மாணவர்கள் கையில் கயிறு: "இந்தச் சமூகத்திற்கு இந்தக் கலர் எனத் தூண்டிவிடுகிறார்கள...
கும்பகோணம் பிளாஞ்சேரி கயிலாசநாதர் கோயில்: அச்சம் அகற்றும் அஷ்டபைரவர்; சரபசூலினி சந்நிதிகள்!
ஒரு சிலருக்குத் தீராத நடுக்கமும் பயமும் உள்ளூர இருந்துகொண்டே இருக்கும். ஒரு சிலர் பகைவர்களின் தொல்லைகளால் கஷ்டப்படுவார்கள். அப்படிப்பட்டவர்கள் வழிபாடு செய்ய வேண்டியது அஷ்ட பைரவர்களை.
மேலும் தீராத வினைகளையும் தீர்த்துவைக்கும் சக்தியாக விளங்குபவள் சரபசூலினி. அஷ்ட பைரவர்களும் சரப சூலினியும் அருளும் தலம் ஒன்று தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ளது. இங்கு வந்து வெளிபட்டால் வாழ்வில் வெற்றிகள் கூடும் என்கிறார்கள். வாருங்கள் அத்தலம் குறித்து அறிந்துகொள்வோம்.
கும்பகோணம் அருகிலுள்ள திருநாகேஸ்வரத்திலிருந்து வடக்கே சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பிளாஞ்சேரிதான் அந்தத் தலம். இங்குள்ள கயிலாசநாதர் கோயிலில்தான் அஷ்ட பைரவர்களும் சரபசூலினியும் குடிக்கொண்டிருக்கிறாள்.

பிரளய காலத்தில் ஈசன், சப்த ரிஷிகளை அழைத்து தவம் மேற்கொள்ளும்படி கூறினார். அப்போது, அத்ரி மகரிஷியின் மகனான பிராச முனிவர், தாமும் சப்தரிஷிகளோடு சேர்ந்து தவமியற்ற விரும்பினார். ஆனால் ஈசன், அவரின் முன்வினைகள் முழுவதும் தீரவில்லை என்பதால், அவர் தவமியற்ற அனுமதிக்கவில்லை.
மேலும் `பிராச வனஞ்சேரி’ என்ற பகுதிக்குச் சென்று, அந்தத் தலத்திலுள்ள காமாட்சி அம்மன் சமேத கயிலாசநாதரை வழிபடும்படி அருள்பாலித்தார். அத்துடன், அந்தத் தலத்தில் சரப சூலினியைப் பிரதிஷ்டை செய்து, தொடர்ந்து ஆயிரம் பௌர்ணமிகள் ஜயமங்களா யாகம் செய்து முடித்தால், முனிவரின் முன்வினைகள் முழுவதும் நீங்கும்; சப்தரிஷிகளுக்கும் மேலான பதவியை அடையலாம் என்றும் அருளினார்.
அதன்படி இந்தத் தலத்துக்கு வந்து, பதினெட்டு திருக்கரங்களுடன் கூடிய சரப சூலினியைப் பிரதிஷ்டை செய்து, ஆயிரம் ஜயமங்களா யாகம் செய்து வழிபட்டார் முனிவர். அதன் பலனாக அவரின் முன்வினைகள் நீங்கின. சப்த ரிஷிகளுக்கும் மேலானவராகத் திகழும் பெரும்பேறும் கிடைத்து.
ஸ்ரீசரபமூர்த்தியின் வலப்புற இறக்கையிலிருந்து தோன்றியவளே ஸ்ரீசரப சூலினி. இந்தத் தலத்தில் ஸ்ரீசரப சூலினிக்குக் காவலாக எட்டு பைரவர்கள் தனித் தனிச் சந்நிதிகளில் காட்சி தருகிறார்கள். சரப சூலினியையும் அஷ்ட பைரவர்களையும் வழிபட்டால், எட்டுவிதமான பேறுகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
அன்ன வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் அசிதாங்க பைரவர் நான்கு திருக்கரங்களோடு அருள்கிறார். ஜாதகத்தில் சந்திர திசை, சந்திர புக்தி நடைபெறும் அன்பர்களும் ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரக்காரர்களும் வழிபடவேண்டிய பைரவர் இவர்.

ரிஷப வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர் குரு பைரவர். சூரிய திசை, சூரிய புக்தி நடைபெறும் ஜாதகர்களும் கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபடவேண்டிய பைரவர் இவர்.
மயில் வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர் சண்ட பைரவர். செவ்வாய் திசை, செவ்வாய் புக்தி நடைபெறும் ஜாதகர்களும் அவிட்டம், மிருகசீரிடம், சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபடவேண்டிய பைரவர்.
கருட வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர் குரோதன பைரவர். புதன் திசை, புதன் புக்தி நடைபெறும் ஜாதகர்களும் ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபட வேண்டிய பைரவர்.
குதிரை வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர் உன்மத்த பைரவர். கேது திசை, கேது புக்தி நடைபெறும் ஜாதகர்களும் அசுவினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபட வேண்டிய பைரவர்.
யானை வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர் கபால பைரவர். நான்கு திருக்கரங்களுடன் திகழ்பவர். சுக்கிர திசை, சுக்கிர புக்தி நடைபெறும் ஜாதகர்களும் பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபட வேண்டி மூர்த்தி இவர்.
சிம்ம வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர் பீஷண பைரவர். நான்கு திருக்கரங்களோடு அருள்கிறார். குரு திசை, குரு புக்தி நடைபெறும் ஜாதகர்களும் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபட வேண்டிய பைரவர்.

நாய் வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர் சம்ஹார பைரவர். பத்து திருக்கரங்களைக் கொண்டவர். சனி திசை - சனி புக்தி மற்றும் ராகு திசை - ராகு புத்தி நடைபெறும் ஜாதகர்களும் பூசம், அனுஷம், உத்திரட்டாதி, திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரக்காரர்களும் வழிபட வேண்டிய பைரவர் இவர்.
பெளர்ணமிதோறும் மாலை ஐந்து மணியளவில் ஜய மங்களா மகா யாகம் இங்கே நடைபெறும். அப்போது, பிராச முனிவரும் சூட்சும வடிவில் வந்து அம்பிகையை வழிபடுவதாக ஐதிகம். பக்தர்கள் தாங்கள் தொடங்கும் காரியங்கள் தொடர்பாக அம்பிகை சரப சூலினியின் உத்தரவு கேட்க வருவார்கள்.
அவர்கள் கொண்டு வரும் எலுமிச்சைப்பழம் அம்பிகையின் திருமுடியில் வைக்கப்படும். `காரியத்தைத் தொடங்கலாம்’ என்பது அன்னையின் சித்தமானால், அந்த எலுமிச்சை அம்பிகையின் திருமுடியிலிருந்து தானாகவே இறங்கி விழுவது, இத்தலத்துக்கே உரிய அற்புதமாகும்.
அதேபோல், இங்கு நடைபெறும் ஜயமங்களா யாகத்தில் கலந்து கொண்டால் திருஷ்டி தோஷங்கள் அகலும், திருமணத்தடை நீங்கி மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையும், வம்ச விருத்தி உண்டாகும், இழந்த பதவிகளை மீண்டும் பெறலாம், வழக்குகள் சாதகமாகும்.
இத்தகைய சிறப்புகள் மிகுந்த பிளாஞ்சேரி தலத்துக்கு நீங்களும் ஒருமுறை சென்று வாருங்கள். உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி வளமான வாழ்வைப் பெறுவீர்கள்.


















