'இன்று ₹15 லட்சம்; 8 ஆண்டில் ₹28 லட்சம்' - கல்லூரிக் கட்டணத்திற்குத் திட்டமிடுவத...
திருவண்ணாமலை மாவட்டம் தென்னாங்கூர் பாண்டுரங்கன்: பண்டரிபுரம் சென்ற பலன்... திருமண வரம் கிடைக்கும்!
பகவான் விஷ்ணு பாண்டுரங்கனாகக் கோயில்கொண்டிருக்கும் தலம் பண்டரிபுரம். அந்தப் பண்டரிநாதன் தானே விரும்பி வந்து தென்னாட்டில் கோயில்கொண்ட தலம்தான் தென்னாங்கூர். காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில், வந்தவாசியிலிருந்து சுமார் 6 கி.மீ தூரத்திலும் காஞ்சிபுரத்திலிருந்து 35 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது தென்னாங்கூர்.
இந்தத் தலத்தில் பாண்டுரங்கன் கோயில்கொண்ட வரலாறு அற்புதமானது. ஹரிதாஸ்கிரி என்னும் மகான் வாழ்ந்துவந்தார். ஒருமுறை அவர் கனவில் தோன்றிய அவரின் குருநாதர், பண்டரிபுரம் செல்லுமாறும், அங்கே பாண்டுரங்கன் ஆலயத்தில் அவருக்குப் பாண்டுரங்கனின் விக்கிரகம் ஒன்று கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.
அதேபோல், பாண்டுரங்கன் கோயில் பண்டா (அர்ச்சகர்) கனவிலும் தோன்றிய குருநாதர், கோயிலுக்கு வரும் தம்முடைய சீடர் ஹரிதாஸ்கிரியிடம் பாண்டுரங்கனின் விக்கிரகத்தைத் தருமாறு உத்தரவிட்டார்.

அதேபோன்று ஹரிதாஸ்கிரி சுவாமிகள் பண்டரிபுரம் சென்றபோது அவரை வரவேற்ற பண்டா அவருக்குக் கனவில் கிடைத்த உத்தரவைத் தெரிவித்து ஒரு பாண்டுரங்கன் விக்ரகத்தையும் பரிசளித்தார்.
இதைத் தனக்குக் கிடைத்த மாபெரும் பேறாகக் கருதிய சுவாமிகள் விக்ரகத்தைப் பெற்றுக்கொண்டு அதோடு நாடெங்கும் யாத்திரை மேற்கொண்டு நாம சங்கீர்த்தனம் செய்து வந்தார்.
பிறகு, தென்னாங்கூரில் தம்முடைய குருநாதரை வழிபடுவதற்காக ஸ்ரீஞானானந்தகிரி பீடத்தையும், அங்கே குருநாதருக்கு ஒரு பிருந்தாவனமும் ஏற்படுத்தினார். மேலும், குருநாதரின் உத்தரவுப்படி அங்கே ரகுமாயி சமேதராக ஸ்ரீபாண்டுரங்கனுக்கு சந்நிதி ஏற்படுத்தினார்.
பண்டரிபுரத்தில் தனக்குக் கிடைத்த விக்கிரகத்தையும் வைத்து வழிபாடுகளும் நாமசங்கீர்த்தனமும் நடைபெற வழிவகை செய்தார்.
மேலும் கோகுலாஷ்டமியை ஒட்டி, பாகவத சப்தாஹமும், கோகுலாஷ்டமி விழாவும் நடத்தி வந்தார். அவருக்குப் பிறகு ஸ்ரீநாமானந்தகிரி சுவாமிகளும் அந்தத் திருப்பணியை ஏற்றார். அவரைத் தொடர்ந்து தற்போது ஸ்ரீநிரஞ்சனானந்த சுவாமிகள் தம்முடைய குருநாதர் வழிவகுத்துச் சென்றபடி விழாக்களையும் பூஜைகளையும் தொடர்ந்து வருகிறார்.
ஸ்ரீபாண்டுரங்கன் சந்நிதியில் ஆடி மாதம் வரும் ஆஷாட ஏகாதசி, கார்த்திகை ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி போன்ற விசேஷங்களுடன், கோகுலாஷ்டமியும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

