சபரிமலை: தடிமனாகப் பூசிய தங்கத்தைத் திருடிவிட்டு மெலிதாகப் பூசி மோசடி; ஆய்வக சோத...
கரூர் மாவட்டம், தொப்பேஸ்வரர் கோயில்: கால்நடைச் செல்வங்கள் பெருகும்... தொழில் மேன்மையுறும்!
மலை மீது கோயில் கொண்டிருக்கும் ஈசனின் சந்நிதிகள் சாந்நித்தியம் நிறைந்தவை. எனவேதான் கடும்பாடுபட்டு பக்தர்கள் மலையேறி சுவாமியைத் தரிசனம் செய்கிறார்கள். அதன் மூலம் புத்துணர்ச்சி பெறுவதோடு ஆரோக்கியமும் அடைகிறார்கள்.
அப்படி பக்தர்கள் மனம் கவர்ந்த மலைக்கோயில்களில் ஒன்று கரூர் தொப்பையசாமி திருக்கோயில்.
கரூர் மாவட்டம், கடவூர் சென்று அங்கிருந்து மலையேறலாம். ஆண்டி ஊத்து வழி, கோட்டைக்கரை வழி என இரண்டு வழிகள் இதற்கு உண்டு. ஆண்டிஊத்து வழி சற்றுக் கடினமானது. வயதானவர்கள் கோட்டைக்கரை வழியைத் தேர்ந்தெடுப்பதே சிறப்பு.
இம்மலையை அடைய திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்தும் ஓர் வழி உள்ளது. அதாவது திண்டுக்கல் மாவட்டத்தில் குஜிலியம்பாறை ஒன்றியத்தில் உள்ள பிள்ளைக்காபட்டி வழி, கோம்பை வழியாக செல்லும் வழி என இரண்டு வழிகளைப் பயன்படுத்தலாம் என்கிறார்கள்.

வழிகள் மட்டுமல்ல இந்த ஆலயமுமே இரண்டு மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது என்றால் நம்ம முடியுமா? ஆம், சுவாமி சந்நிதி இருக்கும் இடம் திண்டுக்கல் மாவட்ட எல்லை. எதிரில் ஒன்றரை மீட்டர் தூரத்தில் - தீபஸ்தம்பமும் நந்தியும் இருக்கும் இடம் கரூர் மாவட்ட எல்லை. ஆக இரண்டு மாவட்டங்களில் எல்லையில் தொப்பேஸ்வரர் குடியிருக்கிறார்.
மலையின் உச்சியில் சுயம்புவாகத் தோன்றி அருள்பாலிக்கிறார் ஈசன். சுற்றிலும் மலைக்கற்களையே அரண் போல் அடுக்கி வைத்திருக்கிறார்கள் பக்தர்கள். லிங்கத் திருமேனிக்குச் செம்பினால் கவசம் செய்து அணிவித்திருக்கிறார்கள்.
உற்றுநோக்கினால் லிங்க மேனியில் பசுவின் கால்குளம்பு பதிந்ததுபோன்ற தடத்தைக் காணலாம். சந்நிதியின் எதிரில் தீப ஸ்தம்பமும் சிறியளவிலான நந்தி சிலையும் உள்ளன. அருகிலேயே உள்ள மரத்தில், வேண்டுதலின் பொருட்டு பக்தர்கள் கட்டிவைத்தத் தொட்டில்கள் தொங்குகின்றன.
தொப்பேஸ்வரருக்குப் பக்தர்களே அபிஷேக ஆராதனைகள் செய்யலாம். ஆரம்பத்தில் இந்தப் பகுதிக்கு ஆட்கள் வருவது மிகவும் அபூர்வம். ஆடு-மாடு மேய்ப்பவர்கள் மட்டுமே இந்த மலை வரைக்கும் வருவார்கள். இந்தத் தொப்பேஸ்வரரை வணங்கினால் கால்நடைச் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. கடந்த பத்து வருடங்களில் இந்தக் கோயில் பலருக்கும் தெரிய வர, ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
இந்தத் தலத்தில் ஈசன் கோயில்கொண்ட நிகழ்வு அற்புதமானது. முன்னொரு காலத்தில் மல்லைய நாயக்கர் என்பவர் மலைப்பகுதிக்கு ஆடுமாடுகளை மேய்ச்சலுக்கு இட்டுச்செல்வார். ஒருமுறை வீட்டுக்கு வந்து மாடுகளைக் கொட்டடியில் அடைக்கும்போதுதான் கவனித்தார்... கன்று ஈனாத பசு ஒன்றைமட்டும் காணவில்லை. விடிந்ததும் தேடிப்பார்க்கவேண்டும் என்ற முடிவோடு படுக்கச் சென்றுவிட்டார்.

