் ஒருவர் சந்தேக நோய் இருப்பதைப் பார்க்க முடிகிறது.

பெரும்பாலும் கணவனும் மனைவியும் வேலைக்குப் போவதால் அவர்கள் மட்டும் தனித்திருக்கும் சூழலில் இருவருக்குள்ளும் இணக்கமற்ற சூழலே நிலவுகிறது. சமையல் உள்ளிட்ட வீட்டு வேலைகள் தொடங்கி, குழந்தைகளை வளர்ப்பது வரை வேலைகளைப் பகிர்ந்துகொள்வதில் இருவருக்குள்ளும் பிரச்னை வருகிறது.

இந்தச் சூழலில் பெற்றோர் உடனிருந்தால், பல விஷயங்களையும் அவர்கள் பொறுப்பெடுத்துக் கொள்வார்கள். கணவனும் மனைவியும் டென்ஷன் இல்லாமல் வேலைக்குச் சென்று வரவும், கரியரில் கவனம் செலுத்தவும் வீட்டிலுள்ள பெரியவர்களின் சப்போர்ட் மிகப்பெரிய அளவில் உதவும்.

கடமை முடிந்ததெனப் பெற்றோர் ஒதுங்கக்கூடாது!

வீட்டில் பெரியவர்கள் இருந்தால், சுதந்திரம் இல்லை, பிரைவசி இல்லை, அந்நியோன்யம் பாதிக்கப்படுகிறது, எதற்கெடுத்தாலும் கேள்விகள் கேட்பார்கள் என்றெல்லாம் இளைஞர்கள் பல காரணங்களைச் சொல்லலாம். அதை முற்றிலும் மறுப்பதற்கில்லை.

அதே சமயம் பெரியவர்களைச் சுமையாகப் பார்க்க வேண்டியதும் தேவையில்லை. அளவுக்கதிக சுதந்திரத்தை எதிர்பார்ப்பதன் வெளிப்பாடுதான் இதெல்லாம். பெரும்பாலும் திருமணமான முதல் சில வருடங்களில்தான் கணவன்-மனைவிக்குள் நிறைய பிரச்னைகள், வாக்குவாதங்கள் வரும். சின்னச் சின்ன சண்டைகளைக்கூட ஊதிப் பெரிதாக்கிப் பேசுவதும் சண்டை போடுவதும் அடிக்கடி நடக்கும்.

எந்தப் பிரச்னைக்கும் எதிராளியைக் காரணம் சொல்லிப் பேசுவதால், அந்த வீட்டுச் சூழலில் நெகட்டிவ் அதிர்வலைகளே ஆக்கிரமிக்கும். இது ஒரு கட்டத்தில் பிரிவை நோக்கி இருவரையும் யோசிக்க வைக்கும். வீட்டில் பெரியவர்கள் இருந்தால், இருவருக்கும் மத்தியஸ்தம் பேசி, சமாதானம் செய்து வைப்பார்கள். சொந்த அனுபவங்களை உதாரணங்களாகச் சொல்லி, இருவருக்கும் அட்வைஸ் செய்வார்கள்.

marriage
marriage

சில வீடுகளில், மகனுக்கோ, மகளுக்கோ திருமணம் செய்து கொடுத்ததும் தங்கள் கடமை முடிந்துவிட்டதாக நினைத்து பெற்றோரே ஒதுங்கிக் கொள்வதும் நடக்கும். அந்தத் திருமண வாழ்க்கை வெற்றிகரமாகத் தொடர வேண்டும் என்பதை பெற்றோரும் விரும்ப வேண்டும்.

அந்த எண்ணம் வந்துவிட்டாலே, பிரச்னைக்குரிய விஷயங்களைப் பேச மாட்டார்கள். மகனைப் பெற்றவர்கள் மருமகளையோ, மகளைப் பெற்றவர்கள் மருமகனையோ குறை சொல்ல மாட்டார்கள். குற்றம் கண்டுபிடிக்க மாட்டார்கள். 

தாத்தா-பாட்டியிடம் வளரும் பிள்ளைகள்....

திருமணமான உடனே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்பதே இன்று பலரின் விருப்பமாகவும் இருக்கிறது. காரணம், குழந்தையை யார் பார்த்துக்கொள்வது என்ற கேள்வி. பெரியோரின் சப்போர்ட் இருக்கும்பட்சத்தில் குழந்தை பெற்றுக்கொள்வதைத் தள்ளிப்போட வேண்டிய தேவை வராது.

