நிதி ஆயோக் கூட்டம்: `ஆக்கப்பூர்வ ஒத்துழைப்பு டு நீட் எதிர்ப்பு...' - முதல்வர் வி...
திருச்செந்தூர்: கடற்கரையில் ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்; பக்தர்கள் பாதுகாப்பாக நீராட அறிவுறுத்தல்!
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை மற்றும் விசேச நாள்களில் ஆயிரக் கணக்கான பக்தர்களும் இங்குள்ள கடலில் புனித நீராடிவிட்டு முருகப் பெருமானைத் தரிசனம் செய்வது வழக்கம். சுவாமி தரிசனத்திற்குப் பிறகு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடற்கரையில் அமர்ந்து காற்று வாங்கி ஆசுவாசப்படுத்தியும், கடல் அலையில் காலை நனைத்து விளையாடியும் பொழுதைக் கழிக்கின்றனர்.

பொதுவாகக் கடற்கரையிலிருந்து சில மைல் தூரத்தைக் கடந்துதான் மீன்கள், நண்டுகள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அலை அதிகம் வீசியோ, காலநிலை மாற்றத்தால் திசைமாறியோ அவை கரைக்கு வரும். பிறகு மீண்டும் கடலுக்குள் சென்றுவிடும். சுறா போன்ற பெரிய மீன்கள் படகுகளில் மோதி இறந்தால் கரை ஒதுங்கும்.
இந்த நிலையில், காலநிலை மாற்றத்தினால் தற்போது தமிழ் மாதங்களில் பௌர்ணமி, அமாவாசை போன்ற நாள்களில் கடல் நீர் மட்டத்தில் மாறுபாடு ஏற்படுகிறது. அந்த நாள்களிலோ அல்லது அதன் பின்வரும் நாள்களிலோ, கடல் நீர் மட்டம் குறைந்து சில மீட்டர் தூரம் உள்வாங்கிக் காணப்பட்டும் வருகிறது. அப்போது பாசி படர்ந்த பாறைகள் வெளியே தென்படும்.

அடுத்த சில நாள்களில் கடல் மீண்டும் இயல்புநிலைக்கு வந்துவிடும். இதே காலநிலை மாற்றத்தால் ஆழ்கடலில் காணப்படும் ஜெல்லி வகை மீன்கள், தற்போது திருக்கோயில் கடலின் கரையோரம் ஒதுங்கி வருகின்றன. கடல் நீரோட்டங்களில் ஏற்படும் மாற்றங்களும் ஜெல்லி மீன்கள் கரையோர பகுதிகளுக்கு அதிகளவில் வருவதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இந்த நிலையில், ஜெல்லி மீன்கள் கடற்கரையில் கடந்த 2 நாட்களாக கரை ஒதுங்கி வருகின்றன.
இவ்வகை ஜெல்லி மீன்கள், பார்ப்பதற்கு வழுவழுப்பான நுங்கு வடிவிலோ, கண்ணாடி நூலிழையைப் போலவோ, பாலீத்தின் தாளைப் போலவோ இருப்பதால் அதனைப் பஞ்சு எனவும், ஒருவகை கடல்பாசி எனவும் நினைத்து பக்தர்கள் அதிலும் குறிப்பாக சிறுவர், சிறுமியர் தெரியாமல் அதனைத் தொட்டு விடுகின்றனர். இன்று கடலில் நீராடிக்கொண்டிருந்த 10-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு உடலில் அரிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோர பாதுகாப்பு பணியாளர்கள் கடலில் மிதந்து வந்த ஜெல்லி மீன்களை சேகரித்து, பக்தர்கள் குளிக்காத ஆழமான கடல் பகுதிகளில் கொண்டு சென்று விட்டனர். மேலும், கடலில் நீராடும் பக்தர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும், ஜெல்லி மீன்கள் தென்பட்டால் உடனடியாக கரைக்கு வந்துவிட வேண்டும், எக்காரணம் கொண்டும் கையால் தொடக்கூடாது எனவும் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.


