ஆனால், விடிந்ததும் பார்த்தால் கொட்டடியில் அந்தப் பசு படுத்திருந்தது. இதே சம்பவம் அடுத்தடுத்த நாளும் தொடர்ந்ததாம். ஒருநாள் மேய்ச்சல் முடிந்து திரும்பும்போது, கூட்டத்திலிருந்து நழுவிய பசுவைப் பின்தொடர்ந்து சென்றுள்ளார். அந்தப் பசு மலையடிவாரத்தில் ஓரிடத்தில் சூரப்புதர் அருகே சென்று, தாமாகவே பால் சொறிந்ததாம்.
கன்று ஈனாத பசு பால் சொறிவதைக் கண்டு மல்லைய நாயக்கர் திகைத்துப் போனார். அவர் அதை நெருங்கிய போது, ஆள் அரவம் கேட்டு மிரண்ட பசு காலை ஒருமுறை உதைத்தபடி அங்கிருந்து விலகி ஓடியதாம்.
புதரை நெருங்கிய மல்லைய நாயக்கர், புதரின் மையத்தில் ஒரு லிங்கத்தைக் கண்டார். அதன் மீதுதான் பசு பால் சொறிந்திருக்கிறது என்பது புரிந்தது. ஆனால், பால் முழுவதையும் தன்னுள் உறிஞ்சியிருந்தது அந்தச் சிவலிங்கம். மட்டுமன்றி பசு உதைத்துவிட்டுச் சென்றது அல்லவா?
லிங்க மேனியில் பசுவின் காலடிக் குளம்பு பட்ட இடத்தில் ரத்தம் பீறிட்டுக் கொண்டிருந்ததாம். அடுத்த கணம், அந்த லிங்கம் அங்கிருந்து விலகி மலையின் உச்சிக்குச் சென்றதாக உணர்ந்தார் மல்லைய நாயக்கர். பதற்றமும் பயமும் சேர்ந்து கொள்ள, தன் தம்பி இளைய மல்லைய நாயக்கரை அழைத்துக்கொண்டு உச்சிக்குச் சென்றார்.
மூவரும் தங்கள் பிழை பொறுக்குமாறு ஈசனிடம் வேண்டினர். ஈசனே தாங்களும் இங்கேயே கல்லாகி உம்முடன் வாசம் செய்ய விரும்புகிறோம் என்று சொன்னார்களாம். ஈசன் அவர்களை மன்னித்து எந்நாளும் அவர்கள் தன்னோடு இருக்க வரம் தந்தார். அவர்கள் கல்லாக மாறிவிட்டனர் என்கிறது தலவரலாறு.

சிவராத்திரி அன்று பாலில் அவித்த பயிர் வகைகளை சிவனுக்குப் படைக்கிறார்கள். அன்றைய தினத்தில், கல்லாக சமைந்து போன முன்னோர் வாழ்ந்த வீட்டில் பூஜை செய்துவிட்டே மலையேறுகிறார்கள் அந்தப் பரம்பரையினர்.
அதேபோல், சிவராத்திரி பூஜையையொட்டி தொப்பேஸ்வரர் சந்நிதி அருகில் உள்ள அவர்களின் முன்னோரான பெரிய மல்லைய நாயக்கர், சின்ன மல்லைய நாயக்கர் சிலைகளுக்கும் பூஜை செய்கிறார்கள். இப்படிப் பலவளமும் நலமும் அருளும் தொப்பேஸ்வரரை வாய்ப்பிருப்பவர்கள் தரிசித்து வாருங்கள்.





