கோகுலாஷ்டமி தினம் 4-வது நாளாக வரும்படி பாகவத சப்தாஹ பாராயணம் தொடங்குகிறது. சப்தாஹ பாராயணத்தின் 4-வது நாள் பாராயணம் ஸ்ரீகிருஷ்ணரின் அவதாரத்தைக் குறிப்பிடும் பகுதியாக அமைவது விசேஷம்.
அன்று இரவு முழுவதும் நாமசங்கீர்த்தனத்துடன் கோகுலாஷ்டமி விழா மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்படும். 9-வது நாள் ஸ்ரீகிருஷ்ணர் கோகுலத்துக்குச் சென்றதை நினைவுபடுத்துவதுபோல் விமர்சையான முறையில், உறியடி உற்சவம் போன்ற வைபவங்களுடன் விழா நடைபெறும்.
இந்தத்தலத்தின் தலவிருட்சமாக தமால விருட்சம் உள்ளது. பகவான் கிருஷ்ணர் தமால விருட்சத்தின் அடியில் நின்றுகொண்டுதான் புல்லாங்குழல் இசைத்ததாகவும், அந்த இசையில் ராதை லயித்ததாகவும் சொல்லப்படுகிறது. பொதுவாக வட இந்தியப் பகுதிகளில் மட்டுமே காணப்படும் தமால விருட்சம் இங்கே இருப்பது தனிச் சிறப்பு.
இங்கு சனிக்கிழமைகள் தவிர மற்ற நாள்களில் திருப்பதியைப் போலவே திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகின்றது. வைதீக சம்பிரதாயமும் பஜனை சம்பிரதாயமும் இணைந்து மிக அற்புதமாக நடைபெறுகிறது திருக்கல்யாண வைபவம். இப்படியான வைபவங்கள் மட்டுமின்றி, இந்தப் பீடத்தில் திகழும் வண்ண ஓவியங்களும் பக்தர்கள் தரிசித்து மகிழவேண்டிய கலைப் பொக்கிஷங்களாகும்!
இந்தப் பீடத்தில் பூரி ஜகந்நாதர் ஆலயத்தில் உள்ளது போன்றே கோபுரம் அமைந்திருக்கிறது. இந்தக் கோபுர தரிசனம் நமக்குப் பூரிக்குச் சென்ற புண்ணியத்தையும், இந்தப் பீடத்தில் அருள்மிகு ரகுமாயி சமேதராகக் காட்சி தரும் பாண்டுரங்கன் தரிசனம் நமக்குப் பண்டரிபுரம் சென்ற புண்ணியத்தையும் ஒருசேரத் தருகின்றன.

இந்தப் பீடத்தில் பாண்டுரங்கன் ஞாயிற்றுக்கிழமைகளில் மதுராபுரி ஆளும் மன்னனின் அலங்காரத்திலும், வியாழன் அன்று பக்தர்களுக்கு ஸ்ரீபாத தரிசனம் அருளும் வகையில் எளிய அலங்காரத்திலும், வெள்ளியன்று வெள்ளிக் கவசம் அணிந்தும், சனிக்கிழமைகளில் திருப்பதி பெருமாளைப் போலவும் தரிசனம் அருள்கிறார்.
யந்திர வழிபாட்டின் அடிப்படையான ஸ்ரீசக்ர அதிதேவதைகள் அனைத்தும் இங்கு இருப்பது விசேஷம். இறைவனுக்கு நாமசங்கீர்த்தனம் (பக்திப் பாடல்) மூலம் வழிபாடு செய்யப்படுவது, இத்தலத்தின் தனிச் சிறப்பம்சம்.
தென்னாங்கூரில் சுவாமி ஹரிதாஸ்கிரி சுவாமிகளால் பாண்டுரங்கன் ஆலயம் சிறப்பாகக் கட்டப்பட்டுள்ளது. அந்த ஆலயத்தில் `சாகேத விருட்சம்' என்னும் ஒரு விருட்சம் உள்ளது. சுவாமி ஹரிதாஸ்கிரி குஜராத்தில் உள்ள துவாரகாவிலிருந்து இந்த மரத்தின் கிளையினைக் கொண்டு வந்து இங்கு நட்டுவைத்தார்.
துவாரகாவில் இருக்கும் சாகேத விருட்சத்தின் கீழ் நின்றுதான் ருக்மிணி தன் காதல் வெற்றி பெறவேண்டும் என்று வேண்டிக்கொண்டு கண்ணனை அடைந்தாள். கண்ணன் அந்த மரத்தின் கீழ் இருந்துதான் குழல் ஊதுவானாம். அந்த மரத்தின் அடியில் நின்று வேண்டிக்கொண்டால் காதல் கைகூடும் என்பது நம்பிக்கை.
எப்போதும் குடைபோலவே வளர்ந்து நிழல் பரப்பும் அந்த மரத்தின் ஒரு கிளையே இந்தக் கோயிலில் நட்டு வளரச் செய்திருப்பதால், இந்த மரமும் துவாரகையின் சாகேத மரத்தைப் போலவே மனமொருமித்த காதலர்களைத் திருமணப் பந்தத்தில் இணைத்து வைக்கும் சிறப்பினைப் பெற்றிருக்கிறது என்று சொல்கிறார்கள்.
வாய்ப்பிருப்பவர்கள் ஒருமுறை தென்னாங்கூர் சென்று பாண்டுரங்கனை தரிசனம் செய்துவாருங்கள். வாழ்வில் நன்மைகள் பலவும் கூடிவரும்.



