தாத்தா- பாட்டியிடம் வளரும் குழந்தைகள் உறவுகளின் மதிப்பு தெரிந்து வளர்வார்கள். பாதுகாப்பாக, ஆரோக்கியமாக வளர்வார்கள். அம்மா-அப்பாவை மதிக்கக் கற்றுக்கொள்வார்கள். பள்ளிக்கூடங்களோ, கட்டணம் கட்டிப் படிக்கும் வகுப்புகளோ சொல்லித் தராத பாரம்பர்யத்தை, கலாசாரத்தை, மதிப்பீடுகளை தாத்தா- பாட்டியே சொல்லித் தருவார்கள்.  

old age people
old age people

வேலைக்குப் போகாத மனைவிகளுக்குத் தனிமை என்பது பெருந்துயரம். வீட்டில் பெரியவர்கள் இருக்கும்போது அந்தத் தனிமை தரும் தொந்தரவுகளிலிருந்தும் தப்பிக்க முடியும். எல்லாவற்றையும் தாண்டி, எந்தப் பிரச்னையாக இருந்தாலும் அதிலிருந்து மீள்வதற்கான நம்பிக்கையைக் கொடுப்பவர்கள் பெரியவர்கள்தான்.

குழந்தை வளர்ப்பிலிருந்து, உறவுச் சிக்கல்கள் வரை எல்லாவற்றுக்கும் அவர்களிடம் இன்ஸ்டன்ட் தீர்வு இருக்கும். காரணம், அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை... அதில் பார்த்த அனுபவங்கள்... எனவே, ஆரம்ப வருடங்களில் பெரியவர்கள் சூழ வாழப் பழகுவதுதான் தம்பதியரின் இணக்கத்தை அதிகரிக்கும்... பிணைப்பை வலுப்படுத்தும்...'' என்கிறார் லட்சுமிபாய்.

ஐடா கீலிங்: 100-வது வயதில் உலகை வென்ற பெண்ணின் கதை; துயரங்களை முறியடித்த தடகளத் தாரகையைத் தெரியுமா?

ஒவ்வொரு நாள் தொடங்கும்போதும் நமக்குள் ஆயிரம் சோர்வுகள் இருக்கலாம். "இந்த வயதுக்கு மேல் என்னால் புதிதாக எதையாவது சாதிக்க முடியுமா?" என்ற சந்தேகம் எழலாம். ஆனால், அனைத்தையும் இழந்து, வாழவே வழியில்லை என ந... மேலும் பார்க்க

உலக சிட்டுக்குருவிகள் தினம்: ஏன் இவை நம்மை விட்டுப் பிரிந்தன? ஓர் அலசல்

மார்ச் 20 - உலக சிட்டுக்குருவிகள் தினம் (World Sparrow Day). சிறுவயதில் ஒவ்வொருவருக்கும் சிட்டுக்குருவிகளுடன் அழகான பிணைப்பு இருந்திருக்கும். காலையில் கடிகார அலாரங்களுக்குப் பதிலாக, வெளியில் இருந்து வ... மேலும் பார்க்க

முற்றத்து அடுப்பும்... டிம்பர் டிப்போ நினைவுகளும் - நிழலாடும் பால்யம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

திருமணம் தாண்டிய உறவுக்கான டேட்டிங் செயலியில் 40 லட்சம் இந்தியர்கள்; முதலிடம்? - தரவுகள் சொல்வதென்ன?

நவீன டிஜிட்டல் யுகத்தில், மனித உறவுகளின் எல்லைகளும் தேடல்களும் பெரும் மாற்றத்திற்கு உள்ளாகிவருகின்றன. ஒரு காலத்தில் சமூகக் கட்டுப்பாடுகளுக்குள் அடங்கியிருந்த தனிப்பட்ட விருப்பங்கள், இன்று தொழில்நுட்பத... மேலும் பார்க்க

கேஸ் தட்டுப்பாடு: 30 நாள் வரும் சிலிண்டரை 40 நாள்களுக்குப் பயன்படுத்த முடியும்! - சில டிப்ஸ்!

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலின் எதிரொலியாக உலகம் முழுக்க பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட... மேலும் பார்க்க